இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின்பாலி, சூரி மற்றும் அஞ்சலி நடிப்பில் உருவாகியுள்ள ஏழு கடல் ஏழு மலை திரைப்படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்வு சென்னை தரமணியில் உள்ள எம்ஜிஆர் திரைப்பட கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் ஏராளமான திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அனுபவங்கள்
இயக்குநர் ராமின் மீதுள்ள ஈர்ப்பின் காரணமாகவே இப்படத்தைத் தயாரிக்க முன்வந்ததாகத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்தார். தரமணி படத்தின் போது தொடங்கிய இந்தக் கூட்டணி, பல்வேறு தடைகளைக் தாண்டி தற்போது ஏழு கடல் ஏழு மலை படமாக உருவெடுத்துள்ளது என்றார். நிவின்பாலி மற்றும் சூரி போன்ற முன்னணி நடிகர்களின் பங்களிப்புடன், யுவன் சங்கர் ராஜாவின் இசையில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தைத் தரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். மேலும், இப்படம் பல்வேறு நிறுவனங்கள் மூலம் கேரளா, கர்நாடகா, தெலுங்கு மற்றும் ஓவர்சீஸ் உள்ளிட்ட பல பகுதிகளில் வெளியிடப்பட உள்ளதாகக் குறிப்பிட்டார்.
திரையுலக பிரபலங்களின் வாழ்த்துகள் மற்றும் கருத்துகள்
இந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய பாடலாசிரியர் மதன் கார்க்கி, இயக்குநர் ராம் மற்றும் நா.முத்துக்குமார் இடையேயான நட்பையும், ராம் படங்களில் இயற்கையும் பஞ்சபூதங்களும் இடம்பெறும் வித்தையையும் சிலாகித்துப் பேசினார். இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி, யுவன் சங்கர் ராஜாவுடன் தனக்கிருக்கும் குரு பக்தி மற்றும் இசையுலகப் பயணத்தைப் பகிர்ந்து கொண்டார். பாடலாசிரியர் மதி புகழேந்தி அகரம் பவுண்டேஷன் வழியே வந்து இயக்குநர் ராமிடம் உதவியாளராகப் பணிபுரிந்து தற்போது பாடல் எழுதியுள்ள தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.
இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில், பாலுமகேந்திராமுடன் தான் இருந்தபோது இயக்குநர் ராமைப் பற்றி அவர் மிகுந்த உணர்ச்சிவசப்பட்டுப் பாராட்டியதை நினைவுகூர்ந்ததோடு, ராம் மற்றும் தங்கவேலன் ஆகியோரின் கதை சொல்லும் முறையைக் கண்டு தனக்கு ஏக்கம் ஏற்பட்டதாகவும், கற்றது தமிழ் தொடங்கி தற்போது ஏழு கடல் ஏழு மலை வரை ராமின் ஆளுமையும் அவரது கதைகளும் தொடர்ந்து பரிணாம வளர்ச்சி அடைந்து வருவதாகவும், இப்படத்தில் கதையை எளிய முறையில் ரசிகர்களுக்கு நேரிடையாக உணர்ச்சிகள் சேரும் வகையில் அவர் உருவாக்கியுள்ளதோடு மனிதர்களின் ஒலியும் மற்ற உயிரினங்களின் ஒலியும் இணைந்து ஒலிப்பது இப்படத்தின் மிகச் சிறப்பான அம்சம் என்றும் குறிப்பிட்டார்.
இயக்குநர் பார்த்திபன் பேசுகையில், சூரியின் கடின உழைப்பையும், இயக்குநர் ராமின் தனித்துவமான சினிமா பார்வையையும் பாராட்டிப் பேசினார். வெற்றிமாறன் பேசுகையில், பாலுமகேந்திரா காலத்தில் தொடங்கிய ராமின் சினிமா பயணம், கற்றது தமிழ் தொடங்கி தற்போது ஏழு கடல் ஏழு மலை வரை எவ்வாறு பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை விவரித்தார். மனிதர்களின் ஒலியும் மற்ற உயிரினங்களின் ஒலியும் இணைந்து ஒலிக்கக் கூடிய ஒரு சிறப்பான படைப்பாக இப்படம் இருக்கும் என்றார்.
நடிகர்களின் பகிர்வுகள்
நடிகை அஞ்சலி பேசுகையில், ஏழு கடல் ஏழுமலை தன் சினிமா பயணத்தில் ஒரு லார்ஜர் தன் லைஃப் அனுபவத்தைத் தந்துள்ளது என்றும், நிவின்பாலியுடன் போட்டியிட்டு நடித்தது ஆரோக்கியமான சவாலாக இருந்தது என்றும் தெரிவித்தார். இப்படத்தில் தன்னுடன் நடித்த எலியும் ஒரு முக்கியமான சக நடிகர் என்று அவர் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
நடிகர் சூரி பேசுகையில், ராம் இயக்கத்தில் நடிக்கும் போது தனக்கிருந்த ஆரம்ப பயம் எப்படி மாறியது என்பதையும், ஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குநர் ஒவ்வொரு இயக்கத்திற்கும் (மழை, காற்று, எலி என) வைக்கும் ஆர்டர்களை கலகலப்புடன் பகிர்ந்து கொண்டார்.
நிவின்பாலி பேசுகையில், தமிழ் சினிமாவுக்கு மீண்டும் வருவதில் மிகுந்த மகிழ்ச்சி அடவதாகவும், ரசிகர்களின் அன்பிற்காக நல்ல படங்களை வழங்குவதே தன் நோக்கம் என்றும் கூறினார்.
இயக்குநர் ராமின் பகிர்வு
நிகழ்ச்சியின் நிறைவாகப் பேசிய இயக்குநர் ராம், எலியோ மரமோ புல்லோ எல்லாமே உயிர் தான் என்பதை மையமாகக் கொண்டுதான் இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது என்றார். யுவன் சங்கர் ராஜாவுடன் தனக்கிருக்கும் நட்பு வெறும் இசையமைப்பாளர் தாண்டிய ஆழமான நலம் விரும்பிகளின் உறவு என்பதை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். அக்டோபர் 1 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் இப்படத்திற்குப் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.