தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள் சங்கத்தின் 2026-28 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா சென்னையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. தமிழக பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சரான திரு. ராஜ்மோகன் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
ஒரு திரைப்படத்தின் தொடக்கப் புள்ளி முதல், அத்திரைப்படம் முழுமையாகத் தயாராகி, அது குறித்த தகவல்களை ஊடகங்கள் வாயிலாக மக்களுக்கும் ரசிகர்களுக்கும் கொண்டு சேர்ப்பதில் பத்திரிகை தொடர்பாளர்களின் பங்கு மகத்தானது. சமூக வலைதளங்களின் ஆதிக்கம் பெருகியுள்ள இன்றைய சூழலில், டிஜிட்டல் தள செய்திகள் மற்றும் சமூக வலைதள விமர்சனங்களைச் சரியாகக் கையாண்டு, திரைப்படங்களை முறையாக ஆவணப்படுத்தும் பெரும்பணியைச் செய்யும் இச்சங்கத்தின் புதிய தலைவராக பி. யுவராஜ், செயலாளராக என். விஜய முரளி, பொருளாளராக வீ. கே. சுந்தர் ஆகியோர் பொறுப்பேற்றுக்கொண்டனர். மேலும், துணைத் தலைவர்களாக எஸ். புவனேந்திரன் மற்றும் எஸ். சதீஷ்குமார், இணைச் செயலாளர்களாக பாலன் என்கிற ஜி. பாலசுப்பிரமணியன் மற்றும் ஆர். உதயகுமார் ஆகியோரும் பதவியேற்றனர்.
இந்த விழாவில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சங்கம், இயக்குநர்கள் சங்கம், எழுத்தாளர்கள் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். மேலும் நடிகர்கள் அர்ஜுன் தாஸ், அசோக் செல்வன், தயாரிப்பாளரும் இயக்குநருமான சௌந்தர்யா ரஜினிகாந்த், தயாரிப்பாளர்கள் மகேஷ் ராஜ் பஸ்லியான், ஜே. எம். பஷீர் உள்ளிட்ட ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்குத் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
விழாவில் பேசிய தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ஜி.கே.எம். தமிழ்க்குமரன், திரைப்படத் துறையில் பி.ஆர்.ஓ சங்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். தொடர்ந்து தமிழக அரசுக்குக் கோரிக்கைகளை முன்வைத்த அவர், தயாரிப்பாளர் சங்கத்திற்கு எனச் சொந்தமாக அலுவலகம் இல்லை என்றும், அரசு அதற்கான இடத்தை வழங்கினால் கட்டிடத்தைத் தாங்களே கட்டிக்கொள்வதாகவும் தெரிவித்தார். மேலும், 2015 முதல் 2022 ஆம் ஆண்டு வரை சிறிய முதலீட்டுத் திரைப்படங்களுக்குத் தமிழக அரசு வழங்க வேண்டிய நிலுவையில் உள்ள மானியங்களை விரைந்து வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து சிறப்புரையாற்றிய அமைச்சர் ராஜ்மோகன், திரைத்துறையினரின் உழைப்பையும் அர்ப்பணிப்பையும் சிலாகித்துப் பேசினார். தான் எஃப்.எம் மற்றும் யூடியூப் சேனல்களில் பணியாற்றிய காலங்களில் தனக்கு உறுதுணையாக இருந்த பத்திரிகை தொடர்பாளர்களின் நட்பை நினைவுகூர்ந்த அவர், சினிமாவில் ஒவ்வொரு துறையினரும் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என்பதை விளக்கினார்.
சினிமாவில் தன் தலையை அடமானம் வைத்து முதலீடு செய்யும் தயாரிப்பாளர்கள் தான் முதலாளிகள். இசையமைப்பாளர்கள், பாடகர்கள், பாடலாசிரியர்கள் ஆகியோர் தமிழ் சினிமாவின் கைகள் என்றால், ஃபைட் மற்றும் டான்ஸ் மாஸ்டர்கள் ரத்தத்தை வியர்வையாகச் சிந்தும் கால்கள். ஆயிரக்கணக்கானோருக்கு உணவளிக்கும் புரொடக்ஷன் துறை வயிற்றைப் போன்றது. முகம் தெரியாத நாயகர்களாக, படத்திற்காக ஓடிக்கொண்டே இருக்கும் பி.ஆர்.ஓ-க்கள் தான் நாடி நரம்புகளாக ஓடிக்கொண்டிருக்கும் ரத்தம். தங்கள் இதயத்தைப் பற்றிக் கவலைப்படாமல் நல்ல படங்களைக் கொடுக்க உழைக்கும் இயக்குநர்கள் இதயம் என்றால், மேக்கப் துறை அதற்கான அழகான சருமம். ஒட்டுமொத்த சினிமாவுக்கும் ஆக்சிஜனாகத் துணை இயக்குநர்கள் இயங்குகிறார்கள் என்று நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டார்.
அத்துடன் திரைத்துறைக்கு மகிழ்ச்சியளிக்கும் பல முக்கிய அறிவிப்புகளையும் அமைச்சர் வெளியிட்டார். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்குவது விருது அல்ல என்று சுட்டிக்காட்டிய அவர், மாண்புமிகு தமிழக முதல்வரின் அனுமதியைப் பெற்று, இனி வெள்ளித்திரை, சின்னத்திரை மற்றும் தமிழ் திரை விருதுகள் ஆண்டுதோறும் தொடர்ந்து வழங்கப்படும் என்று அறிவித்தார். அதேபோல, நிலுவையில் உள்ள திரைப்பட மானியங்களை எவ்விதத் தாமதமும் இன்றி விரைந்து வழங்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
படப்பிடிப்புத் தளங்களில் அனுமதிக்காக மேனேஜர்களோ அல்லது பி.ஆர்.ஓ-க்களோ இனி யாருக்கும் பணம் கொடுக்க வேண்டியதில்லை என்றும், வெளிப்படைத் தன்மையுடன் அரசு இயங்குவதாகவும் அமைச்சர் ராஜ்மோகன் உறுதிபடத் தெரிவித்தார். முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவில் திரைத்துறையினர் வழங்கிய ஓய்வில்லாத உழைப்பைப் பாராட்டிய அவர், நடிகர் முத்துக்காளை மனைவிக்கு அளித்த மருத்துவ உதவி, பாவா லட்சுமணனுக்கு எம்.எல்.ஏ விடுதியில் தங்குமிடம் வழங்கியது, மறைந்த இயக்குநர்கள் பாரதிராஜா மற்றும் பாக்யராஜ் ஆகியோருக்கு முழு அரசு மரியாதை அளித்தது போன்ற அரசின் அக்கறையான செயல்பாடுகளையும் நினைவுகூர்ந்தார்.
மேலும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சராகத் தான் முன்னெடுத்துள்ள சிறப்பான திட்டமொன்றையும் அவர் பகிர்ந்துகொண்டார். அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்காகச் சென்னை ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் உலகத் திரைப்படங்களைத் திரையிட்டு, அக்குழந்தைகளின் முகங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிகழ்வைக் குறிப்பிட்ட அமைச்சர், இந்த முன்னெடுப்பு இனி மாதந்தோறும் தொடரும் என்றார்.
தனக்கு அளிக்கப்பட்ட பொறுப்புகளை நேர்மையாகச் செய்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், திரையுலகினரின் அனைத்துக் கோரிக்கைகளையும் மாண்புமிகு தமிழக முதல்வரின் கவனத்திற்கு முழுமையாகக் கொண்டு சென்று உரியத் தீர்வுகளைப் பெற்றுத் தருவேன் என்று உறுதியளித்துத் தனது உரையை நிறைவு செய்தார்.