AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

எச்.ராஜா மீது தாமாக முன் வந்து வழக்குப் பதிவு ஏன்? ஐகோர்ட் விளக்கம்!

By admin | Sep 17, 2018

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா போலீஸ் அதிகாரிகள் மற்றும் ஐகோர்ட்டை விமர்சித்து பேசியதைத் தொடர்ந்து திருமயம் போலீசார் எச். ராஜா மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை தேடி வருவதாக தெரிவித்த நிலையில். எச்.ராஜா விவகாரத்தில் தாமாக முன் வந்து வழக்குப் பதிவு செய்துவிசாரிப்பது குறித்துசென்னை ஐகோர்ட் நீதிபதிகள் விளக்கம் அளித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மெய்யபுரத்தில் விநாயகர் சிலை ஊர்வலம் நடை பெற்றது. பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தலைமையில் இந்த ஊர்வலம் சென்றது.  அப்போது குறிப்பிட்ட வழியில் ஊர்வலம் செல்ல ஐகோர்ட்தடை விதித்திருப்பதாக காவல் துறை யினர் தெரிவித்துள்ளனர். இதனை ஏற்க மறுத்த எச்.ராஜா காவல்துறையினருடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். பின்னர் தடையையும் மீறி ஊர்வலம் சென்றது. இதனிடையே வாக்கு வாதத்தில் நீதிமன்றம் மற்றும் காவல்துறையினர் குறித்து மோசமான கருத்துக்களை பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது.

இதையடுத்து, பாஜக தேசிய செயலாளர் ராஜா மீது தாமாக முன் வந்து வழக்குப் பதிவு செய்யக் கோரி சென்னை வழக்கறிஞர்கள் சிலர் முறையிட்டனர். ஆனால், நீதிபதிகள் ஹூலுவாடி ஜி. ரமேஷ், கல்யாண சுந்தரம் அமர்வு தாமாக முன் வந்து விசாரிக்க மறுத்திருந்தது. நீதிமன்ற அவமதிப்பு வழக்காக பதிவு செய்தால் விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதே சமயம், ஐகோர்ட் நீதிபதிகள் சி.டி.செல்வம், நிர்மல்குமார் அமர்வு ஹெச்.ராஜா தொடர்பான வழக்கை தாமாக விசாரிக்க முன் வந்துள்ளது.மேலும் இப்படி தாமாக முன் வந்து ராஜா தொடர்பான வழக்கை விசாரிப்பது குறித்து நீதிபதிகள் விளக்கமும் அளித்தனர். அப்போது, “பத்திரிகை செய்தி அடிப்படையில் வழக்குகளை தானாக முன்வந்து எடுக்கக்கூடாது என்றும்; சக நீதிபதிகள் அவமானப் படுத்தப்பட்டாலும் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளே எடுக்கட்டும் எனவும் சில நீதிபதிகள் மறுத்துவிடுவார்கள் அல்லது காத்திருப்பார்கள்.

ஹெச்.ராஜாவின் வீடியோ உலகம் முழுக்க பரவியது என்றாலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்தது என்பதால் மதுரையில் கிளையில் பார்த்துக் கொள்ளட்டும் என சிலர் நினைக்கக்கூடும். காவல்துறை ஏற்கனவே வழக்குப் பதிவு செய்துள்ளதால், அந்த விசாரணை நல்ல முறையில் முடியும் என காத்திருப்பவர்களும் இருப்பார்கள். ஆனால் அரசும், காவல்துறையும் போகிற போக்கில் மறப்போம், மன்னிப்போம் என விசயத்தை மறந்து விடுவார்கள்.

நீதி பரிபாலனம் செய்வதில் நீதிபதிகள்தான் அச்சாணி என்பதை உணர்ந்து, நீதித்துறையின் கண்ணியத்தை காப்பது நீதிபதிகளின் தலையாயக் கடமை. எனவே உச்ச, உயர், கீழமை நீதிமன்ற மாண்பை காக்க வேண்டியதும் கடமை. ஜனநாயகத்தின் தூணான நீதித்துறையை களங்கப்படுத்த எடுக்கும் ஒரு முயற்சியை அனுமதிப்பது என்பது பாஸிசத்தையும், நக்ஸலிசத்தையும் வளர்ப் பதாகவே அமையும். அதனால் திருமயம் பகுதியில் ஹெச்.ராஜா பேசிய நீதிமன்றம் குறித்த பேச்சு தொடர்பாக தானாக முன்வந்து வழக்கை எடுக்கிறோம்” என்று கூறினர். மேலும், அக்டோபர் 22ஆம் தேதிக்கு முன்பு ஹெச்.ராஜா நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதற்கிடையில் திண்டுக்கல் அருகே வேடசந்தூரில் நடந்த இந்து முன்னணி பொதுக்கூட்டத்தில் எச். ராஜா பங்கேற்று பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.