108 சமுதாயங்களுக்கு சமூக நீதி கிடைப்பதற்கு காரணமாக இருந்த ராமதாஸின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்திய தமிழிசை அதற்காக ராமதாஸிடமும், வன்னியர் சமுதாயத்திடமும் நிபந்தனையின்றி, மன்னிப்புக் கேட்க வேண்டும் என, அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி வலியுறுத்தியுள்ளார்.
ஜி.கே.மணி இன்று வெளியிட்ட அறிக்கை விவரம்:
சென்னையிலிருந்து ஒளிபரப்பாகும் தனியார் தொலைக்காட்சிக்கு நேர்காணல் வழங்கிய தமிழிசை சவுந்தரராஜனிடம் சென்னை- சேலம் பசுமை சாலைக்கு மக்களிடையே எழுந்துள்ள எதிர்ப்புகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
ஏற்கெனவே சேலத்திற்கு செல்ல இரு சாலைகள் உள்ள நிலையில், இத்திட்டம் தேவையா என பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டிருக்கிறாரே? என செய்தியாளர் கேள்வி எழுப்பியபோது அகங்காரத்துடன் குரூர சிரிப்பை வெளிப்படுத்தி விட்டு, 30 ஆண்டுகளுக்கு முன்பாக கல்வியிலும்,
வேலைவாய்ப்பிலும் கடைநிலையில் இருந்த பாமக இட ஒதுக்கீடு கேட்டு ராமதாஸ் தலைமையில் நடந்த மறியல் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் சில கருத்துகளை உதிர்த்து திருப்தியடைந்திருக்கிறார். தமிழிசை சவுந்தரராஜனின் இந்தக் கருத்து கண்டிக்கத்தக்கது; இது அவரை அடையாளப்படுத்தியுள்ளது.
அய்யோ பாவம் தமிழிசை. அவருக்கு வரலாறு தெரியாது. விட்டுத்தள்ளுங்கள் என்று ராமதாஸ் கூறிவிட்ட போதிலும் கூட, அதை ஏற்றுக் கொள்ள பாமக தயாராக இல்லை.
சமூக நீதியும் சும்மா கிடைத்துவிடவில்லை. 21 உயிர்களை துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலி கொடுத்து, ராமதாஸ் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் சிறை தண்டனைகளை அனுபவித்து அதன்பயனாகத் தான் வன்னியர் உள்ளிட்ட 108 சமூகங்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
உரிமைக்காக போராடுவோரை எல்லாம், யாரோ சொல்லிக்கொடுத்தவாறு, சமூக விரோதிகள் என்று கிளிப்பிள்ளை போன்று கூறும் தமிழிசை சமூக நீதிப் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தியிருப்பதை பெரும்பான்மை சமுதாய மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.
போராட்டத்தைக் கொச்சைப்படுத்திய தமிழிசை சவுந்தரராஜன் அதற்காக ராமதாஸிடமும், வன்னியர் சமுதாயத்திடமும் நிபந்தனையின்றி, மன்னிப்புக் கேட்க வேண்டும். அவ்வாறு செய்யும்வரை தமிழிசை சவுந்தரராஜனுக்கு எதிராக பாமக சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என ஜி.கே.மணி எச்சரித்துள்ளார்.