AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

‘மீசையுள்ள அம்மா’ கிஜூபாய் பதேக்கா நினைவு நாள்!

By admin | Jun 23, 2025

இன்று ஜூன் 23, இந்தியக் கல்வி வரலாற்றில் ஒரு முக்கியமான நாளாகும். நவீன இந்தியக் கல்வி முறையை வடிவமைத்தவர்களில் ஒருவரான கிஜூபாய் பதேக்கா அவர்களின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.  இவர் “மீசை உள்ள அம்மா” எனவும் அறியப்படுகிறார்.

1885 ஆம் ஆண்டு நவம்பர் 15 அன்று சித்தல் நகரில் பிறந்த கிஜூபாய் பதேக்கா, 1939 ஆம் ஆண்டு ஜூன் 23 அன்று மறைந்தார். அவரது வாழ்நாள் முழுவதும் குழந்தைகளின் கல்விக்காகவும், அவர்களை மையப்படுத்திய கற்பித்தல் முறைகளுக்காகவும் அர்ப்பணிக்கப்பட்டதாகும்.

கிஜூபாய் பதேக்கா, இந்தியாவில் மாண்டிசோரி கல்வி முறையை அறிமுகப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகித்தவர். இத்தாலிய கல்வியாளரான மரியா மாண்டிசோரியின் கல்வித் தத்துவங்களால் ஈர்க்கப்பட்ட இவர், குழந்தைகளை கற்கும் செயல்முறையின் மையத்தில் வைத்து, அவர்களின் உள்ளார்ந்த திறன்களை வெளிக்கொணர உதவ வேண்டும் என்று நம்பினார். அதன் பேரில் 1920 –ல் பால மந்திர் மழலையர் பள்ளியை தொடங்கினார். பிறகு நானாபாய்பட், ஹர்பால் திரிவேதி மற்றும் பதேகா ஆகியோர் சேர்ந்து “ ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ஜிஜூபாய் வினய் மந்திர் “ என்னும் பள்ளியை பவநகரில் நிறுவினர்.

அவரது கல்விப் பணிகள், மரபு சார்ந்த மனப்பாடக் கல்வி முறைகளில் இருந்து மாறுபட்டு, குழந்தைகளுக்கு சுதந்திரமான கற்றல் சூழலையும், விளையாட்டின் மூலம் கற்பதற்கான வாய்ப்புகளையும் வழங்கின. “குழந்தை தெய்வங்கள்போல்” என்ற அவரது பிரபலமான சொற்றொடர், குழந்தைகளின் தனித்துவத்தையும், அவர்களுக்கான சரியான கல்வி முறையின் அவசியத்தையும் வலியுறுத்துகிறது.

மேலும் பதேகா கதைப்புத்தகங்கள் உட்பட 200 நூல்களை வெளியிட்டுள்ளார். அவை அனைத்தும் குழந்தைக் கல்வி, பயணம், நகைச்சுவை இவைகளை மையப்படுத்தியே இருந்தன. அதனால் அவருடைய புத்தகங்கள் குழந்தைகள், பெற்றோர், கல்வியாளர்களை பெரிதும் கவர்ந்தன.

கிஜூபாய் பதேக்காவின் கல்விச் சிந்தனைகளும், அவரது மாண்டிசோரி கல்வி முறைக்கான முயற்சிகளும், இன்றும் பல பள்ளிகளிலும், கல்வி நிறுவனங்களிலும் பின்பற்றப்பட்டு வருகின்றன. அவரது நினைவு தினமான இன்று, குழந்தைகளின் எதிர்காலத்திற்கான அவரது தொலைநோக்குப் பார்வையையும், அரும் பணிகளையும் நாம் நினைவுகூருவோம்.

தனுஜா