திரை உலக வரலாற்று ஏடுகளில் பல விசித்திரமான, வியக்க வைக்கும் சாதனைகள் பதிவாகி இருக்கின்றன. ஆனால், ஒரு திரைப்படத்தின் உருவாக்கத்தில் இடம்பெறும் அத்தனை பணிகளையும், திரையில் தோன்றும் ஆயிரக்கணக்கான கதாபாத்திரங்களையும் ஒரே ஒரு மனிதரே ஏற்று நடத்தியிருக்கிறார் என்றால் அது உலக சினிமா வரலாற்றிலேயே முதன்முறை. ‘வெங்காயம்’, ‘பயாஸ்கோப்’ போன்ற மாற்று சினிமா படைப்புகளின் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு தனித்துவமான பாதையை அமைத்துக் கொண்டவர் சங்ககிரி ராஜ்குமார். அவர் கதையின் நாயகனாகவும், தொழில்நுட்பக் கலைஞராகவும், அதில் வரும் அனைத்து வேடங்களிலும் தோன்றி உருவாக்கியுள்ள ‘ஒன் மேன்’ (ONE MAN) திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
பொதுவாக ஒரு பிரம்மாண்ட திரைப்படம் உருவாவதற்குப் பின்னால் கோடிக்கணக்கான பணப்புழக்கமும், நூற்றுக்கணக்கான தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும், பெரிய தயாரிப்பு நிறுவனங்களின் ஆதரவும் இருக்கும். ஆனால், எந்தவிதமான ஆடம்பரப் பின்னணியும் இன்றி, கலை மீதான அசைக்க முடியாத காதலையும், சாமானியனும் ஒரு சினிமாவை உருவாக்க முடியும் என்ற தன்னம்பிக்கையையும் மட்டுமே மூலதனமாகக் கொண்டு சங்ககிரி ராஜ்குமார் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். படத்தில் வரும் ஆயிரக்கணக்கான மனிதர்களின் கதாபாத்திரங்களில் அவரே நடித்திருப்பதுடன், படப்பிடிப்புக்குப் பிந்தைய அத்தனை தொழில்நுட்ப பணிகளையும் தனியொருவராகவே செய்து முடித்துள்ளார்.
இந்த சாதனைப் படைப்பை திரையரங்குகளில் வெளியிடுவதற்கான வழிகாட்டலை பெற தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணுவை அணுகியபோது, அவர் உடனடியாக முன்வந்து பிவிஆர் நிறுவனத்திடம் பேசியுள்ளார். ‘தமிழர் ஒருவர் உலகளவில் முதன்முறையாக இத்தகைய அரிய முயற்சியை மேற்கொண்டுள்ளார்’ என்பதை உணர்ந்து பிவிஆர் நிறுவனமும் இப்படத்தை உலகளவில் வெளியிட ஆதரவு கரம் நீட்டியுள்ளது. அதேபோல, படப்பிடிப்புக்குப் பிந்தைய தொழில்நுட்ப பணிகளுக்காகத் தனது ஸ்டுடியோவை மாதக்கணக்கில் பயன்படுத்த அனுமதித்து இயக்குநர் ஏ.ஆர்.கே. ராஜராஜா ஆதரவாக நின்றுள்ளார்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட இயக்குநர் சேரன் பேசுகையில், திரையரங்குகளில் இருந்து ஓரிரு நாட்களிலேயே வெளியேற்றப்பட்ட சங்ககிரி ராஜ்குமாரின் ‘வெங்காயம்’ திரைப்படத்தை, மீண்டும் ‘சேரன் வழங்கும் வெங்காயம்’ என்று வெளியிட்டு வெற்றி பெறச் செய்த நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். மேலும், தமிழ் சினிமாவில் வெறும் 70 லட்சம் ரூபாய் பட்ஜெட்டிலேயே ஒரு தரமான திரைப்படத்தை உருவாக்க முடியும் என்பதை ராஜ்குமார் நிரூபித்துக் காட்டியுள்ளதாகவும், இப்படத்தில் அனைத்து வேடங்களிலும் அவரே நடித்திருந்தாலும் ராஜ்குமார் என்ற நபர் தெரியாமல் அந்தந்த கதாபாத்திரங்களே தெரிகின்றன என்றும் புகழாரம் சூட்டினார். பத்து அல்லது பதினைந்து ஆண்டுகள் கழித்து இந்த தமிழ் சினிமா அவரது புகழைக் கொண்டாடும் என்றும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
திரைப்படத்தைப் பார்த்த இயக்குநர்கள் லெனின் பாரதி மற்றும் சுப்பிரமணிய சிவா ஆகியோர், படம் முடிந்து பத்து நிமிடங்கள் வரை வியப்பில் பேச முடியாமல் உறைந்துபோனதாகத் தெரிவித்தனர். சினிமா மீது தீவிரமான பற்று கொண்ட ஒருவரால் மட்டுமே இத்தகைய பிரம்மாண்டத்தை தனி நபராகச் செய்து முடிக்க முடியும் என்றும், தமிழ்நாடு திரைப்படக் கல்லூரி மாணவர்கள் இந்த நுட்பங்களைக் கற்றுக்கொள்ளும் வகையில் ராஜ்குமாரின் அனுபவங்களைப் பயிற்றுவிக்கத் தமிழக அரசு முன்வர வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.
நடிகர் சத்யராஜ் பேசுகையில், ஒருவரே அனைத்துப் பணிகளையும் செய்து படத்தை உருவாக்குவது என்பது தனக்கு இன்னமும் ஆச்சரியமளிக்கும் புதிராக இருப்பதாகக் குறிப்பிட்டார். இதுபோன்ற புதிய முயற்சிகளுடன் வரும் இளைஞர்களுக்குத் தமிழ் சினிமாவில் கதவுகள் திறக்கப்பட வேண்டும் என்றால், ஊடகங்கள் ‘ஒன் மேன்’ திரைப்படத்திற்குப் பெரும் ஆதரவை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
நிகழ்வின் இறுதியில் பத்திரிகையாளர்களுக்காகத் திரைப்படம் திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்த ஊடகவியலாளர்கள் அனைவரும் சங்ககிரி ராஜ்குமாரின் இந்த அசாத்தியமான உழைப்பையும், உலக சாதனையாக அமைந்துள்ள படைப்பையும் எழுந்து நின்று பாராட்டி வாழ்த்தினர். உலக சினிமாவில் இதுவரை யாரும் எட்டாத ஒரு மைல்கல்லை ஒரு தமிழன் எட்டியிருக்கிறான் என்ற பெருமிதத்தோடு ‘ஒன் மேன்’ திரைப்படம் விரைவில் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.