AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

‘அப்பா குட்டி’ பட உரிமையை கைப்பற்றிய ஃபைவ் ஸ்டார் செந்தில்!

By admin | Oct 13, 2026

தமிழ்த் திரையுலகில் தனித்துவமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் என்று சொல்லிக் கொள்ளும் விஜய் ஆண்டனியின் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் ‘அப்பா குட்டி’. உணர்வுபூர்வமான குடும்பப் பின்னணியுடன் ஆக்‌ஷன் அம்சங்களும் இணைந்த இத்திரைப்படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமையைப் பிரபலத் திரைப்பட விநியோகஸ்தரான ஃபைவ் ஸ்டார் செந்தில் கைப்பற்றியுள்ளார். திரையுலகில் நீண்ட அனுபவம் கொண்ட விநியோகஸ்தர் இப்போட்டியில் இணைந்துள்ளது, படத்தின் வர்த்தக மதிப்பையும் வெளியீட்டுத் திட்டங்களையும் மேலும் பலப்படுத்தியுள்ளது.

மு. மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம் வரும் நவம்பர் 6, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது வெளியீட்டுக்கு முந்தைய விளம்பரப் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

தந்தை – மகள் பாசப் பிணைப்பும் ஆக்‌ஷன் களமும்

‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய மு. மாறன் எழுதி இயக்கியுள்ள ‘அப்பா குட்டி’, தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான அளவிலா அன்பு, தியாகம் மற்றும் பிரிக்க முடியாத பாசப் பிணைப்பை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. குடும்ப உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அதே வேளையில், விறுவிறுப்பான சண்டைக் காட்சிகளையும் அழுத்தமான திருப்பங்களையும் இணைத்து அனைத்து வயதினரும் ரசிக்கும் வகையிலான திரையரங்க அனுபவத்தை வழங்க இயக்குநர் திட்டமிட்டுள்ளார்.

முன்னதாக வெளியிடப்பட்ட இப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டரில் விஜய் ஆண்டனி ஒரு சிறுமியுடன் இடம்பெற்றிருந்தார். தந்தை – மகள் உறவின் ஆழத்தை உணர்த்திய அந்தப் போஸ்டர் திரை ரசிகர்களிடையே பெரும் கவனத்தைப் பெற்றதுடன், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் பலமடங்கு அதிகரித்தது. இக்கதையில் விஜய் ஆண்டனியின் உணர்வுபூர்வமான நடிப்பு அவரது திரைப் பயணத்தில் மற்றொரு புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நட்சத்திரப் பட்டாளமும் தொழில்நுட்பக் குழுவும்

இப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து ப்ரீத்தி அஸ்ராணி, பேபி லிதன்யா, பகவதி பெருமாள் (பக்ஸ்), ஹரிப்ரியா இசை, அருவி மதன், சித்ரா லட்சுமணன், ஸ்ரீஜா ரவி, வேட்டை முத்துக்குமார், ஜென்சன் திவாகர், முருகானந்தம், மூணாறு ரமேஷ், லிஸ்ஸி ஆண்டனி, குமார் நடராஜன், விஜயன், பிரவீணா மற்றும் ஹரிதா உள்ளிட்ட பெரிய நட்சத்திரப் பட்டாளமே முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்பப் பணிகளைப் பொறுத்தவரை, விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்திருப்பதுடன் அவரே இப்படத்திற்கு இசையமைத்து, படத்தொகுப்புப் (Editing) பணிகளையும் மேற்கொண்டுள்ளார். ராஜீவ் ராஜேந்திரன் ஒளிப்பதிவைக் கையாண்டுள்ளார். சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களின் கூட்டணியில் உருவாகியுள்ள ‘அப்பா குட்டி’, நவம்பர் 6 அன்று திரையரங்குகளில் குடும்பச் சிறந்த பொழுதுபோக்காக அமையும் என திரையுலகினர் எதிர்பார்க்கின்றனர்