AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

உங்களை அரெஸ்ட் பண்ண ஆசையா? அல்லது ஜெயிலுக்கு போலாம் வாரீகளா?

By admin | Aug 25, 2016

தெலங்கானா மாநிலத்தின் மேடக் மாவட்டத்தில் இருந்த சங்கரெட்டி மாவட்ட சிறைக்கூடம், இப்போது ‘சிறை வாழ்க்கை’ அனுபவத்தைப் பெற நினைப்பவர்களுக்கான ஒரு அருங்காட்சியமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

சுதந்திரத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள நினைப்பவர்கள், சிறைத்துறைக்கு ரூ. 500 செலுத்தி, 24 மணி நேர சிறைவாச அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் இந்த வசதி வேண்டுபவர்கள் முன்னதாக அறிவித்துவிட்டே சிறைக்குச் செல்ல முடியும்.

இந்த ‘ஃபீல் த ஜெயில்’ (சிறை அறை) உணர்வை உணர்ந்துகொள்ளும் கண்டுபிடிப்பை உண்மையான அனுபவமாகக் கொடுக்க முயற்சிக்கின்றனர் சிறை அதிகாரிகள். இதைத்தவிர சிறை அருங்காட்சியகம் ஒன்றை அமைத்து, சிறைக்குள் சுற்றுலா அனுபவத்தையும் அளிக்கின்றனர்.

‘கைது அனுபவம்’ (Locked up Experience) பெற விரும்புபவர்களுக்கும் இங்கே வசதிகள் செய்யப்படுகின்றன. அவர்களுக்கு சிறை அறைகளில் வழக்கமான காதி ஆடை அளிக்கப்படுகிறது. சட்டை, டிரவுசர், படுக்கையோடு, சாப்பிட அலுமினிய தட்டு, தம்ளர், கோப்பை, சலவை சோப், குளியல் சோப் ஆகியவையும் அளிக்கப்படுகின்றன. சிறை நடைமுறைகளுக்கு உட்பட்ட உணவும் தவறாமல் அளிக்கப்படுகிறது.

காலை 6 – 6.30 மணி வரை தேநீர் நேரம். 7 – 7.30 மணி வரை காலை உணவு, 10.30 – 11 வரை மதிய உணவு, மதியம் 12.30 மணிக்கு மற்றொரு தேநீர். மாலை 4.30 – 5 மணி வரை இரவு உணவு வழங்கப்படுகிறது. தேநீர் அங்கேயே தயாராக, உணவு கண்டி மாவட்ட சிறையில் இருந்து கொண்டு வரப்படுகிறது.

காலை உணவுக்கு சப்பாத்தி அல்லது சித்ரான்னமும், மதியத்துக்கு துவரம்பருப்பு சாம்பார், ரசமும், கடலைப்பருப்பு சாம்பார் மற்றும் ரசமும் மாற்றிமாற்றி அடுத்தடுத்த நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இரவு உணவுக்கு குழம்பு, ரசம், தயிர் அளிக்கப்படுகிறது.

சுற்றுலா கைதிகளாக சிறைக்கு வருகை தந்தாலும், சிறையில் பணியாளர்கள் யாரும் இல்லை. அங்கு வருபவர்களே தங்கள் அறைகளைச் சுத்தம் செய்துகொள்ள வேண்டும். அவர்களுக்கென சிறையில் தரப்படும் வேலைகள் எதுவும் தரப்படுவதில்லை. ஆனால் அவர்கள் மரக்கன்றுகள் நட அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்த ஜெயில் அருங்காட்சியகம் கடந்த ஜூன் 5-ம் தேதியன்று அமைச்சர் நைனி நரசிம்ம ரெட்டியால் திறந்து வைக்கப்பட்டது. அதற்கடுத்த நாளான ஜூலை 6-ல் இருந்து, அருங்காட்சியகம் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கு ரூ. 10-ம், குழந்தைகளுக்கு ரூ. 5-ம் கட்டணத்தொகையாக வசூலிக்கப்படுகிறது.

‘ஃபீல் த ஜெயில்’ முறை இந்தியாவிலேயே முதல்முறையாக உருவாக்கப்பட்டுள்ளது என்று அங்கிருந்த காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.