தற்போதைய நிலையில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் பயனாளர்களின் கணக்குகளில் பெரியஅளவு பாதுகாப்பு குறைபாடு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதனால் 5 கோடி பேரின் கணக்குகள் ‘ஹேக்’ செய்யப்பட்டு தகவல்கள் திருடப்பட்டுள்ளது என்றும் இந்த பாதிப்பை சந்தித்துள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக அமெரிக்காவில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில், டிரம்பின் பிரச்சார நடவடிக்கைகளை, இங்கிலாந்தைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்ற நிறுவனம் மேற்கொண்டது. அந்த நிறுவனம், பேஸ்புக் பயனாளிகளின் தனிப்பட்ட விவரங்களைத் திருடி, அதன் மூலமாக, அவர்களின் விருப்பு, வெறுப்புகளை அறிந்து கொண்டு, அவற்றை டிரம்புக்குச் சாதகமாக தேர்தலில் பயன்படுத்திக் கொண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது அலெக் ஸாண்டர் கோகன் என்ற ஆய்வாளர் உருவாக்கிக் கொடுத்த ஆப்ஸ் மூலமாக, 5 கோடி பேரின் தனிப்பட்ட தகவல்களை அந்த நிறுவனம் திருடி, தேர்தலில் பயன்படுத்திக் கொண்டது அம்பல மானது.இதனால் பேஸ்புக்கின் நம்பகத்தன்மை குறித்து பயனாளர்களின் மத்தியில் சந்தேகம் எழுந்தது. இதையடுத்து பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு வரவழைக்கப்பட்டு விளக்கம் கேட்கப்பட்டார்.
இந்நிலையில்தான் பயனாளர்களின் தகவல்கள் ஹேக் செய்யப்பட்டதாக பேஸ்புக் நிறுவனம் மீண்டும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் மேலாண்மை பிரிவு துணை தலைவர் கேய் ரோசன், “பேஸ்புக் பயனாளர்களின் கணக்குகள் செயல்படும் முறையில் மிகப்பெரிய பாது காப்பு குறைபாடு இருந்ததை கண்டுபிடித்துள்ளோம். இதனால் சுமார் 5 கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. இதுபோலவே, 4 கோடி பேரின் கணக்குகள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதையும் உறுதி செய்துள்ளோம்.
இந்த பாதுகாப்பு குறைபாட்டினை பேஸ்புக் நிறுவனத்தை சேர்ந்த பொறியியல் நிபுணர்கள் குழு கடந்த 25-ம் தேதி மாலை கண்டறிந்தனர். இப்போது இந்த பிரச்சனையை சரி செய்யும் பணிகளில் நிபுணர்கள் குழு தீவிரமாக ஈடுப்பட்டுள்ளது. பேஸ்புக்கில் உள்ள சிறப்பு அம்சமான வியூ ஆஸ் எனும் வசதி மூலம் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டிருக்கலாம்.
இந்த வசதியில், பேஸ்புக் கணக்கு பாஸ்வேர்டு பற்றிய தகவல்களை கொண்டதாக உள்ளது. இதனால் இதனை மற்றவர்கள் பார்க்க வாய்ப்பிருந்துள்ளது. இதன் மூலம் ஒருவரின் பேஸ்புக் கணக்கைக் கட்டுப்படுத்த போதுமான தொழில்நுட்ப அறிவைக் கொண்ட எவராலும் முடியும். தற்போது பேஸ்புக்கில் உள்ள வியூ ஆஸ் வசதி தற்காலிகமாக செயல்படாத நிலையில் வைக்கப் பட்டுள்ளது. அதனை சரி செய்து வருகிறோம்” என்று கேய் ரோசன் தெரிவித்துள்ளார்.
மேலும் இது பற்றி பேஸ்புக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜூகர்பெர்க் கூறுகையில் ‘‘பேஸ்புக் பயனாளர்கள் மொத்தம் 200 கோடி பேர் உள்ளனர். இதில் இந்தியாவில் இருந்து மடஅடும் 27 கோடி பேர் பேஸ்புக் பயனாளர்களாக உள்ளனர். இந்த நிலையில் 5 கோடி பயனாளர்களின் கணக்குகள் பாதுகாப்பு குறைபாடால் ஹேக் செய்யப்பட்டுள்ளன. பாதிக்கப் பட்டுள்ள பயனாளர்களின் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் ஆவர்’’ எனக் கூறியுள்ளார்.
அது சரி.. உங்கள் பேஸ்புக் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்பதை அறிய வேண்டுமா?
நமது செல்போனிலோ, கணனியிலோ முதன்முறையாக லாக் இன் செய்யும் போது கடவுச்சொல்லை சேமிக்கவும் (Save Password) என்ற ஆப்ஷனை கிளிக் செய்வோம், இதனால் அடுத்த முறை லாக் இன் செய்யும் போது பாஸ்வேர்ட் கேட்காது.
ஆனால் ஒருவேளை உங்களது கணக்கு ஹேக் செய்யப்பட்டிருந்தால், ஒருவர் லாக்-இன் செய்யும் போது வழக்கம் போல பாஸ்வேர்ட் இல்லாமல் பேஸ்புக் பக்கம் திறக்காது.
லாக்-அவுட் நிலைக்கு வந்து நம்மிடம் மீண்டும் பாஸ்வேர்ட் கேட்கும், அவ்வாறு நமது அக்கவுண்ட் அதுவாகவே லாக்-அவுட் ஆனால் நமது அக்கவுண்டும் பாதிக்கப்பட்டுள்ளது என அர்த்தம்.
எப்போதும் போல பாஸ்வேர்ட் இல்லாமல் உங்கள் பேஸ்புக் பக்கம் திறந்தால் அந்த 9 கோடி பேரில் நீங்களும் ஒருவர் இல்லை என தெரிந்து கொள்ளலாம்.