AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

கோவை சரக டி.ஐ.ஜி விஜயகுமார் தற்கொலை! முழு விபரம்!

By admin | Jul 07, 2023

கோவை லிமிட் டிஐஜி விஜயகுமார் கோவை பந்தய சாலை பகுதியிலுள்ள முகாம் அலுவலகத்தில், இன்று காலை தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று காலை 6.45 மணியளவில் நடைபயிற்சி முடித்துவிட்டு முகாம் அலுவலகத்துக்கு வந்துள்ளார் விஜயகுமார். அங்கு தனது பாதுகாவலரிடம் துப்பாக்கியை 6.50 மணியளவில் வாங்கி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார் என்று தகவல் வந்துள்ளது.

2009ஆம் ஆண்டு பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரியான இவர், கடலூர், நாகை, காஞ்சிபுரம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ளார். தொடர்ந்து சென்னை அண்ணா நகரில் துணை ஆணையராக பணியாற்றி வந்த விஜயகுமாருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்ட நிலையில், கடந்த ஜனவரி மாதம் கோவை சரக டிஐஜியாக பொறுப்பேற்றார்.

மன அழுத்தத்தால் கடந்த சில வாரங்களாக தான் முறையாக தூங்கவில்லை என சக பணியாளர்களிடம் அவரேவும் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மன அழுத்தத்தை குறைக்க விஜயகுமார் மாத்திரைகளையும் சாப்பிட்டு வந்துள்ளார். டி.ஐ.ஜி. விஜயகுமார் மனைவி மற்றும் மகள் சென்னையில் வசித்து வந்த நிலையில் கோவையில் விஜயகுமார் தனியாகத்தான் வசித்து வந்துள்ளார். மன அழுத்தம் ஏற்பட்டதால் விடுப்பிலும் இருந்துள்ளார். மேற்கொண்டு விடுப்பு எடுக்கவும் திட்டமிட்டிருந்தவர் மன அழுத்தம் காரணமாக துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை அடுத்து  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்துள்ள இரங்கல் செய்தியில் ,”டிஐஜி விஜயகுமார் மரணம் அடைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன். தனது பணிக்காலத்தில் பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றி தமிழக காவல்துறைக்கு பெருமை சேர்த்தவர்.டிஐஜி விஜயகுமாரின் குடும்பத்தாருக்கும், காவல்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் -” என்று குறிப்பிட்டுள்ளார்

இவரது காவல்துறை பணியில் சவாலான பல்வேறு வழக்குகளை திறம்பட கையாண்டவராம் : சாம்பிளுக்கு

இவர்  *சி.பி.சி.ஐ.டி -பிரிவில் எஸ்.பியாக பணியாற்றிய போதுதான் சென்னையில் ஐ.டி. ஊழியர் சேலத்தைச் சேர்ந்த உமாமகேஸ்வரி என்பவர், கடந்த 2014 – ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கொலைசெய்யப்பட்டார். அந்த வழக்கை விசாரித்தது விஜயகுமார் தலைமையிலான போலீஸ் டீம்தான். எந்தவித தடயங்களும் கிடைக்காத சூழலில் ஏ.டி.எம் மையத்தில் கிடைத்த சி.சி.டி.வி பதிவு மூலம் அந்த வழக்கை திறம்பட புலனாய்வு செய்து குற்றவாளிகளைக் கைதுசெய்தது விஜயகுமார் தலைமையிலான போலீஸ் டீம்.

 *கடந்த 2022-ம் ஆண்டு சென்னை அமைந்தகரையில் தனியார் வங்கி ஒன்றில் கிலோ கணக்கில் தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது. அங்கு பணியாற்றிய காவலாளிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொண்டு கொள்ளை சம்பவம் நடந்தது. அப்போது விஜயகுமார், அண்ணாநகர் துணை கமிஷனராக பணியாற்றினார். இந்த வழக்கிலும் துணை கமிஷனர் விஜயகுமார் தலைமையிலான டீம், சி.சி.டி.வி. கேமரா பதிவுகள் மூலம் விசாரணை செய்து குற்றவாளிகளைக் கைதுசெய்தது. அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர், குற்றவாளிகளுக்கு உதவி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது சட்டத்தின் முன் அனைவரும் சமம் என கருதிய விஜயகுமார் மற்றும் அவருக்கு மேலதிகாரிகள் அனைவரும் சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டரையும் கைதுசெய்து சிறைக்கு அனுப்பி வைத்தனர்.

 •சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கை சிபிசிஐடி எஸ்பி ஆக அப்போது பணியாற்றி விசாரணை நடத்தினார்.

 •பவாரியா கொள்ளையர்களைப் பிடிக்க அமைக்கப்பட்ட டிஜிபி ஜாங்கிட் தலைமையிலான குழுவில் விஜய்குமார் இடம்பெற்றார்.

 •சென்னை அரும்பாக்கம் வங்கி கொள்ளை வழக்கில் விஜய்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

 •மாணவிகள் அளித்த பாலியல் புகாரில் சிவசங்கர்பாபாவை கைது செய்தவர்.