சென்னை உயர் நீதிமன்ற முதன்மை அமர்வு மற்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் இயங்கி வரும் ஈ-சேவா மையங்களுக்கு (e-Sewa Kendra) தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் தரவு உள்ளீட்டாளர் (Data Entry Operator) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
காலியிடங்களின் விபரங்கள் மற்றும் ஒப்பந்த முறை
இந்த அறிவிப்பின்படி மொத்தம் 115 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்கள் முற்றிலும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் (Contract Staff) நிரப்பப்படுகின்றன. சென்னை உயர் நீதிமன்ற முதன்மை அமர்வில் 2 இடங்களும், புதுச்சேரி மாநிலத்தில் 6 இடங்களும், இதர மாவட்ட நீதிமன்றங்களில் பல்வேறு இடங்கள் என மொத்தம் 115 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சென்னை மாவட்டத்தில் 11 காலிப் பணியிடங்கள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு விருப்பமான ஏதேனும் ஒரு மாவட்டத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் ஒன்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு விண்ணப்பித்தால் அனைத்து விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும்.
கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் கீழ்க்கண்ட கணினி அறிவியல் அல்லது தொழில்நுட்பப் பட்டப்படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பி.எஸ்சி (கணினி அறிவியல்) அல்லது பி.எஸ்சி (ஐ.டி), பி.சி.ஏ, பி.இ (கணினி அறிவியல்), பி.டெக், எம்.சி.ஏ, எம்.எஸ்சி (கணினி அறிவியல்), எம்.இ (கணினி அறிவியல்), எம்.டெக் மற்றும் எம்.எஸ்சி (ஐ.டி) படித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவர்.
வயது வரம்பைப் பொறுத்தவரை, விண்ணப்பதாரர்கள் 01.09.2026 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 35 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அதாவது 02.09.1991 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்தவராக இருக்க வேண்டும்.
சம்பளம் மற்றும் தேர்வு செய்யும் முறை
தேர்ந்தெடுக்கப்படும் தரவு உள்ளீட்டாளர் பணியாளர்களுக்கு மாதந்தோறும் தொகுப்பூதியமாக ரூ. 15,000 வழங்கப்படும். இப்பணியிடங்களுக்குத் தகுதியானவர்களைத் தேர்வு செய்ய எழுத்துத் தேர்வு, திறனறித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவை நடத்தப்பட உள்ளன.
எழுத்துத் தேர்வு 25 மதிப்பெண்களுக்கும், திறனறித் தேர்வு 25 மதிப்பெண்களுக்கும், நேர்முகத் தேர்வு 50 மதிப்பெண்களுக்கும் நடத்தப்படும். எழுத்துத் தேர்வு மற்றும் திறனறித் தேர்வில் குறைந்தபட்சம் 10 மதிப்பெண்களும், நேர்முகத் தேர்வில் குறைந்தபட்சம் 20 மதிப்பெண்களும் பெறுவது கட்டாயமாகும். எழுத்துத் மற்றும் திறனறித் தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் 1:3 என்ற விகிதத்தில் நேர்முகத் தேர்வுக்கு தகுதியானவர்கள் குறுகிய பட்டியல் செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை மற்றும் முக்கிய தேதிகள்
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் (https://www.mhc.tn.gov.in/esk_rec) என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அஞ்சல், கூரியர் அல்லது நேரில் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படாது. விண்ணப்பதாரர்கள் கைப்பேசி அல்லது டேப்லெட் மூலமாக விண்ணப்பிக்காமல் டெஸ்க்டாப் அல்லது லேப்டாப் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள் 29.09.2026 ஆகும். எழுத்து மற்றும் திறனறித் தேர்வு அக்டோபர் 10 அல்லது 11 ஆகிய தேதிகளிலும், நேர்முகத் தேர்வு அக்டோபர் 24 அல்லது 25 ஆகிய தேதிகளிலும் நடத்தப்பட உள்ளது. இது தொடர்பான கூடுதல் விபரங்களைச் சென்னை உயர் நீதிமன்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் சரிபார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.