இந்தியர்களின் பாரம்பரிய சமையலில் காலம்காலமாக மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ள நெய் மற்றும் தேங்காய் எண்ணெய் இரண்டும் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் கொழுப்புகள் என்ற தவறான புரிதலைத் தாண்டி, சரியான அளவில் பயன்படுத்தப்படும்போது உடல் ஆரோக்கியத்திற்குப் பலவித நன்மைகளை வழங்கும் அற்புத உணவுப் பொருட்களாக விளங்குகின்றன; அந்த வகையில், விட்டமின் ஏ, டி, ஈ மற்றும் கே போன்ற சத்துகளையும் செரிமானத்தை ஊக்குவிக்கும் பியூட்ரிக் அமிலத்தையும் கொண்டுள்ள நெய் குடல் ஆரோக்கியத்தைப் பேண உதவுவதுடன், காய்கறிகள் மற்றும் உணவில் உள்ள சத்துகளை உடல் முழுமையாக உறிஞ்சப் பெரிதும் உதவுகிறது; மறுபுறம், தென்னிந்திய பாரம்பரியத்தின் அடையாளமான தேங்காய் எண்ணெயில் உள்ள நடுத்தர சங்கிலி கொழுப்பு அமிலங்கள் (MCTs) உடலில் உடனடியாக ஆற்றலை வழங்குவதுடன், நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தி இதயத்தின் செயல்பாட்டையும் சீராக வைத்திருக்க உதவுகிறது- என்றெலலம் இதுவரை சொல்லி வந்த நெய் மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவை நமது இதய ஆரோக்கியத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பது குறித்த சமீபத்திய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) ஆய்வு முடிவுகள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்க இதய சங்கத்தின் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த ஆய்வறிக்கை, நாம் தினமும் பயன்படுத்தும் சமையல் எண்ணெய்கள் குறித்த புதிய எச்சரிக்கைகளை வழங்கியுள்ளது.
நிலக்கடலை எண்ணெயுடன் ஒப்பிடும்போது ஆபத்துகள்
இந்தியாவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் நிலக்கடலை எண்ணெயுடன் ஒப்பிடும்போது, முதன்மையாக நெய் அல்லது தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துபவர்களுக்கு கெட்ட கொலஸ்ட்ரால் எனப்படும் எல்.டி.எல் (LDL) அளவு மூன்று மடங்கு அதிகமாக இருப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. குறிப்பாக, காலை உணவில் தேங்காய் சட்னி அல்லது தாளிப்பில் நெய்யை அதிகம் சேர்ப்பவர்களுக்கு இந்த ஆபத்து இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் பலரால் சந்தேகிக்கப்பட்ட இந்த முடிவுகள், 18,000 பேரிடம் நடத்தப்பட்ட விரிவான சுகாதாரத் தரவுகளின் அடிப்படையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
வெவ்வேறு சமையல் எண்ணெய்களின் ஒப்பீட்டு நிலை
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பயன்படுத்தப்படும் வெவ்வேறு சமையல் எண்களின் கொலஸ்ட்ரால் தாக்கம் இந்த ஆய்வில் அலசப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் அதிகம் புழக்கத்தில் உள்ள நிலக்கடலை எண்ணெய் இந்த ஆய்வில் ஒப்பிீட்டு அளவுகோலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. சோயாபீன் எண்ணெயைப் பயன்படுத்துபவர்களுக்கு நிலக்கடலை எண்ணெயை விட 1.8 மடங்கு அதிக எல்.டி.எல் கொலஸ்ட்ரால் ஆபத்து உள்ளது. அதேபோல், சூரியகாந்தி எண்ணெய்க்கு 1.5 மடங்கும், பாமாயிலுக்கு 1.7 மடங்கும், கேரளாவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் தேங்காய் எண்ணெய்க்கு 2.9 மடங்கு அதிக ஆபத்து உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. அனைத்து சமையல் எண்ணெய்களிலும் நெய் பயன்பாடே மிக visok அதிக அளவாக 3.4 மடங்கு அதிக எல்.டி.எல் ஆபத்தைக் கொண்டுள்ளதாக ஆய்வு எச்சரிக்கிறது.
நிறைவுற்ற கொழுப்பும் இதய பாதிப்புகளும்
தேங்காய் எண்ணெய் மற்றும் நெய்யில் நிறைவுற்ற கொழுப்பு (Saturated Fat) அதிக அளவில் உள்ளதே எல்.டி.எல் அளவை உயர்த்த முக்கியக் காரணமாகும். மாறாக, நிலக்கடலை மற்றும் கடுகு எண்ணெய்களில் ஒற்றை மற்றும் பன்மடங்கு இன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் (Mono and Polyunsaturated fats) சீரான அளவில் உள்ளன. உணவில் நிறைவுற்ற கொழுப்பின் மூலம் பெறப்படும் ஆற்றல் ஒவ்வொரு 2 சதவீதம் அதிகரிக்கும்போதும், எல்.டி.எல் கொலஸ்ட்ரால் அளவு 6 சதவீதம் வரை அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
பொது விநியோக முறையில் மாற்றங்களும் நிபுணர்களின் ஆலோசனைகளும்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில், ரேஷன் கடைகளில் பாமாயிலுக்குப் பதிலாக நிலக்கடலை எண்ணெயை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் மற்றும் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இது சற்று செலவினைக் கூட்டினாலும், இதய ஸ்டென்ட் மற்றும் பைபாஸ் அறுவை சிகிச்சைகளுக்கான செலவுகளை மிகப்பெரிய அளவில் குறைக்கும் என்று மருத்துவர்கள் கருதுகின்றனர். மேலும், நுகர்வோர் தாங்கள் வாங்கும் சமையல் எண்ணெய் கலப்படம் இல்லாததா என்பதை உறுதி செய்வதுடன், அளவோடு பயன்படுத்தி ஆரோக்கியமான வாழ்வியலைக் கடைப்பிடிக்க வேண்டும்.
ரமாபிரபா