இந்தியச் கால்பந்து விளையாட்டை உலகத் தரத்திற்கு உயர்த்தும் என்ற பிரம்மாண்ட வாக்குறுதியுடன் தொடங்கப்பட்ட ‘இந்தியன் சூப்பர் லீக்’ (ISL) தொடர், தற்போது தனது வரலாற்றிலேயே சந்திக்காத மிக மோசமான வணிக நெருக்கடியில் சறுக்கி வருகிறது. கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டி அணிகளை வாங்கிய முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்கள் தொடர்ந்து லீக்கிலிருந்து வெளியேறுவதும், ஊடக ஒளிபரப்பு உரிமை மதிப்பு (Media Rights Value) படுபாதாளத்திற்குச் சரிந்திருப்பதும், இந்தியச் கால்பந்தின் வணிகக் கட்டமைப்பு எந்த அளவுக்குப் பலவீனமாக உள்ளது என்பதை அம்பலப்படுத்தியுள்ளது.
சரிந்து விழுந்த ஊடக உரிம மதிப்பும் கார்ப்பரேட் வெளியேற்றமும்
ஐஎஸ்எல் தொடரின் வர்த்தக மதிப்பு எந்த அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது என்பதற்கு அதன் ஒளிபரப்பு உரிமைத் தொகையே சான்றாகும். முன்பு ‘ஜியோஸ்டார்’ (JioStar) நிறுவனம் ஆண்டிற்கு ₹275 கோடி வழங்கி வந்த நிலையில், சமீபத்திய சீசனில் அதன் ஊடக உரிமை மதிப்பு வெறும் ₹8.6 கோடியாகக் கடுமையாகச் சரிந்துள்ளது. இதற்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக, டாடா ஸ்டீல் (Tata Steel) நிறுவனம் தனது ‘ஜாம்ஷெட்பூர் எஃப்சி’ (Jamshedpur FC) அணி இனி ஐஎஸ்எல் தொடரில் பங்கேற்காது என அதிகாரப்பூர்வமாக அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விலகும் சர்வதேச நிறுவனங்களும் ரத்து செய்யப்பட்ட ஒப்பந்தமும்
இந்த வணிகச் சரிவு ஒரு சில அணிகளோடு மட்டும் நிற்கவில்லை; சர்வதேச அளவில் கால்பந்து துறையைக் கோலோச்சும் மான்செஸ்டர் சிட்டி அணியின் உரிமையாளரான ‘சிட்டி ஃபுட்பால் குரூப்’ (City Football Group) கடந்த ஆண்டே ‘மும்பை சிட்டி எஃப்சி’ அணியிலிருந்து தனது முதலீடுகளை முழுமையாகத் திரும்பப் பெற்று வெளியேறியது. மேலும், இந்தியச் கால்பந்து கூட்டமைப்புடன் (AIFF) ‘ஃபுட்பால் ஸ்போர்ட்ஸ் டெவலப்மென்ட்’ (FSDL) நிறுவனம் கொண்டிருந்த 15 ஆண்டுகால வணிக ஒப்பந்தமும் முடிவுக்கு வந்துள்ளது. சர்வதேச பிராண்டுகளும் இந்தியக் கார்ப்பரேட்களும் அடுத்தடுத்து வெளியேறுவது லீக்கின் மீதான நம்பிக்கையைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
கிரிக்கெட் கட்டமைப்பும் நுகர்வோர் மாற்றமும்
பிராண்ட் ஃபைனான்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அஜிமோன் ஃபிரான்சிஸ் இது குறித்துக் கூறுகையில், “இந்தியக் கால்பந்து லீக்கில் நீண்டகால நன்மைகளோ அல்லது குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களோ தென்படாததால் தான் முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்கள் வெளியேறி வருகின்றன. இந்திய நுகர்வோரின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப ஐஎஸ்எல் தொடரால் தன்னை மாற்றிக்கொள்ள முடியவில்லை. கிரிக்கெட் விளையாட்டு பல ஆண்டுகளாகக் கட்டமைத்து வைத்துள்ள ஆழமான நிறுவன அமைப்பும் (Institutional Depth) வலுவான ஈகோசிஸ்டமும் இந்தியக் கால்பந்து துறையில் இன்னும் உருவாகவில்லை” எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்காலக் கேள்விக்குறியும் தீர்வுக்கான பாதையும்
கிரிக்கெட்டிற்கு இணையாக இந்தியாவில் வேறொரு விளையாட்டை வளர்த்தெடுக்கலாம் என்ற லட்சியத்துடன் தொடங்கப்பட்ட ஐஎஸ்எல், ரசிகர்களின் ஆதரவைத் தக்கவைப்பதிலும், அணிகளுக்குப் போதுமான வருவாயை ஈட்டித் தருவதிலும் தொடர் தோல்விகளைச் சந்தித்து வருகிறது. இந்தியக் கால்பந்தின் அடித்தளக் கட்டமைப்பைச் சீரமைக்காமல், வெறுமனே கிளாமரையும் வெளிநாட்டு வீரர்களையும் மட்டுமே நம்பித் தொடரை நடத்துவது நீடிக்காது என்பதை தற்போதைய சூழல் உணர்த்துகிறது. இந்தியக் கால்பந்து நிர்வாகம் தனது அணுகுமுறையை உடனடியாக மாற்றியமைக்கத் தவறினால், நாட்டின் மிகப்பெரிய கால்பந்து திருவிழா வரலாற்றுப் பக்கங்களில் மட்டுமே எஞ்சி நிற்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
விக்கி