திரைப்படம்: ராம் & லீலா
நடிகர்கள்: ரியோ ராஜ், வர்திகா, சேத்தன், மாளவிகா அவினாஷ், முனிஷ்காந்த், தீபா வெங்கட், மகாபா ஆனந்த் மற்றும் பலர்
இயக்கம்: ராமச்சந்திரன் கண்ணன்
இசை: அங்கித் மேனன்
ஒளிப்பதிவு: மல்லைகார்ஜுன்
ரேட்டிங்: 3.5 / 5
வெள்ளித்திரையில் காதல் கதைகள் என்பது காலங்காலமாகப் பயணிக்கும் ஒரு ரயிலைப் போலத்தான். ஆனால், அந்தப் பயணத்தில் ஏறும் பயணிகளுக்கு என்ன மாதிரியான புதுமையான அனுபவத்தையும் உணர்வுகளையும் இயக்குநர் வழங்குகிறார் என்பத்தில்தான் பட வெற்றியின் ரகசியம் ஒளிந்துள்ளது. அந்த வகையில், துள்ளலான காதல், நகைச்சுவை, குடும்ப பந்தங்கள் மற்றும் சஸ்பென்ஸ் கலந்த உணர்வுப்பூர்வமான அனுபவமாக உருவாகி வந்திருக்கிறது ராமச்சந்திரன் கண்ணன் இயக்கியுள்ள ராம் & லீலா.
கதை என்னவென்று பார்த்தால், சேத்தன் மற்றும் மாளவிகா அவினாஷ் தம்பதியின் செல்ல மகனாக வலம் வருகிறார் நாயகன் ரியோ. அவருக்கு எப்படியாவது ஒரு நல்ல பெண்ணைப் பார்த்து திருமணம் முடித்துவிட வேண்டும் என்பதுதான் அந்த வீட்டின் முதன்மை இலக்கு. ஆனால், ரியோ பார்க்கும் ஒவ்வொரு பெண்களும் ஏதேதோ காரணங்களைக் கூறி கழற்றி எறிய, திருமணமே வேண்டாம் என்ற விரக்தியின் விளிம்பிற்குச் செல்கிறார் ரியோ. அப்போதுதான் அவர் வாழ்வில் ஒரு மின்னலைப் போலக் குறுக்கிடுகிறார் நாயகி வர்திகா. பார்வைகளில் மலரும் இந்த அறிமுகம், நாளடைவில் மெல்ல மெல்ல ஆழமான காதலாக மாறுகிறது. ரியோ தனது விருப்பத்தை வெளிப்படுத்த, வர்திகாவும் சம்மதம் தெரிவிக்கிறார். ஆனால், இந்தக் காதலுக்கு வர்திகா போடும் ஒரு வித்தியாசமான நிபந்தனைதான் கதையின் அச்சாணி.
காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே உன்னுடன் இருக்க முடியும், அதற்கு மேல் நான் என் வீட்டின் எல்லைக்குள் சென்றுவிட வேண்டும் என்பதுதான் அந்த நிபந்தனை. ஆரம்பத்தில் இதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாத ரியோவிற்கு, நாட்கள் நகர நகரக் குழப்பம் மேலிடுகிறது. மாலை 6 மணிக்கு மேல் வர்திகாவின் வாழ்க்கையில் என்னதான் நடக்கிறது என்ற தேடலுடன் அவர் நாயகியின் வீட்டை நோக்கிச் செல்கிறார். அங்கு வர்திகாவைப் பற்றி ரியோ அறியும் அந்த உண்மையைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்துபோகிறார். உயிருக்கு உயிராக நேசித்த காதலியை விட்டு ரியோ விலகிச் செல்லத் துடிப்பது ஏன், அந்த உண்மை என்ன, இறுதியில் இந்த ஜோடியின் காதல் வென்றதா இல்லையா என்பதை இரண்டரை மணி நேரக் சுவாரசியப் பதிவாகப் படைத்திருக்கிறார் இயக்குநர்.
நடிப்பு என்று வரும்போது, ரியோ தனது வழக்கமான எனர்ஜி மாறாமல் இயல்பான நகைச்சுவை மற்றும் காதல் காட்சிகளில் தூள் கிளப்பியிருக்கிறார். குறிப்பாக, இடைவேளைக்கு முன் தனக்கு ஏற்படும் அதிர்ச்சி, குழப்பம், கோபம் என உணர்ச்சிகளின் பரிமாணங்களை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியுள்ளார்.
நாயகி வர்திகாவிற்கு இது மிக முக்கியமான கதாபாத்திரம். கண்களாலேயே பேசி ரசிகர்களைக் கவரும் அவர், கதையின் திருப்புமுனை காட்சிகளில் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி அப்ளாஸ் வாங்குகிறார்.
அனுபவ நடிகர்களான சேத்தன் மற்றும் மாளவிகா அவினாஷ் பெற்றோர் கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியுள்ளனர். ரியோவின் நண்பராகவும் தங்கையாகவும் வரும் துணை நடிகர்கள் கதையோட்டத்திற்கு ஏற்ற கலகலப்பைச் சேர்த்துள்ளனர்.
தொழில்நுட்ப ரீதியாகப் பார்க்கையில், மல்லைகார்ஜுனின் ஒளிப்பதிவு ஒவ்வோர் ஃபிரேமையும் அழகியல் மிளிரப் படம்பிடித்துள்ளது. அங்கித் மேனனின் பின்னணி இசை காதல் காட்சிகளுக்கு மேலும் இனிமை சேர்க்கிறது. எடிட்டர் YNC சிவாவின் கத்தரி, தேவையற்ற காட்சிகளைக் குறைத்துத் திரைக் கதையை விறுவிறுப்பாக நகர்த்த உதவியிருக்கிறது.
சமீபத்தில் வெளிவந்த சில படங்களின் சாயல் ஆங்காங்கே எட்டிப்பார்த்தாலும், அது படத்தின் முதன்மையான திருப்பங்களையோ சுவாரசியத்தையோ எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. குறிப்பாக, முதல் பாதியில் எழும் கேள்விகளுக்கு இரண்டாம் பாதியில் மிகத் தெளிவான, மனதை நெகிழவைக்கும் பதில்களைத் தந்து, திரையரங்கை விட்டு வெளியேறும் ரசிகர்களின் மனதில் ஒருவிதமான மகிழ்ச்சியையும் நிறைவையும் தருகிறது இந்தத் திரைப்படம்.
மொத்தத்தில், சிக்கலான குழப்பங்கள் இல்லாமல் குடும்பத்துடன் சென்று ஜாலியாகக் கண்டு களிக்கும் ஒரு சிறந்த காதல் மற்றும் குடும்ப பொழுதுபோக்குத் திரைப்படமாக ராம் & லீலா மிளிர்கிறது.