AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

பத்தா – விமர்சனம்!

By admin | Oct 02, 2026

எப்போதெல்லாம் நீ சிரமப்படுகிறாயோ அப்போதெல்லாம் அதற்காக யாரையும் குற்றம் சொல்லாதே. அதன்மூலம் எந்த வேதனையும் படாதே. அதற்கு பதிலாக அதை பார், உணர்ந்து பார், கவனி, அதை எத்தனை கோணங்கள் உண்டோ அத்தனை கோணங்களிலும் பார். அதை ஒரு தியானமாக மாற்று, என்ன நிகழ்கிறதென்று பார் என்ற ஓஷோ தத்துவத்தை விலாவாரியாக விளக்கும் பக்கா கமர்சியல் சினிமா இது. ஆனால் படத்தின் சுருக்கமான கதாபாத்திரப் பட்டயமும் எளிதில் யூகிக்கத்தக்க இறுதித் தருணங்களும் இதன் வீச்சை முற்றிலும் குறைத்துவிட்டன. அகப்பயணத்தை மையமாகக் கொண்ட ஒரு திரைக்கதையில் இன்னும் அழுத்தமான வாதங்களையும் உணர்வுப்பூர்வமான திருப்பங்களையும் இணைத்திருந்தால் இதன் தாக்கம் பலமாக இருந்திருக்கும். குறிப்பாக, இரண்டாம் பாதியின் திரைக்கதை ஓட்டம் எந்தவித சுவாரஸ்யத்தையும் தராமல் தேங்கி நிற்பது பார்வையாளர்களுக்கு கொஞ்சம் சோர்வைத் தருவதுதான் உண்மை.

கதை

ஆட்டோ சங்கர் என்ற ரியல் கிரிமினல் வாழ்ந்த 1985-களின் சென்னை நிழல் உலகக் களம். கள்ளச்சாராய வியாபாரம் மற்றும் வெறித்தனமான அடிதடியில் கொடிகட்டிப் பறக்கும் ரவுடிதான் பக்தவச்சலம் எனும் பத்தா (விஜயசேதுபதி). அவனது குடும்பத்தில் மனைவி கன்னியம்மாவும் (லிஜோ மோள் ஜோஸ்) மகளும் உள்ளனர். நடுவழியில் எதிர்ப்படுபவர்களை ஈவு இரக்கம் பார்க்காமல் அடித்துத் துவைக்கும் அவனது வன்முகம், அந்தப் பகுதிச் சிறுவர்களிடையே பெரும் அச்சத்தை விதைக்கிறது; அந்தப் பய பட்டியலில் பள்ளி மாணவன் சபரியும் (சாய் பிரித்வி ராஜ்) அடங்குவான். அவனது பெற்றோரோ எளிய மனிதர்கள் (ஹரி கிருஷ்ணன் – சாந்தி பாலச்சந்தர்).

கோடை விடுமுறைக்கு முந்தைய நாள், தன் தந்தை ஆசையாக வாங்கிக் தந்த மரப் பொம்மையை வகுப்பறையிலேயே மறந்துவிட்டுத் தவிக்கிறான் சபரி. விடுமுறை நாட்களில் அந்தப் பொம்மையைப் பிரிய மனமின்றி, காவலாளி நடமாட்டம் இல்லாத அந்தப் பள்ளி வளாகத்திற்குள் யாருக்கும் தெரியாமல் நுழைந்து அதை மீட்கிறான். அங்கிருந்து வெளியேறும் அவசரத்தில் கழிவறைக் கதவைப் பூட்டிவிட, உள்ளிருந்து பத்தாவின் மிரட்டலான பேச்சுக் குரல் கேட்கிறது.

திறந்துவிட்டால் தன் உயிர் பறிபோய்விடும் என்ற கடும் அச்சத்தில், கதவைத் திறக்கத் துணிவின்றி சபரி ஓடிவிட, ஆள் அரவமற்ற அந்த வளாகக் கழிவறையில் அகப்பட்டுத் தவிக்கிறான் பத்தா. நாட்கள் உருண்டோடுகின்றன; பசியிலும் பட்டினியுமாக அவன் வாடுவதைக் கண்டு மனமிரங்கும் சிறுவன் சபரி, யாருக்கும் தெரியாமல் தினமும் இரண்டு பொறைகளை (வருக்கி) விலைக்கு வாங்கிவந்து அவனுக்கு ரகசியமாகக் கொடுத்து உதவுகிறான்.

இதற்கிடையே குடும்பத்துடன் வெளியூருக்குச் செல்லும் சூழ்நிலை உருவாகிறது. அப்போது, பத்தாவுக்கு எந்த ஆபத்தும் நேர்ந்துவிடக் கூடாது என்ற இளகிய மனதுடன், துணிச்சலை வரவழைத்தப்படி தாழ்ப்பாளை நீக்குகிறான் சபரி. ஆனால், உள்ளே பாம்பு தீண்டி பேச்சு மூச்சற்று கிடக்கிறான் பத்தா.

அதைக் கண்டு சபரி அலறிய தகவலின்பேரில் அவன் மீட்கப்பட, அவனைக் காப்பாற்றியது சபரிதான் என அவனது மனைவி கன்னியம்மா முழுமையாக நம்புகிறார். பத்தாவும் அந்தச் சிறுவன் மீது தன் சொந்த மகனைப் போலப் பாசம் கொள்கிறான். அதே சமயம், பத்தாவுக்குத் தொடர்ந்து உணவு வழங்கிய அந்த மர்ம ஆசாமி யாரென்று அவனது அடியாள்கள் தேடிக் கண்டுபிடிக்க முயல்கிறார்கள். இறுதியில், தன்னைச் சிறை வைத்தது இந்த சிறுவன்தான் என்ற உண்மை பத்தாவுக்குத் தெரியவந்ததா? சபரியின் கதி என்னவாயிற்று? என்பதுதான் இப்பட கதைச் சுருக்கம்.

நடிப்பு

விஜயசேதுபதி: ஒவ்வாத மீசை, கிருதா, நீள்முடி என்று நாடக நடிகர் போன்ற தோற்றம் என்றாலும் தனக்கே உரிய வழக்கமான உடல் மொழி, வசன உச்சரிப்புடன் ஸ்கோர் செய்து விடுகிறார் நாயகன்.

சாய் பிரித்வி ராஜ்: நாயகனுக்கு இணையாக முழுப் படத்தை தூக்கிச் செல்லும் ரோலில் சபரி. போண்டா கண்களுடன் பயம், வெகுளித்தனம், குற்றவுணர்வு, பாசம் என ஏகப்பட்ட உணர்வுகளை அசால்டாக எக்ஸ்போஸ் செய்து கைதட்டல் வாங்கி விடுகிறான்.

மற்ற நடிகர்கள்: விஜய் சேதுபதி மனைவியாக லிஜோமோல் எதார்த்தமான நடிப்பை வழங்கி இருக்கிறார். அவரது மகளாக வரும் சஹஸ்ரா தேவையான இடத்தில் சிரிக்கிறார், முறைக்கிறார், அழுகிறார், தந்தை பாசம் வெளிப்படுத்துகிறார். அர்ஜுன் சிதம்பரம், ஹரி கிருஷ்ணன், சாந்தி பாலச்சந்தர், விஷ்ணு கோவிந்த், பாலமுருகன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

டெக்னிஷியன்ஸ்

இசை: மியூசிக் டைரக்டர் சாய் அபயங்கர் இப்படத்திற்குத் திரும்பத் திரும்ப கேட்கும் பாடல்களைக் கொடுத்திருக்கிறார். ஊரோட ஒத்த டான், மகளே பாடல்கள் திரையில் பார்க்கவும் சிறப்பாக இருக்கிறது. நகைச்சுவைக் காட்சிகளுக்கான பின்னணி இசை, விஜய் சேதுபதி எமோஷனுக்குப் பயன்படுத்தப்பட்ட இசைகள் ஆகியவை கதைക്ക് உறுதுணையாக இருக்கின்றன.

ஒளிப்பதிவு: கேமராமேன் செல்வகுமார் தன்னுடைய நேர்த்தியான பணியால் 80ஸ் சினிமா உணர்வை லைட்டிங்கிலும், ஃப்ரேம்களிலும் மிகச் சரியாக பதிவு செய்து கவர்ந்து விடுகிறார்.

கலை இயக்கம்: ஆர்ட் டைரக்டர் கண்ணன் 1980-களின் மெட்ராஸை கண்முன்னே கொண்டு வந்துள்ளார்.

ஆடை வடிவமைப்பு: சில காட்சிகள் துருத்தினாலும் ஸ்ருதி மஞ்சரியின் ஆடை வடிவமைப்பில் அப்படியே 40 ஆண்டுகளுக்கு முன் சென்னை இப்படியும் இருந்திருக்கலாம் என்கிற எண்ணத்தைத் தருகிறது.

இறுதி முடிவு

மொத்ததில் ஒரு ரவுடியின் வாழ்க்கை என்று எடுத்துக் கொண்டு லாரி லாரியாக ரத்தம் தெறிக்கும் வன்முறைக் காட்சிகள், பழிவாங்கல் என முகத்தை சுளிக்க வைக்கவில்லை. அதே சமயம் ஒரு டானின் இயல்பான வாழ்க்கையை குழந்தை மனசுடன் ஒப்பிட்டு காட்ட விஜய் சேதுபதியின் ஸ்பீச் போல் மேலோட்டமாக சொல்லி இருப்பது பலவீனம்.

எனிவே பத்தா – பத்தோடு ஒன்று பதினொன்றில்லை!

ரேட்டிங்: 3.5/5