AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

வங்கியா…வழிப்பறி மையமா?எஸ்பிஐயின் அநியாயக் கட்டணத்தால் கொதித்தெழும் மக்கள்!

By admin | Aug 21, 2026

ந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, தனது கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்குப் பெரும் அதிர்ச்சியளிக்கும் வகையில் புதிய கட்டண விதிமுறைகளை அறிவித்துள்ளது. 2026 அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரவுள்ள இந்த விதியின்படி, கிளைகள் வழியாகத் திறக்கப்பட்ட பேசிக் சேவிங்ஸ் வங்கி வைப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் ஒரு மாதத்தில் நான்கு முறைக்கு மேல் பணம் எடுத்தால், ஐந்தாவது முறை முதல் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 15 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி கட்டணமாக வசூலிக்கப்படும். நிதிச் சேர்க்கையை ஊக்குவிக்கவும், நாட்டின் கடைக்கோடி ஏழை எளிய மக்களும் வங்கிச் சேவை பெற வேண்டும் என்ற நோக்கத்திலும் தொடங்கப்பட்ட பிஎஸ்டிபி கணக்குகளிலேயே இத்தகைய அபராதக் கட்டணத்தைக் கொண்டு வருவது, பொதுமக்கள் மத்தியிலும் சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நமது சொந்தப் பணத்தை எடுக்க நமக்கே தண்டனையா?

பொதுமக்கள் தங்களின் சிறுகச் சிறுகச் சேர்த்த உழைப்பின் பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கவே பொதுத்துறை வங்கிகளை நாடுகிறார்கள். ஆனால், அவசரத் தேவைக்காகவும் அன்றாட வாழ்க்கைச் செலவுகளுக்காகவும் வங்கிக் கிளையிலோ அல்லது ஏடிஎம் எந்திரத்திலோ தங்களின் சொந்தப் பணத்தை எடுப்பதற்கு வங்கிகள் கட்டணம் விதிப்பது எந்த வகையில் நியாயம் என்ற கேள்வி பலமாக எழுந்துள்ளது. மாதத்திற்கு 4 முறை மட்டுமே இலவசமாகப் பணம் எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு, சாமானிய மக்களின் பணப் புழக்கத்தை முடக்கும் செயலாகும். ஐந்தாவது முறை முதல் எடுக்கும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 15 ரூபாயுடன் ஜிஎஸ்டி வரியையும் சேர்த்து அபராதம் போல வசூலிப்பது, எளிய மக்களின் பாக்கெட்டில் நேரிடையாகக் கைவைக்கும் நிதி வழிப்பறி என்றே விமர்சிக்கப்படுகிறது.

வைப்புத்தொகைக்குச் சொற்ப வட்டி… கடனுக்கு மீட்டர் வட்டி!

வங்கிகள் இயங்குவதே வாடிக்கையாளர்களின் சேமிப்புப் பணத்தைக் கொண்டுதான் என்பதை வங்கி நிர்வாகங்கள் மறந்துவிட்டனவா என்ற சந்தேகம் எழுகிறது. மக்கள் சேமிப்புக் கணக்கில் போடும் பணத்திற்கு வங்கிகள் வழங்கும் வட்டி மிக மிகக் குறைவு. நாட்டின் பணவீக்க விகிதத்தைக் காட்டிலும் குறைவான வட்டியைக் கொடுத்துவிட்டு, அதே பணத்தை மற்றவர்களுக்குக் கடனாகக் கொடுக்கும்போது அபரிமிதமான வட்டி வீதத்தை வசூலிக்கின்றன. தனிநபர் கடன், தொழில் கடன், வாகனக் கடன் என எதைக் கேட்டாலும் மீட்டர் வட்டிக்கு நிகரான வட்டி விகிதங்களையும், அவற்றுக்கான பிராசசிங் கட்டணம் என்ற பெயரில் தனிக் கட்டணத்தையும் கறந்துவிடுகின்றன. பெருநிறுவனங்களின் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன்களை வாராக்கடன் என்ற பெயரில் தள்ளுபடி செய்யும் வங்கிகள், சாமானியனின் சிறு சேமிப்பில் கட்டணம் என்ற பெயரில் சுரண்டுவது அநியாயத்தின் உச்சம்.

சேவை என்ற பெயரில் வாடிக்கையாளரைச் சூறையாடும் மறைமுகக் கட்டணங்கள்

இன்றைய நவீன வங்கியியல் சூழலில் எஸ்எம்எஸ் கட்டணம், ஏடிஎம் பராமரிப்புக் கட்டணம், குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லையென்றால் அபராதம், செக் புக்கிற்குக் கட்டணம், கணக்கு விவர அறிக்கை கட்டணம் என ஒவ்வொரு சேவைக்கும் வாடிக்கையாளரிடம் இருந்து ஏற்கனவே கணக்கு வழக்கில்லாமல் பணம் பிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு மனிதனின் உழைப்பிலும் பிழைப்பு நடத்தும் வங்கிகள், தற்போது ஏடிஎம் அல்லது கிளையில் இயந்திரம் மூலம் சொந்தப் பணத்தை மிஷினில் இருந்து எடுக்கும் எளிய நடவடிக்கைக்கும் கூடக் கட்டணப் பாரத்தைச் சுமத்துவது கண்டனத்திற்குரியது.

டிஜிட்டல் மாயையும் அடித்தட்டு மக்களின் நிஜமான வலியும்

டிஜிட்டல் பரிவர்த்தனைகள் இலவசமாகத் தொடரும் என்று வங்கி நிர்வாகம் சமாதானம் சொன்னாலும், இந்தியாவின் கிராமப்புற மக்களும், இணைய வசதி இல்லாத எளிய தொழிலாளர்களும் அன்றாடக் கூலித் தேவைகளுக்கு ரொக்கப் பணத்தையே நம்பியிருக்கிறார்கள். முதியவர்கள், ஓய்வூதியதாரர்கள், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளர்கள் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனை அறியாத அடித்தட்டு மக்களை இந்தத் திடீர் கட்டண உயர்வு கடுமையாகப் பாதிக்கும். ஸ்மார்ட்போன் இல்லாத, இணைய அறிவு இல்லாத ஒரு பாட்டாளி வங்கியிலிருந்து தன் கூலிப் பணத்தை எடுக்க ஒவ்வொரு முறையும் அபராதம் செலுத்த வேண்டும் என்பது சமூக நீதிக்கு எதிரானது.

வங்கியின் சமூகப் பொறுப்பு என்ன ஆனது?

மக்கள் தாங்கள் ஈட்டிய தொகையைப் பத்திரமாக வைத்திருக்க மட்டுமே வங்கியிடம் தருகிறார்கள். அதற்குப் பாதுகாப்புக் கொடுப்பதற்குப் பதிலாக, தங்கள் சொந்தப் பணத்தை எடுப்பதற்கே கட்டணச் சுமையைச் சுமத்துவது பொதுத்துறை வங்கியின் முதன்மைச் சமூகப் பொறுப்பையே கேள்விக்குறியாக்கியுள்ளது. வங்கித் துறையை லாபம் மட்டுமே ஈட்டும் வணிக நிறுவனமாக மாற்ற நினைப்பது ஆபத்தானது. வாடிக்கையாளர்களை மெல்ல மெல்லச் சுரண்டும் இதுபோன்ற நவீன வழிப்பறிக் கட்டணங்களை எஸ்பிஐ வங்கி நிர்வாகம் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். மத்திய அரசும் இந்திய ரிசர்வ் வங்கியும் தலையிட்டு எளிய மக்களின் சேமிப்பைப் பாதுகாக்கும் வகையில் இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பு மக்களின் ஏகோபித்தக் கோரிக்கையாக உள்ளது.

அபராஜித்