நம் நாட்டில் புற்றீசல் போல் கலைக்கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் உருவாகியுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு துறையும் லட்சங்களில் பட்டதாரிகளை உருவாக்கி வெளியே அனுப்புகின்றன. இப்படி லட்சக்கணக்கில் உருவாகி வெளியே வரும் இளைஞர் – இளைஞிகள் யாரும் சுய தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணப்பாட்டுக்குள் வருவதில்லை. அதற்கு காரணம், கல்வி கூடங்கள் தங்களிடம் கற்கும் இளைஞனை தன்னம்மிக்கை உடையவர்களாக உருவாக்குவதில்லை. அரசாங்க, தனியார் துறைக்களுக்கான இயந்திரங்களாகவே உருவாக்கி அனுப்புகின்றன. அதனால் தான் அவனது தேடல் அரசாங்க, தனியார் துறை மீது செல்கிறது. தற்போது தமிழகத்தில், இந்தியாவில், உலகத்தில் பட்டதாரிகளின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதாவது பட்டதாரிகளின் எண்ணிக்கை பெருக்கல் கணக்கில் உயர்ந்தால், வேலைவாய்ப்பு கூட்டல் கணக்கில் தான் உயர்கிறது என்பதை யாரும் கவனத்தில் கொள்வதில்லை. இதனிடையே உலக அளவில் 2014-ம் ஆண்டு அறிவியல் மற்றும் பொறியியல் பட்டதாரிகளை அதிக அளவில் உருவாக்கி இந்தியா முதலிடத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் அறிவியல் அறக்கட்டளை உலக அளவில் அறிவியல் மற்றும் பொறியியல் பட்டதாரிகள் குறித்த ஆய்வு நடத்தியுள்ளது.இதில்தான், உலக அளவில் 2014-ம் ஆண்டு மொத்தம் 75 லட்சம் பேருக்கு அறிவியல் மற்றும் பொறியில் துறையில் இளநிலை பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவர்களில் நான்கில் ஒரு பங்கினர் இந்தியாவை சேர்ந்தவர்களாவர். இந்தப் பட்டியலில் 25 சதவீதம் பேருடன் இந்தியா முதலிடத்திலும், 22 சதவீதம் பேருடன் சீனா இரண்டாவது இடத்திலும் உள்ளது. 12 சதவீதம் பேருடன் ஐரோப்பிய யூனியனும், 10 சதவீதம் பேருடன் அமெரிக்கா நான்காவது இடத்திலும் உள்ளன.
அதே சமயம் அறிவியல் மற்றும் பொறியியல் துறை சார்ந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் அந்நாடு தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் பிஎச்டி எனப்படும் ஆராய்ச்சி பட்டங்கள் அதிகஅளவில் வழங்கிய நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
அந்நாடு 40,000 பேருக்கு பிஎச்டி பட்டம் வழங்கியுள்ளது.
இந்தப் பட்டியலில் 34,000 பேருடன் சீனா இரண்டாவது இடத்திலும், 19,000 பேருடன் ரஷ்யா மூன்றாவது இடத்திலும், 15,000 பேருடன் ஜெர்மனி நான்காவது இடத்திலும், இங்கிலாந்து 14,000 பேருடன் ஐந்தாவது இடத்திலும், 13,000 பேருடன் இந்தியா ஆறாவது இடத்திலும் உள்ளன.
அது போலவே உலக அளவில் கல்விக்காக அதிகம் செலவு செய்யும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது. அந்நாடு கல்விக்காக 33 லட்சம் கோடி ரூபாய் அளவில் செலவு செய்கிறது. இரண்டாவது இடத்தில் உள்ள சீனா 27 லட்சம் கோடி ரூபாய் அளவில் கல்விக்காக செலவு செய்கிறது.