AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

HR&CE அறங்காவலர் தெரிவுக் குழுவில் அர்ச்சனா கல்பாத்தி: அரசுக்கு நன்றி அறிவிப்பு!

By admin | Aug 11, 2026

மிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களுக்குப் பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமிப்பதற்காக, தகுதி வாய்ந்த நபர்களைத் தெரிவு செய்யும் மாநில அளவிலான உயர்மட்டக் குழு உறுப்பினராக ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நெட்வொர்க் நிர்வாக இயக்குநர் திருமதி அர்ச்சனா கல்பாத்தி நியமிக்கப்பட்டுள்ளார். இத்துடன், ஆண்டுக்கு ரூ. 10 லட்சத்திற்கு மேல் வருமானம் கொண்ட திருக்கோயில்களுக்கான அறங்காவலர் பெயர்ப்பட்டியலைத் தயாரிக்கும் முக்கியப் பொறுப்பும் இக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

அரசுக்கு மனமார்ந்த நன்றி

இந்த முக்கிய நியமனத்தைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், மற்றும் அறநிலையத்துறை ஆணையர் திரு. ஜெ. குமரகுருபரன் ஐ.ஏ.எஸ் ஆகியோருக்கு அர்ச்சனா கல்பாத்தி தனது ஆழமான நன்றியினைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

பொறுப்புணர்வும் அர்ப்பணிப்பும்

தமது நியமனம் குறித்துப் பேசிய அர்ச்சனா கல்பாத்தி: “இந்த நியமனத்தை எனக்கு வழங்கப்பட்ட ஒரு மிகமுக்கியமான பொறுப்பாகவே கருதுகிறேன். தமிழ்நாட்டின் திருக்கோயில்கள் நமது பாரம்பரியம், பண்பாடு மற்றும் பண்பாட்டு வாழ்வின் அடையாளங்களாகத் திகழ்கின்றன. அவற்றின் மேம்பாட்டிலும் நிர்வாகச் செயல்பாட்டிலும் பங்களிக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது,” என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், “எனக்கு வழங்கப்பட்டுள்ள இந்தப் பொறுப்பை முழு அர்ப்பணிப்புடனும், நேர்மையுடனும், மிகுந்த பொறுப்புணர்வுடனும் நிறைவேற்றுவேன். இறைவனின் அருளாலும், அனைவரின் ஒத்துழைப்பாலும் இந்தப் பணியைச் சிறப்பாகச் செய்து முடிப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது,” என உறுதியளித்துள்ளார்.

16 ஆண்டுகால அனுபவமும் ஆன்மீக ஈடுபாடும்

திரையரங்குகள், திரைப்பட விநியோகம், மற்றும் தயாரிப்பு என கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாக ஏஜிஎஸ் குழும நிறுவனங்களின் வளர்ச்சிக்குப் பிரதான தூணாக விளங்கி வரும் அர்ச்சனா கல்பாத்தி, இயல்பிலேயே மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கொண்டவர். ஏற்கனவே பல திருக்கோயில்களுக்கும் அறக்கட்டளை சார்ந்த தொண்டுகளுக்கும் பல்வேறு சேவையாற்றியுள்ள இவருக்கு, இந்த புதிய பதவி அவரது சமூக மற்றும் ஆன்மீகப் பணிகளுக்குக் கிடைத்த அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.

கல்வித் தகுதிகள்

பி.இ. கணினி அறிவியல் (B.E. Computer Science): கிண்டி பொறியியல் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம்.

எம்.எஸ். கணினி அறிவியல் (M.S. Computer Science): நியூயார்க் மாநிலப் பல்கலைக்கழகம், பஃபலோ.

எம்.எஸ். நிதி மேலாண்மை (M.S. Wealth Management): எஸ்.எம்.யூ., ஸ்விஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபைனான்ஸ், யேல்.

தொழில்நுட்பம் மற்றும் நிதி மேலாண்மையில் சர்வதேச உயர்கல்வி பெற்ற அர்ச்சனா கல்பாத்தியின் இந்த நியமனம், திருக்கோயில் நிர்வாக மேம்பாட்டிற்குப் பெரிதும் துணையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்செல்வி