AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

எய்ம்ஸ் நர்சிங் அலுவலர் பணியிட வாய்ப்பு!

By admin | Aug 16, 2026

த்திய அரசு மற்றும் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் எனப்படும் எய்ம்ஸ் நிறுவனங்களில் காலியாக உள்ள நர்சிங் அலுவலர் பணியிடங்களை நிரப்ப 11-வது என்ஓஆர்சிஇடி போட்டித் தேர்வுக்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகள் மற்றும் மத்திய அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 2,218 செவிலியர் அலுவலர் பணியிடங்கள் இந்தத் தேர்வின் மூலமாக நிரப்பப்பட உள்ளன. மருத்துவத் துறையில் அரசுப் பணியை எதிர்பார்க்கும் செவிலியர் பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு முடித்த நபர்களுக்கு இதுவொரு மிகச் சிறந்த வாய்ப்பாகும்.

கல்வித் தகுதி மற்றும் அனுபவம்

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் வேட்பாளர்கள் இந்திய நர்சிங் கவுன்சில் அல்லது மாநில நர்சிங் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து பி.எஸ்சி ஹானர்ஸ் நர்சிங், பி.எஸ்சி நர்சிங் அல்லது போஸ்ட் பேசிக் பி.எஸ்சி நர்சிங் முடித்திருக்க வேண்டும். மேலும் மாநில அல்லது மத்திய நர்சிங் கவுன்சிலில் செவிலியர் மற்றும் மருத்துவ உதவியாளராகப் பதிவு செய்திருக்க வேண்டும்.

அல்லது ஜெனரல் நர்சிங் அண்ட் மிட்வைஃபரி எனப்படும் டிஜிஎன்எம் டிப்ளமோ படிப்பை முடித்து நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருப்பதுடன், குறைந்தபட்சம் 50 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனையில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு மற்றும் சம்பள விவரம்

விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். மத்திய அரசின் விதிமுறைகளின்படி எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை தளர்வு உண்டு.

இப்பணிக்குத் தேர்வாகும் நபர்களுக்கு ஏழாவது ஊதியக் குழுவின் படி பே லெவல் 07 அடிப்படையில் மாதம் 9,300 ரூபாய் முதல் 34,800 ரூபாய் வரை ஊதியமும், கூடுதல் தகுதிக்கான கிரேடு பே 4,600 ரூபாயும் வழங்கப்படும். இதர படிகளுடன் சேர்த்து ஆரம்பக்கட்ட சம்பளமாக மாதம் சுமார் 60,000 ரூபாய்க்கும் மேல் பெற முடியும்.

தேர்வு செய்யப்படும் முறை

எய்ம்ஸ் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் இந்த நியமனம் கணினி வழித் தேர்வு அடிப்படையில் இரண்டு கட்டங்களாக நடைபெறும்.

முதல் கட்டத் தேர்வு அல்லது முதற்கட்ட எழுத்துத் தேர்வு 2026 செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெறும். இதில் செவிலியர் பாடப்பிரிவில் இருந்து 80 கேள்விகளும், பொது அறிவு மற்றும் ஆப்டிடியூட் பிரிவில் இருந்து 20 கேள்விகளும் என மொத்தம் 100 கேள்விகள் கேட்கப்படும்.

முதற்கட்டத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் இரண்டாம் கட்ட முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். இந்த இரண்டாம் கட்டத் தேர்வு 2026 செப்டம்பர் 30 ஆம் தேதி நடைபெறும். இதில் செவிலியர் தொடர்பான மருத்துவ வழக்குகள் சார்ந்த 160 கேள்விகள் கேட்கப்படும். இரண்டு தேர்வுகளிலுமே தவறான பதில்களுக்கு மூன்றில் ஒரு பங்கு மதிப்பெண்கள் கழிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்

பொது மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக 3,000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 2,400 ரூபாய் கட்டணமாகும். மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு எந்தவித விண்ணப்பக் கட்டணமும் கிடையாது. இந்தக் கட்டணத்தை ஆன்லைன் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை மற்றும் கடைசி நாள்

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் எய்ம்ஸ் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.aiimsexams.ac.in  மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இணையதளத்தில் புதிய பதிவை மேற்கொண்டு தேவையான தனிப்பட்ட விவரங்கள், கல்விச் சான்றிதழ்கள், புகைப்படங்கள் மற்றும் கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 2026 ஆகஸ்ட் 13 மாலை 5.00 மணி வரை ஆகும்.