நம் நாட்டில் சராசரியாக ஒரு நாளில் 300 குழந்தைகள் காணாமல் போவதாகவும், தமிழகத்தில் காணாமல் போகும் மூன்று குழந்தைகளில் ஒரு குழந்தைப் பற்றிய தகவல்கள் கடைசிவரை தெரிவதேயில்லை என்றும் கூறப்படுகிறது. இதனிடையே ரயில் நிலையங்களில் காணாமல் போகும் குழந்தைகளை மீட்க 150 பேர் கொண்ட தன்னார்வலர் கொண்ட அமைப்பு ஒன்றை தமிழக ரயில்வே போலீசார் துவக்கியுள்ளனர். இதனை ரயில்வே போலீஸ் ஏடிஜிபி சைலேந்திரபாபு துவக்கி வைத்தார். குறிப்பாக ரயில் நிலையங்களில் குழந்தைகள் அடிக்கடி காணாமல் போவது கடந்த 3 ஆண்டுகளாக தொடர் சம்பவங்களாக நடந்து வருகின்றது. கடந்த 2017ம் ஆண்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மர்மப்பெண் ஒருவரால் கடத்தப்பட்ட துாத்துக்குடியைச் சேர்ந்த 5 வயது சிறுவன் இதுவரை கிடைக்க வில்லை. இதே போல ரயில் நிலையங்களில் இருந்து சிறுவர், சிறுமிகள் காணாமல் போவது தொடர்பான புகார்கள் அதிகமாக வருகின்றன. இது போன்று குழந்தைகள் காணாமல் போவதை தடுக்கும் வகையில் தமிழக ரயில்வே போலீசில் கூடுதல் டிஜிபி சைலேந்திரபாபு புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளார். அதன் படி ரயில் நிலையங்களில் அனாதையாக நிற்கும் குழந்தையை மீட்டு அவர்களை உடனடியாக போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கும் பணியை செய்ய தனி அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
அதாவது சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையத்தில் பணிபுரியும் ரயில்வே ஊழியர்கள், போர்ட்டர்கள் மற்றும் டாக்சி, ஆட்டோ டிரைவர்களை ஒருங்கிணைத்து உதயம் தன்னார்வலர்கள் என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு ரயில்வே போலீசாரின் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் வாரா வாரம் ரயில் நிலையங்களில் பிளாட்பாரங்களில் ரோந்து சென்று அங்கு தனியாக அனாதையாக நிற்கும் குழந்தைகளை மீட்டு அது குறித்து உடனடியாக சைல்டு ஹெல்ப்லைன் 1098 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிப்பார்கள். உடனடியாக அந்த குழந்தைகளை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைப்பார்கள்.
நேற்று உதயம் தன்னார்வ அமைப்பின் தொடக்க விழா சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நேற்று நடந்தது. ரயில்வே போலீஸ் கூடுதல் டிஜிபி சைலேந்திரபாபு இதனை துவக்கி வைத்தார். உதயம் தன்னார்வ அமைப்பில் இணைந்துள்ள ரயில்வே ஊழியர்கள், ஆட்டோ டிரைவர்கள், கல்லுாரி மாணவிகளுக்கு ரயில்வே போலீசார் மூலம் வழங்கப்பட்ட அடையாள அட்டையை வழங்கினார்.
இது குறித்து சைலேந்திரபாபு கூறுகையில், ‘‘அனைத்து ரயில் நிலையங்களிலும் போலீசார் எப்போதும் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். இனி தினமும் 100 பேர் பணியில் இருப்பார்கள். அவர்கள் சென்னை மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்களில் ஷிப்ட் முறையில் பணியில் இருப்பார்கள். அனாதையாக நிற்கும் குழந்தைகளை மீட்டு ரயில்வே போலீஸ் நிலையங்களில் ஒப்படைப்பார்கள். இதில் சென்னை எத்திராஜ் பெண்கள் கல்லுாரியைச் சேர்ந்த மாணவிகள் உறுப்பினராக உள்ளனர். அவர்கள் வாரத்துக்கு ஒரு நாள் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பணியில் இருப்பார்கள். குழந்தைகள் காணாமல் போவதை தடுக்கும் முதல் முயற்சியாக இது தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த முயற்சி தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய ரயில் நிலையங்களிலும் அமைக்கப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது”என்று அவர் தெரிவித்தார்.