தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் கணக்கெடுப்பின்படி, 2 கோடியே 51 லட்சத்து 47 ஆயிரத்து 56 வாகனங்கள் உள்ளன. சென்னை யில் மட்டும் 2 லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் உள்ளன. இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு சாலை விபத்தும் அதிகரிக்கிறது. தமிழகம் தான் சாலை விபத்தில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. ஆண்டுக்கு சராசரியாக 60,000 சாலை விபத்துக்கள் நடக்கின்றன. இதில் ஆண்டுதோறும் 16,000 பேர் உயிரிழக்கின்றனர். சாலை விபத்துக்களை தடுக்க போக்குவரத்து அதிகாரிகள் பல நடவடிக்கைகள் எடுத்தாலும் அது பலன் அளிப்பதில்லை.
இந்த நிலையில், கடந்த 2017ல் தமிழகத்தில் நடந்த சாலை விபத்துக்கள் குறித்து புள்ளியல் துறை உதவி இயக்குனர் கிருஷ்ணன், புள்ளியல் ஆய்வாளர்கள் கீதா, ரபியா பஸ்ரி ஆகியோர் ஆய்வு நடத்தி அதன் அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் 2001ம் ஆண்டை ஒப்பிடும்போது, 2017ல் வாகனங்கள் எண்ணிக்கை 156 சதவீதம் அதிகரித்துள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் சாலை விபத்து குறித்து பல்வேறு ஆராய்ச்சி களை மேற்கொண்டோம். தமிழக அரசு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக ஆண்டுக்கு ரூ.65 கோடி நிதி ஒதுக்குகிறது. இந்த நடவடிக்கை மூலம் சாலை விபத்தால் உயிரிழப்பு ஏற்படுவதை வரும் 2020ம் ஆண்டுக்குள் 50 சதவீதம் குறைக்க முடியும்.
2017ல் சாலை விபத்தால் 16,157 பேர் உயிரிழந்துள்ளனர். 2018ல் 11,962 ஆகவும், 2019ல் 7761 ஆகவும், 2020ல் 3,572 ஆகவும் உயிரிழப்பை தடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2017ல் 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம், சாலை விபத்தில் சிக்கிய 2,23,339 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். 73,121 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு உயிர் பிழைத்துள்ளனர். தமிழகத்தில் ஆண்டுதோறும் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
2001ல் நடந்த விபத்தை ஒப்பிடும் போது, அதை விட 2016ல் 37 சதவீதம் சாலை விபத்து அதிகரித்து உள்ளது. 2016ல் நாள் ஒன்று சராசரியாக சாலை விபத்தில் 47 பேர் உயிரிழந்தனர். 2017ல் அது 44 ஆக குறைந்துள்ளது. 2017ல், அரசு பஸ்களால் மட்டும் 2796 விபத்துக்கள் ஏற்பட்டு, அதில் 1020 பேர் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலான விபத்துக்கள் பைக்குகளால்(38.73 சதவீதம்) தான் ஏற்படுகிறது. டிரைவர்களின் தவறால் நடந்த விபத்துகளில் தான் அதிகபட்சம் 96.23 சதவீதம் பேர் உயிரிழந்து உள்ளனர். பைக்கில் செல்பவர்கள் ஹெல்மெட் அணியாததால் தான் 72 சதவீதம் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. பெரும்பாலான விபத்துக்கள் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடக்கிறது. அந்த நேரங்களில் கனரக வாகனங்கள் அதிகம் வந்து செல்வதே விபத்துக்கு காரணம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2017ல் விபத்துக்கு காரணமாக இருந்த 7469 டிரைவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் 922 பேரின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டில் 2017ல் தான் அதிக டிரைவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது