மனித குலத்தின் நாகரிக வளர்ச்சி என்பது வெறும் உயரமான கட்டிடங்களையோ அதிநவீன தொழில்நுட்பங்களையோ மட்டும் அளவுகோலாகக் கொண்டது அல்ல. மாறாக, ஒவ்வொரு குடிமகனுக்கும் கிடைக்கக்கூடிய அடிப்படை சுகாதார வசதிகள் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு முறைகளைக் கொண்டே அந்த நாகரிகத்தின் உண்மையான வளர்ச்சி அளவிடப்படுகிறது. அந்த வகையில், கழிவறை என்பது வெறும் கழிவு அகற்றும் ஒரு கூடம் மட்டுமல்ல; அது மனிதனின் உடல்நலத்தை, சுயமரியாதையை மற்றும் சமூக சமத்துவத்தை நிர்ணயிக்கும் மிக முக்கியமான கட்டமைப்பு ஆகும். பண்டைய சிந்து சமவெளி நாகரிகம் மற்றும் ரோமானியப் பேரரசு காலத்திலிருந்தே நேர்த்தியான கழிவுநீர் மேலாண்மையுடன் கூடிய கழிவறை அமைப்புகள் பயன்பாட்டில் இருந்துவந்துள்ளன. நவீன காலகட்டத்தில், நமது வாழ்வியலில் இந்திய முறை மற்றும் மேற்கத்திய முறை எனப் பல பரிமாணங்களில் பரிணமித்துள்ள இந்த அமைப்புகள், வீடுகள் தொடங்கி பொது இடங்கள், மருத்துவமனைகள் மற்றும் போக்குவரத்துச் சாதனங்கள் வரை தவிர்க்க முடியாத அங்கமாக மாறிவிட்டன.
பெண்களின் பாதுகாப்பும் தடையற்ற கல்வியும்
சுகாதாரமின்மை என்பது வெறும் உடல் சார்ந்த நோய்களை மட்டுமல்லாமல், பெண்களின் தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் சமூகக் கண்ணியத்தையும் நேரடித் தாக்குதலுக்குள்ளாக்குகிறது. குறிப்பாக, கிராமப்புறங்களிலும் பின்தங்கிய நகர்ப்புறங்களிலும் திறந்தவெளியை நாடும் அவலநிலையில் உள்ள பெண்களும் இளம் பெண் பிள்ளைகளும் தினசரி பலவிதமான அச்சங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. திறந்தவெளியில் மலம் கழிக்கச் செல்லும் பெண்கள் மற்றும் இளம் சிறார்கள் சமூக விரோத செயல்களுக்கும் வன்கொடுமைகளுக்கு ஆளாகும் கொடூர நிகழ்வுகள் இன்றும் நம் கண்முன்னே அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன. அதுமட்டுமின்றி, பள்ளிகளில் முறையான கழிவறை வசதிகள் இல்லாத காரணத்தாலேயே பல பெண் பிள்ளைகள் மாதவிடாய் காலங்களில் கல்வியைத் பாதியில் கைவிடும் துயர நிலையும் தொடர்கிறது. முறையான கழிவறை வசதி என்பது பெண்களின் கண்ணியமான வாழ்வுக்கும், தடையற்ற கல்விக்கும், அவர்களின் சம உரிமைகளுக்கும் வித்திடும் அடிப்படை வழியாகும்.
மொபைல்போன் கலாச்சாரமும் பச்சிளம் குழந்தைகள் இறப்பும்
உலகளாவிய புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் சுகாதாரம் மற்றும் கழிவறை வசதி இல்லாததால் ஏற்படும் பாதிப்புகள் நாட்டின் எதிர்காலச் சந்ததியையே முடக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளன. மனிதர்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான கழிவறை வசதியை விட, கையில் மொபைல்போன் வசதியைப் பெற்றிருப்பவர்களின் எண்ணிக்கை நம் நாட்டில் அதிகமாக உள்ளது என்பதுதான் மறுக்க முடியாத கசப்பான உண்மையாகும். இந்தியாவில் சுமார் 60 கோடி பேருக்கு, அதாவது 55 சதவீத மக்களுக்கு கழிவறை வசதி இல்லை என்கிறது புள்ளிவிவரம். இன்றளவும் கோடிக்கணக்கான மக்கள் முறையான கழிவறை வசதியின்றித் தவிக்கும் சூழலில், இதனால் பரவும் ஆபத்தான நோய்களால் அதிக எண்ணிக்கையிலான பச்சிளம் குழந்தைகள் உயிரிழக்க நேரிடுகிறது. மேலும், அடிக்கடி ஏற்படும் வயிற்றுப்போக்கு மற்றும் நீர்வழித் தொற்று நோய்களால் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவுக்கும் மூளை வளர்ச்சிப் பாதிப்புகளுக்கும் ஆளாகின்றனர். இது நாட்டின் எதிர்கால மனிதவளத்தை வெகுவாகப் பாதிப்பதோடு, மருத்துவச் செலவுகளால் ஏழை எளிய குடும்பங்களை நிரந்தர வறுமைக்குள் தள்ளுகிறது.
நீர்வழி நோய்களும் சமூகப் பாதுகாப்பும்
திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கமானது காலரா, டைபாய்டு, கடுமையான வயிற்றுப்போக்கு, கிருமித் தொற்றுகள் மற்றும் புழுத் தொற்றுகள் போன்ற பல்வேறு நீர்வழிப் பரவும் நோய்கள் எளிதில் பரவுவதற்குப் பெருமளவில் காரணமாகிறது. மலம் மூலமாக வெளியாகும் பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருசிகள் நிலத்தடி நீரையும் குடிநீரையும் மாசுபடுத்துவதன் மூலம் ஒட்டுமொத்த சமூகத்தின் சுகாதாரத்தையே சீர்குலைக்கின்றன. சரியான கழிவறை வசதிகளும் பாதுகாப்பான கழிவுநீர் மேலாண்மையும் அமல்படுத்தப்படும்போது, இந்தத் தொற்றுநோய்களின் பரவலைத் திறம்பட்ட முறையில் கட்டுப்படுத்த முடியும். இது பொது மருத்துவச் செலவினங்களைக் குறைப்பதோடு, ஆரோக்கியமான மற்றும் ஆற்றல்மிக்க ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கு மிக இன்றியமையாத அடித்தளமாகவும் அமைகிறது.
பாதுகாப்பான கழிவறைகள் மற்றும் சமமான எதிர்காலங்கள்
இத்தகைய கடுமையான உலகளாவிய பிரச்சினைகளை உலக நாடுகளின் கவனத்திற்குக் கொண்டு சென்று, அவற்றுக்கான தீர்வுகளைத் தீவிரப்படுத்திட ஐக்கிய நாடுகள் அவை 2013-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19-ஆம் தேதியை உலக கழிவறை தினமாக அதிகாரப்பூர்வமாகக் கடைபிடித்து வருகிறது. அந்த வரிசையில், இந்த ஆண்டிற்கான மையக்கருவாக பாதுகாப்பான கழிவறைகள் மற்றும் சமமான எதிர்காலங்கள் என்னும் கோட்பாடு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தீம் எதை உணர்த்துகிறது என்றால், ஒவ்வொரு மனிதனுக்கும் பாதுகாப்பான கழிவறை வசதி உறுதி செய்யப்படும்போது மட்டுமே பாலின சமத்துவம், பொருளாதார வளம் மற்றும் கல்விக்கான சம வாய்ப்புகள் சாத்தியமாகும். அதாவது, ஒருவரின் சுகாதாரம் அவரது எதிர்காலத்தின் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தி வாய்ந்த கருவியாகச் செயல்படுகிறது என்பதை இந்த மையக்கரு உலகிற்கு ஆழமாக உரக்கச் சொல்கிறது.
உயிரி கழிவறைகளும் நீர்ச் சிக்கனமும்
காலம் மாறிவருவதற்கேற்ப, கழிவறை தொழில்நுட்பங்களிலும் வியக்கத்தக்க மாற்றங்கள் வந்து குவிந்துள்ளன. இன்றைய சூழலில் அதிகரித்து வரும் நீர் பற்றாக்குறையைக் கருத்திற்கொண்டு, குறைந்த அளவு நீரைப் பீய்ச்சி அடிக்கும் நவீன அமைப்புகள் பரவலாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி, மின்சாரம் மற்றும் கூடுதல் நீர் தேவையின்றி மனிதக் கழிவுகளை உரமாக மாற்றும் உயிரி கழிவறைகள் மற்றும் கழிவுகளைத் தானியங்கி முறையில் சுத்திகரித்து மறுசுழற்சி செய்யும் தொழில்நுட்பங்கள் சூழலியல் பாதுகாப்பிற்குப் பெரும் துணையாக நிற்கின்றன. இயற்கை வளங்களைச் சூறையாடாமல், எதிர்காலத் சந்ததியினருக்குத் தூய்மையான சுற்றுப்புறத்தைப் பரிசளிக்கும் வகையில் நிலைத்தன்மை வாய்ந்த கட்டமைப்பு முறைகளை நோக்கி உலகம் நகர்வது காலத்தின் கட்டாயமாகும்.
சமமான எதிர்காலத்தை நோக்கி ஒன்றிணைவோம்
தனி மனிதத் தூய்மை என்பது குடும்பத்தின் ஆரோக்கியத்தை உறுதி செய்கிறது; குடும்பங்களின் ஆரோக்கியம் ஒரு கிராமத்தின் பலமாகிறது; கிராமங்களின் பலம் ஒரு நாட்டின் எழுச்சியை நிர்ணயிக்கிறது. அந்த வகையில், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான கழிவறை வசதியை முழுமையாக உறுதி செய்வது அரசின் கடமை மட்டுமல்லாமல் சமூகத்தின் கூட்டுப் பொறுப்புமாகும். விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள், தீவிர கட்டமைப்பு மேம்பாடுகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்களின் பயன்பாடு ஆகியவற்றின் மூலமாகத் திறந்தவெளியில் மலம் கழிக்கும் அவல நிலையை முழுமையாக ஒழிக்க வேண்டும். இந்த உலக கழிவறை தினத்தில், அனைவருக்குமான பாதுகாப்பான கழிவறைகளை அமைத்து, சமமான மற்றும் வளமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான உறுதியை நாம் அனைவரும் இணைந்து ஏற்போம்.
வாத்தீ அகஸ்தீஸ்வரன்