ஆண்டுதோறும் அக்டோபர் 28-ஆம் தேதி இயங்கும்படங்களை கவுரவிக்கும் வகையில் சர்வதேச அனிமேஷன் தினமாகக் கொண்டாடப்படும் வேளையில், மனிதக் கற்பனையின் உன்னத எல்லையைத் தொட்ட ஒரு கலை வடிவத்தைப் பற்றிய சிந்தனை மேலெழுகிறது. வெறும் கோடுகளாகவும் வண்ணங்களாகவும் மனிதனின் கற்பனையில் உருப்பெற்ற ஒரு நுட்பம், இன்றைக்கு உலகத் திரைத்துறையைத் தன் வசப்படுத்தி வைத்திருக்கும் பிரம்மாண்டமான வர்த்தகமாகவும் கலை வடிவமாகவும் வளர்ந்து நிற்கிறது.
குகை ஓவியங்களில் விதைக்கப்பட்ட வித்து
அனிமேஷன் என்பது நவீனக் கணினிகளின் வருகையால் மட்டுமே சாத்தியமான திடீர் அதிசயமன்று. இதன் தொடக்கப் புள்ளிகள் மனித நாகரிகத்தின் ஆதிச் சுவர்களில் ஆழமாகப் பதிக்கப்பட்டுள்ளன. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆதிமனிதன் குகைச் சுவர்களில் வரைந்த ஓடும் மிருகங்களின் தொடர் ஓவியங்களும், நமது பாரம்பரிய நிழல் மற்றும் தோல்பாவைக் கூத்துக்களுமே அனிமேஷன் பிறப்பதற்கான முதன்மை விதைகள். ஒன்றன்பின் ஒன்றாக வரும் படங்களை அதிவேகமாக நகர்த்திப் பார்க்கும்போது, அவை உயிர்பெற்று இயங்குவது போன்ற மாயையை நமது கண்கள் உணர்கின்றன. இந்த ஒளியியல் மாயையை அடிப்படையாகக் கொண்டே, காகிதங்களில் வரையும் பாரம்பரிய முறையிலிருந்து தொடங்கி இன்றைய நவீன கணினி மென்பொருள்கள் வரை அனிமேஷன் துறை அசுர வளர்ச்சி கண்டுள்ளது. டிரெடிஷனல் அனிமேஷன், இருபரிமாண மற்றும் முப்பரிமாண அனிமேஷன், ஜப்பானியர்களின் தனித்துவமான ‘அனிமே’, பொருட்களுக்கு உயிரூட்டும் ‘ஸ்டாப் மோஷன்’ என இதன் கிளைகள் இன்று விரிந்து பரந்துநிற்கின்றன.
சாமானியரின் பார்வையை ஈர்த்த மிக்கி மவுஸ்
நூற்றாண்டின் தொடக்கத்தில் பல்வேறு கதாபாத்திர உருவாக்கம் நிகழ்ந்திருந்தாலும், அனிமேஷன் என்ற கலைப் படிவத்தைச் சாமானிய மக்களின் இதயத்திற்குள் கொண்டு சேர்த்த பெருமை ‘மிக்கி மவுஸ்’ கதாபாத்திரத்தையே சாரும். வால்ட் டிஸ்னி உருவாக்கிய இந்த எளிய கதாபாத்திரம் அடைந்த மாபெரும் வெற்றி, உலகளவில் அனிமேஷனை ஒரு முன்னணிப் பொழுதுபோக்குத் துறையாக மாற்றியது. விரிவாகச் சொல்வதானால் 1900களின் ஆரம்பத்தில் அனிமேஷன் வேலைப்பாட்டை ஒட்டிய கதாபாத்திரங்களை உருவாக்கும் பணிகள் தொடங்கியிருந்தாலும், ‘மிக்கி மவுஸ்’ கார்ட்டூன் கதாபாத்திரத்தின் வெற்றியால் சாமானியரின் பார்வையும் அனிமேஷனின் மேல் விழத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து ‘பாப்பய்’, ‘டாம் அண்ட் ஜெர்ரி’ என வரிசையாக அனிமேஷனைப் பயன்படுத்தி குழந்தைகளுக்கான கார்ட்டூன்கள் உருவாக்கப்பட்டன. கார்ட்டூன்களை அடுத்து ‘டாய் ஸ்டோரி’, ‘ஐஸ் ஏஜ்’ உள்ளிட்ட முழு நீள அனிமேஷன் திரைப்படங்களும் வெளிவரத் தொடங்கின. கூடவே ‘ஜுராஸிக் பார்க்’, ‘ஹாரி பாட்டர்’ போன்ற படங்களில் கற்பனைக் கதாபாத்திரங்களை உருவாக்க அனிமேஷன், கிராஃபிக்ஸ் கருவிகள் பயன்படுத்தப்பட்டன. இவை குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களையும் கவர்ந்தன.
ASIFA அமைப்பும் 2026-ன் அதிகாரப்பூர்வ போஸ்டரும்
சர்வதேச அனிமேஷன் திரைப்பட அமைப்பு (ASIFA) ஒவ்வொரு ஆண்டும் உலகப் புகழ்பெற்ற அனிமேட்டர் ஒருவரைத் தேர்ந்தெடுத்து, அன்றைய ஆண்டிற்கான அதிகாரப்பூர்வ போஸ்டரை வடிவமைக்கும் பொறுப்பை வழங்கி வருகிறது. அந்த வகையில், 2026-ஆம் ஆண்டிற்கான அதிகாரப்பூர்வ போஸ்டரை முன்னணி ஜப்பானிய அனிமேட்டரான யோரிகோ மிசுஷிரி வரைந்துள்ளார்.
கலைஞரின் தத்துவமும் 2026-ன் கருப்பொருளும்
ஜப்பானியக் கலைஞர் யோரிகோ மிசுஷிரியின் கூற்றுப்படி, இந்த போஸ்டர் அனிமேஷன் துறையின் ஆழமான தத்துவத்தைப் பிரதிபலிக்கிறது:
அனிமேஷன் என்பது தனிநபர் சாதனயன்று; அது எண்ணற்ற கரங்களின் கூட்டமைப்பு. வரையும் கரங்கள், அதைத் தாங்கிப்பிடிக்கும் கரங்கள், அடுத்த தலைமுறைக்குக் கலை நுட்பத்தைக் கடத்தும் கரங்கள் என அனைத்தும் ஒன்றிணையும் போதுதான் அது ஒற்றைப் படைப்பாக உருப்பெறுகிறது. போஸ்டரில் கரங்களைக் பிணைத்திருக்கும் ஒளிகசியும் டேப்பில் செருகப்பட்டுள்ள கத்தரிக்கோல், பழைய சகாப்தத்தின் முடிவையும் புதிய தொழில்நுட்பப் பாய்ச்சலின் தொடக்கத்தையும் உணர்த்துகிறது. இது பாரம்பரியத் தொடர்ச்சிக்கும், நவீன மாற்றத்திற்கும் இடையிலான மெல்லிய இறுக்கத்தைக் காட்சிப்படுத்துகிறது. அதில் வரையப்பட்டுள்ள ஒற்றை நூல் கோடு, நேரத்தின் ஓட்டத்தையும் வரைபடக் கோட்டையும் ஒரே புள்ளியில் இணைக்கிறது. பென்சிலின் முனையிலிருந்து புறப்படும் அந்த நூல், தன் பயணத்தில் மெல்ல மெல்ல உயிர்பெறத் தொடங்குகிறது. வரலாற்றை நினைவுகூர்ந்து எதிர்காலத்தைப் பிரதிபலிப்பதே 2026-ன் மையக்கருத்து. மனிதக் கரங்களால் தொடர்ந்து செதுக்கப்பட்டு, காலத்தின் தேவைக்கேற்பத் தன்னைத்தானே தகவமைத்துக் கொள்ளும் இந்த மாறாத கலை, எதிர்காலத் தலைமுறைக்கும் தனது கற்பனைச் சிறகுகளால் வியப்பூட்டிக் கொண்டே இருக்கும்.
வாத்தீ அகஸ்தீஸ்வரன்