விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் பிரேம்குமார் இயக்கியிருக்கும் படம் ’96’. அடுத்த வாரம் இப்படம் திரைக்கு வருகிறது. 96ல் நடக்கும் ஒரு காதல் கதை என்பதால் ’96’ என்ற டைட்டில் வைத்து இருக்கிறார் இயக்குநர் பிரேம்குமார். இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையில் படத்தின் இரண்டு பாடல்கள் திரையிடப்பட்டது.
இந்நிகழ்வில் பேசிய படத்தின் கலை இயக்குநர், ”தான் 12 ம் வகுப்பு படிக்கும் போது ‘மெளனம் பேசியதே’ படம் வெளியானது அப்போதே த்ரிஷாவைப் பார்த்து, நானும் எனது நண்பர்களும் “எனக்கு தான்..எனக்கு தான்…” என்று சொந்தம் கொண்டாடினோம் . ஆனால், இன்று அவங்களோட படத்தில் பணிபுரிந்தது ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறது.” என்றார்.
அடுத்து பேசிய இசையமைப்பாளர் கோவிந்த வசந்தா பேசும் போது கூட, த்ரிஷாவின் தீவிர ரசிகன் நான், அவரை திரையில் பார்க்கும் போது இசையமைப்பதைக் காட்டிலும், அவரை ரசிப்பதில் தான் ஆர்வமாக இருந்தேன்.” என்றார்.
பின்னர் த்ரிஷா பேசும் போது, இந்தப் படம் ஒரு ஹீரோயினுக்காகவே எழுதப்பட்ட படம். விஜய் சேதுபதி கூட போட்டி போட்டு நடிக்கவில்லை. அவர் கேஷூவல் கேரக்டராக பண்ணியிருக்கிறார் என விஜய் சேதுபதியைப் பாராட்டி பேசியவர் இசை யமைப்பாளர் கோவிந்த் வசந்தாவின் இசையையும் பாராட்டிப் பேசினார்.
முத்தாய்ப்பாக விஜய் சேதுபதி பேசிய போது,” இந்தப் படம் இயக்குநர் பிரேம் மூலம் தொடங்கப் பட்டது. செக்கச் சிவந்த வானம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வாங்க என சொல்லியிருந்தேன். அது போல இந்த 96 படத்துக்கு என்னால சொல்ல முடிய வில்லை. ஏனென்றால் இந்த படத்தின் டிரெய்லர், பாடல்களுக்கு கிடைத்த வரவேற்பு அப்படியாகி விட்டது.இதுவே என்னை பயமுறுத்தி விட்டது.
1996-ம் ஆண்டு தஞ்சாவூரில் பிளஸ் டூ படித்து முடித்த மாணவ, மாணவிகள் 20 வருடங்கள் கழித்து சென்னையில் சந்தித்துக் கொள்கிறார்கள். அப்போது அவர்களில் இருவரான நாயகன் எனக்கும், நாயகியான திரிஷாவுக்கும் இடையில் என்ன நடக்கிறது என்பதுதான் இந்தப் படத்தின் கதை.
இந்தக் கதை ஒரே இரவில் நடந்து முடியும் கதை. படம் பார்ப்பவர்களையும் அவர்களது பழைய பள்ளிக் கால நினைவுகளை அசை போட வைக்கும். சின்ன வயது விஜய் சேதுபதி, திரிஷாவாக நாங்கள் நடிக்கவில்லை. அதற்கெல்லாம் வெயிட்டையெல்லாம் குறைத்து மெனக்கெடணும். இயக்குநரும் அதை விரும்பவில்லை. அதனால் வேறு ஆர்ட்டிஸ்ட்டுகள் அதில் நடித்திருக்கிறார்கள்.
நான் எப்போதும் வெளிப்படையாக பேச மாட்டேன். ஏனென்றால் நான் மிகவும் பயந்த சுபாவம் கொண்டவன். அப்படித்தான் த்ரிஷாவை பார்த்தால் சின்ன வயசில் இருந்து எனக்கு பயம். நான் வீட்டுப்பாடம் செய்யவில்லை என்றால் என் அம்மா த்ரிஷாவை காட்டிதான் பயமுறுத்துவார்கள். த்ரிஷாவை எல்லோரும் சீனியர் என்கிறார்கள். பொதுவாக ஹீரோயின்கள் சின்ன வயதிலேயே சினிமாவுக்குள் வந்து விடுவார்கள். அதுபோல் தான் திரிஷாவும். என்னைவிட திரிஷா ஏழு வருடங்களாகவது இளையவராக இருப்பார்” என படம் குறித்த அனுபவத்தைப் சொன்னார்.
தொடர்ந்த விஜய் சேதுபதி தனது வீட்டில் நடந்தது வருமான வரித்துறை சோதனை அல்ல என விளக்கமளித்தார். இது தொடர்பாக மேலும் அவர் பேசுகையில், “எனது வீட்டில் நடந்தது வருமான வரித்துறை சோதனை இல்லை. அது சர்வே என அதிகாரிகள் கூறினர். வருமான வரித்துறையில் சர்வே என ஒன்றிருப்பது குறித்து எனக்கே இப்போது தான் தெரியும். நான் கடந்த மூன்று வருடங் களாக முன்பணமாக வரி கட்டி வருகிறேன். ஆனால் ரிட்டன் தாக்கல் செய்யவில்லை. எனது ஆடிட்டர் திடீரென போய் ரிட்டன் தாக்கல் செய்ததால், வருமான வரித்துறையினர் வந்து சர்வே செய்தனர். இது தான் நடந்தது.
அதற்குள் ஐடி ரெய்டு என தகவல் பரவிவிட்டது. அதுவும் ஒரு பப்ளிசிட்டி தான். பொதுவாக தவறான செய்திகள் தான் வேகமாக பரவும். நாம் காசு கொடுத்தால்கூட அது கிடைக்காது. இது தான் டிரெண்ட்: பிறகு நம் ஊரில் சமீபகாலமாக கண்டதை பேசினால்தான் பப்ளிசிட்டி கிடைக்கும் என்று சமீபகாலமாக ஒரு டிரெண்ட் இருக்கு. பப்ளிக்கா கத்திப் பேசிட்டு, அப்புறம் நான் பேசல என்னோட அட்மின் பேசினாரு என்று சொல்லலாம். இல்ல மிமிக்கிரி பண்ணிட்டாங்கன்னு சொல்லலாம். பயந்த சுபாவம்: அது மாதிரி என் வீடு போல் செட் போட்டு செக் பண்ணிருக்காங்க. அது என் வீடே இல்ல. என் வீடு போன்ற செட் போட்டு செக் பண்ணி இருக்கலாம்” என சொல்லி சிரித்தார் விஜய் சேதுபதி. .