AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

நான் ஜோஷ்வா திட்டத்தில் அங்கம் வகிக்கிறேனா? உதயகுமார் காட்டம்!

By admin | Aug 03, 2019

ஒரு முன்னணித் தமிழதழின் நிருபர் நேற்று (ஆக. 2, 2019) மதியம் என்னை அழைத்து, இந்துக்களை கிறித்தவர்களாக மதம்மாற்றும் “ஜோஷ்வா திட்டத்தில்” (Joshua Project) நீங்களும் ஓர் அங்கமாமே எனக் கேட்டார். நான் ஒரு கிறித்தவர் என்றும் எனது பெயர் ‘ஸ்டீபன்’ என்றும் சனாதனக் கும்பல் நீண்டகாலமாகவே ஒரு பரப்புரையைச் செய்து வருகிறது. இந்த புதுக்கதையைக் கேட்டு வாய் விட்டுச் சிரித்தேன்.

நான் கட்டமைக்கப்பட்ட எந்த மதத்தையும் ஏற்றுக்கொள்ளவில்லை. எந்தவிதமான சாதி, மத அமைப்புக்களிலும் உறுப்பினராகவோ, ஆதரவாளராகவோ நான் இருக்கவில்லை, இருக்கவும் மாட்டேன். நான் கடவுளை நம்பாதவன். கடவுள் வியாபாரத்தை, கடவுள் புரோக்கர்களை ஏற்றுக் கொள்ளாதவன்.

அதே நேரம், வெறும் ‘பொருள்’ மட்டுமே இந்த உலகு, இங்கே ‘அருளு’க்கு இடமில்லை என்று நினைக்கிறவனுமல்ல நான். எனவே இயற்கையை, முன்னோரை, குலதெய்வங்களை வணங்குகிறேன். மனித வாழ்வில் (நம்மை முட்டாள்களாக்காத, முடக்கிப்போடாத) சில நம்பிக்கைகளும், கொண்டாட்டங்களும், வண்ணங்களும், வாணவேடிக்கைகளும் இருக்கவேண்டுமேன்று விரும்புகிறவன்.

சனாதனக் கும்பல், ‘மனுஸ்மிருதி’ ஓர் அயோக்கியத்தனமான, கடைந்தெடுத்தக் கயமை என்று ஒப்புக்கொண்டு, தீட்டு, தீண்டாமை, காணாமை, சதி போன்றவை மனிதகுலத்துக்கு எதிரான மாபெரும் குற்றங்கள் என்பதை ஏற்றுக்கொண்டு, இந்துக்கள் அனைவரும் ஒரே குலம், பூணூலுக்கு இனி இங்கே வேலையில்லை, எந்த இந்துவும் எந்தக் கோவிலிலும் அர்ச்சகர் ஆகலாம் என்று அறிவிக்கட்டும், உடனேயே “நான் ஓர் இந்து” என்றறிவித்து இயங்க ஆரம்பிக்கிறேன்.

சுப. உதயகுமார்