AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு! – ஐகோர்ட் அறிவுறுத்தல்!

By admin | Sep 24, 2018

தமிழக அரசுக்கு சொந்தமான 71 புள்ளி 70 லட்சம் ஏக்கர் நிலத்தில், 5 புள்ளி 6 லட்சம் ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதாக இந்திய தணிக்கை துறையின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டு இருந்தது . இது மொத்த நிலத்தில் 7 சதவீதம் எனவும் கடந்த ஆண்டு ஜூன் மாத நிலவரம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், நிரந்தர குடியிருப்பாக 65 ஆயிரத்து 383 ஏக்கர் நிலமும், நிரந்தர குடியிருப்பு இல்லாத வகையில் 34 ஆயிரத்து 199 ஏக்கர் நிலமும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்றும் இது போல, தற்காலிக பயிர்கள் மற்றும் மரங்கள் மூலம் 3 லட்சத்து 47 ஆயிரத்து 287 ஏக்கரும், இதர பயன்பாடுகள் மூலம் 43 ஆயிரத்து 336 ஏக்கர் நிலமும் ஆக்கிரமிப்பில் உள்ளதாக கூறப்பட்டிருந்த நிலையில் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பவர்களுக்கு கருணை காட்டக்கூடாது என்றும், அவர்களுக்கு பட்டா வழங்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தாலுகா இருப்பாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன், தனது குடும்பச் சொத்து பாகப்பிரிவினை செய்தபோது கிடைத்த நிலத்திற்கு தனது பெயரில் பட்டா வழங்க கோரி மேட்டுப்பாளையம் தாசில்தாரிடம் விண்ணப்பித்துள்ளார்.

ஆனால் அந்த நிலம் அரசு புறம்போக்கு நிலம் எனக்கூறி பட்டா வழங்க மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து லட்சுமணன் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், சம்பந்தப்பட்ட நிலத்தை ஆய்வு செய்து சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.
மேலும் அவரது உத்தரவில், சமீபகாலமாக அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவது குறித்து வேதனை தெரிவித்ததுடன், பட்டாக்கள் வழங்கும் முன் வருவாய் ஆவணங்களை முறையாக சரிபார்த்து வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதேபோல அரசு நிலம் ஆக்கிரமிப்பு நிலங்களை கண்டறிந்து அவற்றை அகற்ற அந்தந்த மாவட்ட ஆட்சியர் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும், அரசு நிலத்திற்கு பட்டா பதிவு செய்து கொடுத்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

அரசு நிலங்கள், நீர்நிலைகள் போன்றவற்றை ஆக்கிரமித்தவர்களுக்கு எந்த கருணையும் காட்டக் கூடாது எனவும் அரசு நிலங்கள் மக்கள் நலனுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.