AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

கல்வி வளர்ச்சியை கண்டு கொள்ளாத அரசு!

By admin | Mar 28, 2018

அரசு பள்ளிகளில் 6 வயது முதல் 14 வயதுடைய குழந்தைகள் 100 சதவீதம் ஆரம்பக் கல்வியை கற்க வேண்டும் என்பதற்காக, இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009யை மத்திய அரசு அமல்படுத்தியது. இதன்படி, பள்ளி யில் இருந்து மாணவர்கள் இடைநிற்றலை தடுத்தல், வாசித்தல், எழுதுதல், கேட்டல் பண்பை அதிகரித்தல், முப்பருவ திட்டம், பள்ளி உட்கட்டமைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இருப்பினும் மாணவர், பெற்றோர், ஆசிரியர் தரப்பில் இச்சட்டம் குறித்த விழிப்புணர்வு குறைவாக இருப்பதாக முன்னரே தகவல்கள் வெளியான நிலையில் கல்வி கற்கும் உரிமை சட்டத்தை, நாட்டில், 8 சதவீத பள்ளிகள் மட்டுமே பின்பற்றும் தகவல் வெளியாகியுள்ளது.

சமூக நல அமைப்புகளின் கூட்டமைப்பு, கல்வி கற்கும் உரிமை சட்டம் குறித்த மாநாட்டை, டெல்லியில் நேற்று நடத்தியது. இதில், 20 மாநிலங்களில் இருந்து, அரசு சாரா அமைப்புகளை சேர்ந்த, 10 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவு விபரம் இதோ:

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 3 சதவீதம் மட்டுமே, கல்விக்காக செலவிடப் படுகிறது. ஆனால், 6 சதவீதம் செலவிடப்பட வேண்டும் என, உலக நாடுகள் கூறுகின்றன. உலகின் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில், செலவிடப்படுவதை விட, நான்கு மடங்கு குறைவாக, கல்விக்கான தனி நபர் செலவினம், இந்தியாவில் உள்ளது. அதாவது  இந்தியா தனது பட்ஜெட்டில் ஆண்டுக்கு 0.06% தொகையை, மாணவர்களின் மனநலனை பாதுகாக்கும் திட்டங்களுக்கு செலவழிக்கிறது. பங்களாதேஷ் 0.44% செலவழிக்கிறது. உலகின் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில், செலவிடப்படுவதை விட, 4 மடங்கு குறைவாக, கல்விக்கான தனி நபர் செலவினம் இந்தியாவில் உள்ளது பள்ளி ஆசிரியர்களில், 20 சதவீதம் பேர், முறையான பயிற்சி பெறாதோர். கல்வி மையங்களில், வளர்ச்சிக்கான கல்வியின் தேவை உள்ளது. இதற்காக, பல்வேறு சீர்திருத்த சட்டங்கள் இயற்றப்பட்டபோதும், அவற்றை அமல்படுத்துவதில், அரசுகள் அலட்சியமாக உள்ளன. 

இதையடுத்து  மாநாட்டில் பேசிய  சுப்ரீம் கோர்ட் நீதிபதி, மதன் பி.லோகுர், “இந்தியாவில் உள்ள பள்ளிகளில், 8 சதவீதம் மட்டுமே, கல்வி உரிமை சட்டத்தை பின்பற்றுகின்றன. இந்த சட்டம், மிகுந்த ஆலோசனைகளுக்கு பின் இயற்றப்பட்டது. ஆனால், இதை செயல்படுத்துவதில் மந்த போக்கு காணப்படுவதால், ஒரு தலைமுறை குழந்தைகள், அடிப்படை கல்வி அறிவு பெற முடியாமல் போகிறது. இந்தியாவில் கல்வியின் தரம், மிக மோசமான நிலையில் உள்ளது. காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல், கல்வியின் தரத்தை உயர்த்த முடியாது”. இவ்வாறு அவர் கூறினார்.