AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

மோடி அரசு தாக்கல் செய்த கடைசி ஆண்டான 2018 – 19 க்கான பொது பட்ஜெட்!

By admin | Feb 02, 2018

பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நேற்று மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். இதை காண பார்வையாளர்களாக அவருடைய மனைவி சங்கீதா ஜெட்லி, மகன் ரோகன் ஜெட்லி, அருண் ஜெட்லியின் சகோதரி மது பார்கவா உள்ளிட்டோர் வந்திருந்தனர். பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு செய்தியாளர்களிடம் சங்கீதா ஜெட்லி கூறுகையில், என்னுடைய கணவர் தாக்கல் செய்த பட்ஜெட்டுக்கு 10–க்கு 9 மதிப்பெண் அளிப்பேன். இதில் சில மனித தவறுகள் நடந்திருப்பதால் 10–க்கு 10 மதிப்பெண் அளிக்கவில்லை என்றார். பட்ஜெட்டை காங்கிரஸ் குறை கூறியிருப்பதாக செய்தியாளர்கள் கேட்டதற்கு, அவர்களின் வேலையே குற்றங்களை கண்டுபிடிப்பது தான் என்றார்.

முன்னதாக நேற்று பாராளுமன்ற கூட்டம் தொடங்கியதும் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஆரம்ப உரையை வாசித்தார். பின்னர் மகாராஷ்டிரா பாஜக எம்.பி. சிந்தாமன் வங்கா மறைவுக்கு மக்களவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.பின்னர், 2018 – 19க்கான பொது பட்ஜெட் தாக்கல்: நிதியமைச்சர் அருண் ஜெட்லி பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கினார்.

அருண் ஜெட்லி வாசித்த பட்ஜெட் உரையின் சுருக்கம்

உலக அளவில் இந்தியா வேகமாக வளர்ந்து வரும் நாடாக இருந்து வருகிறது. அந்நிய முதலீடு, அதிக அளவில் உயர்ந்துள்ளது. ஜிஎஸ்டி மற்றும் மறைமுக வரி சீர்த்திருத்தங்களால் வரி செலுத்துவது மிகவும் எளிமையாக உள்ளது.

சராசரியாக 3 ஆண்டுகளில் 7.5 சதவீத பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளோம்.

2018-2019 நிதியாண்டின் இரண்டாம் பகுதியில் 7.2-7.5 சதவீத வளர்ச்சி வரை இருக்கும். உலகின் 5 ஆவது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா விரைவில் திகழும்.

8 சதவீதத்திற்கும் அதிகமான பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது

மே 2014-ல் பாஜக ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததில் இருந்து இந்திய பொருளாதாரம் சிறப்பாக உள்ளது

நேர்மறையான மற்றும் வெளிப்படையான அரசை நடத்துவோம் என 4 ஆண்டுகளுக்கு முன்னர் உறுதியளித்தோம் .

சிறந்த நிர்வாகத்தை வழங்கவேண்டும் என்பதில் பிரதமர் நரேந்திர மோடி உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளார்.

மாநில அரசுகளுடன் இணைந்து கல்வித்தரத்தை உயர்த்துவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நாட்டின் உணவு தானிய உற்பத்தி கணிசமாக அதிகரித்துள்ளது.

விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

2022 ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக வேண்டிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

விவசாயம்

உணவு தானிய உற்பத்தி உயர்வு. விவசாயிகளின் வருமானத்தை 2022ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக உயர நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இயற்கை வளங்களை ஒதுக்கீடு செய்வதில் வெளிப்படையான நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.

இந்திய பொருளாதாரத்தில் அடிப்படை சீரமைப்பு பணிகளில் மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. உலகின் 5வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா விரிவடையும்.

8 விழுக்காடு ஒட்டு மொத்த வளர்ச்சி என்ற இலக்கை நோக்கி இந்தியா முன்னேறுகிறது.

2.5 லட்சம் கோடி அமெரிக்க டாலர் மதிப்பு கொண்டதாக இந்திய பொருளாதாரம் உருவெடுத்துள்ளது

விவசாய சந்தைகள் அமைக்க ரூ. 2000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விளை பொருளின் ஆதார விலை உயர்வு. இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க மாநில அரசுகளுடன் நிதி ஆயோக் இணைந்து செயல்படும்.

வரும் காரிஃப் பருவத்திற்கான குறைந்த பட்ச ஆதார விலையை 150 சதவீதம் உயர்த்துகிறோம்.

வேளாண் பொருட்களுக்கான ஏற்றுமதி விதிமுறைகளை எளிமையாக்க நடவடிக்கை

விவசாய உள்கட்டமைப்புக்கு ரூ. 22,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விவசாய கழிவுகளை எரிக்காமல் பயன்படுத்த புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

விவசாயிகளின் கடன் இலக்கு ரூ. 11 லட்சம் கோடியாக உயர்வு

மீன் வளம், கால்நடைத்துறை உள்கட்மைப்புக்கு ரூ. 10,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

உணவு பதப்படுத்த ரூ. 715 கோடி ஒதுக்கீடு

வேளாண் உற்பத்தியை மேம்படுத்த வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது

கிராமப்புற தரம் உயர்வு

4 கோடி கிராமப்புற வீடுகளுக்கு கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும்.

நாடு முழுவதும் புதிய கழிவறைகளை கட்டுவதற்கு ரூ 2,000 கோடி ஒதுக்கீடு   அடுத்த ஓராண்டிற்குள்  புதிய கழிவறைகள் கட்டித்தரத் திட்டம்.

தேசிய வாழ்வாதார திட்டத்திற்கு ரூ.5750 கோடி ரூபாய் ஒதுக்கீடு

தேசிய ஊரக பகுதி சாலை திட்டம் மூலம் சுமார் 3.21 கோடி பேருக்கு வேலை வழங்க முடிவு

மகளிர் சுய உதவிக்குழு ரூ. 75 ஆயிரம் கோடி கடன் வழங்கத் திட்டம்.

8 கோடி ஏழைப் பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு வழங்கத் திட்டம்.

காற்று மாசைக் கட்டுப்படுத்த டெல்லி, ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களுக்கு நிதியுதவி

நீர்ப்பாசன, கிராமப்புற வேலை வாய்ப்புக்கு ரூ. 14.34 லட்சம் கோடி ஒதுக்கீடு

கிஷான் கிரெடிட் கார்டு உபயோக வசதிக்கு விரிவாக்கம்.

ஏழை எளிய மக்களுக்கு மின்சாரம் வழங்க ரூ. 16,000 கோடி ஒதுக்கீடு

96 மாவட்டங்களில் நிலத்தடி நீர் பாசனத்திற்காக ரூ. 2,600 கோடி நிதி ஒதுக்கீடு

ரயில் சேவை

குஜராத் மாநில பரோடாவில் ரயில்வே பல்கலைக்கழகம் அமைக்கத் திட்டம்

ரயில்வே துறை திட்டத்திற்கு ரூ. 1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு

4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லெவல் கிராஸிங்கில் ஆட்கள் நியமிக்கப்படுவர்

25,000 ரயில் நிலையங்களில் தானியங்கி நகரும் படிகள் அமைக்கப்படும்

பெரம்பூரில் ரயில் பாக்டரியின் மூலம் அதி நவீன ரயில் பெட்டிகள் தயாரிக்க திட்டம்

பெங்களூரில் புறநகர் ரயில் நிலையங்கள் சேவை மேம்பாட்டுக்கு ரூ. 17,000  கோடி ஒதுக்கீடு

3,600 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரயில் பாதைகள் மேம்படுத்தப்படும்

2019ஆம் ஆண்டுக்குள் 4000 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படும்

நாடு முழுவதும் 600 ரயில் நிலையங்கள் சீரமைக்கப்பட்டு நவீனமயமாக்கப்படும்

அனைத்து ரயில்களிலும்  சி.சி.டி.வி கேமராக்கள் மற்றும் வைஃபை வசதி ஏற்படுத்த நடவடிக்கை

18,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு இரட்டை அகல ரயில்பாதை திட்டம்

விமான நிலையங்கள்

இந்தியாவில் மேலும் 5 மடங்கு விமான நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்

விமான சேவைகளை மேம்படுத்தும் வகையில் 124 விமான நிலையங்களின் தரம் ஐந்து மடங்கு அளவிற்கு உயர்த்தப்படும்

உதான் திட்டத்தின் கீழ், பயன்படுத்தப்படாமல் உள்ள 56 விமான நிலையங்களும், 31 ஹெலிபேடுகளும் இணைக்கப்படும்

மருத்துவம்

நாடு முழுவதும் 5 லட்சம் மருத்துவமனைகள் அமைக்கப்படும்

நாடு முழுவதும் 24 புதிய அரசு மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படும். 3 மக்களவைத் தொகுதிகளுக்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற விகிதம் எட்டப்படும்

இலவச மருந்து மற்றும் இலவச உடல் பரிசோதனை என்கிற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்க ரூ.1200 கோடி ஒதுக்கீடு முழுவதும் கூடுதலாக 1.5 லட்சம் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும்

தேசிய ஆரோக்கிய பாதுகாப்பு திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 10 கோடி ஏழை குடும்பங்கள் பலன் பெறும்.

காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதம் ரூ. 500 உதவித்தொகையாக வழங்கப்படும். காச நோயாளிகளின் ஊட்டச்சத்தை மேம்படுத்த ரூ.600 கோடி ஒதுக்கீடு

தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் 1.5 லட்சம் மையங்கள் அமைக்கப்படும்

10 கோடி ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு தலா 5 லட்சம் மருத்துவ செலவுக்கு வழங்கப்படும்

புதிய இலவச மருத்துவத் திட்டதிற்கு சுகாதாரத்துறைக்கு ரூ. 1200 கோடி ஒதுக்கப்படும்

கிராமப்புற சுகாதாரத்திற்கு ரூ. 16,713 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

50 கோடி இந்தியர்களுக்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவ சிகிச்சைக்கான பொறுப்பை மத்திய அரசு ஏற்கும்

கல்வி

பள்ளிகளில் கரும்பலகைக்கு பதில் டிஜிட்டல் பலகைகள் வைக்க அரசு நடவடிக்கை எடுக்க திட்டம்

மாணவர்களுக்கு கல்வியை நவீன முறையில் வழங்க ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்படும்

கல்வி மற்றும் ஆராய்ச்சிக்காக ரூ 1 லட்சம் கோடி ஒதுக்கீடு

மாணவர்களின் விளையாட்டுத்திறனை மேம்படுத்த ஏகலைவன் பள்ளிகள் அமைக்கப்படும்

கல்வித்துறை, சமூக நலத்துறை, சுகாதாரத்துறை திட்டங்களுக்கு ரூ.1.34 லட்சம் கோடியை ஒதுக்கியது மத்திய அரசு

வேலை வாய்ப்பு

70 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவானதாக அண்மையில் வெளியான பொருளாதார ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முத்ரா யோசனா திட்டத்தின் கீழ் ரூ 3 லட்சம் கோடி கடன் வழங்கத் திட்டம்

சிறு, குறு தொழில்கள் மேம்பாட்டுக்கு ரூ.4000 கோடி ஒதுக்கீடு, சிறு, குறு தொழில் நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் கடன் பெறும் வசதி எளிமையாக்கப்படும்

பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும்

கடந்த 3 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன

சிறு, குறு தொழில் செய்வோரின் வரி பாரம் குறைக்கப்படும்

மாற்றுத் திறனாளிகள், கணவனை இழந்த பெண்களுக்கு சமூக பாதுகாப்புத் திட்டம்

ஜவுளித் துறை வளர்ச்சிக்கு ரூ 7,140 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

இபிஎஃப் திட்டத்தில் சேரும் புதிய ஊழியர்களுக்கு 12 சதவீதத்தை அரசு வழங்கும்

ஸ்மார்ட் சிட்டி திட்டம்

ரூ.2.04 லட்சம் கோடியில் 99 நகரங்கள் ஸ்மார்ட் சிட்டிக்களாக தரம் உயர்த்தப்படும்

கங்கை நதியை தூய்மைப்படுத்த 187 திட்டங்கள் அறிமுகம்

கங்கையை தூய்மைப்படுத்துவது தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்தது

நமாமி கங்கை திட்டத்தின் கீழ் 187 திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது

10 சுற்றுலா நகரங்கள் உலகத்தரத்தில் மேம்படுத்தப்பட்டு மிகச்சிறந்த சுற்றுலா தளமாக்கப்படும்

இணையதள வசதி

1 லட்சம் கிராமங்களில் பாரத் நெட் திட்டத்தின் கீழ் இணையதள வசதி

கிராமப்புறங்களில் 5 லட்சம் இலவச வைஃபை ஹாட் ஸ்பாட் வசதி செய்து கொடுக்கப்படும்

5 கோடி கிராம மக்கள் பலன் பெறும் வகையில் 5 லட்சம் இலவச வைஃபை ஹாட் ஸ்பாட்

தேசிய நெடுஞ்சாலை

தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் செலுத்தும் முறை எலக்ட்ரானிக் முறைக்கு மாற்றப்படும்

வரும் நிதி ஆண்டில் 9000 கி.மீ தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும்

உலகப் பொருளாதாரம் டிஜிட்டல் பொருளாதாரமாக மாறி வருகிறது

டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு ரூ 3,073 கோடி ஒதுக்கீடு

பிட் காயின் போன்ற ஆன்லைன் திட்டங்களை ஒழிக்கத் திட்டம்,

கிரிப்டோ கரன்சிக்களின் வளர்ச்சியை மத்திய அரசு தடுத்து நிறுத்தும்

குடியரசுத் தலைவரின் மாத ஊதியம் ரூ.5 லட்சமாக உயர்வு, குடியரசு துணைத் தலைவரின் மாத ஊதியம் ரூ.4 லட்சமாக உயர்வு

ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை எம்.பிக்களின் ஊதியம் மாற்றி அமைக்கப்படும்.  ஏப்ரல் 1ம் தேதி முதல் எம்.பி.க்களின் சம்பளம் விலைவாசிக்கு மாற்றியமைக்கப்படும்

தொழில் நிறுவனங்களுக்கு ஆதர் அட்டை போன்ற தனி அடையாள எண் வழங்கத் திட்டம்

2 ராணுவ தளவாட உற்பத்தி முனையங்கள் ஏற்படுத்தப்படும்

பொதுத்துறை பங்கு விற்பனை

பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து அரசு பங்குகளை விலக்கிக் கொள்வதற்கான இலக்கு ரூ.80,000 கோடியாக நிர்ணயம்

பொதுத்துறை பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் அளவு வரும் நிதி ஆண்டு அதிகரிக்கப்படும்

2018 – 19 நிதியாண்டில், அரசு பங்குகளை விலக்கிக் கொள்வது இலக்கை விஞ்சிவிட்டது

2018 – 19 நிதியாண்டில், நிதித்துறையில் 3.3 சதவீதம் நிதி பற்றாக்குறையாக இருக்கும்.

ஆண்டுக்கு ரூ 250 கோடிக்கு மேல் வருவாய் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரி குறைக்கப்படும்

வரி செலுத்துவோர் எண்ணிக்கை 8.27 கோடியாக உயர்ந்துள்ளது

தனி நபர் வருமான வரி உச்சவரம்பு ரூ. 2.5 லட்சம் என்பதில் மாற்றமில்லை

தனி நபர் வருமான வரி வருவாய் 12.6 சதவீதம் உயர்வு

வருமான வரி செலுத்துவோருக்கு மருத்துவ செலவினங்களில் நிரந்தர கழிவு சலுகையாக ரூ. 40,000 அறிவிப்பு

செல்போன் இறக்குமதி வரி 15 %த்திலிருந்து 20 சதவீதமாக உயர்வு

இறுதியாக 2018-2019 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் உரையை 12.52 மணியளவில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி  நிறைவு செய்தார்.

பட்ஜெட் உரை முடிந்ததை அடுத்து,  திங்கட் கிழமைக்கு (5.2.2018)  அவை ஒத்திவைக்கப்பட்டது.

அருண் ஜெட்லி வாசித்த பட்ஜெட் உரையின் முழு நகலையும் காண ஆந்தை மோடி பட்ஜெட் என்ற லிங்கை சொடுக்கவும்