மொசூல் நகரில் 3 ஆண்டுகளுக்கு முன்னர் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் இறந்துவிட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
(PTI3_20_2018_000098A)
ஈராக்கின் இரண்டாவது பெரிய நகரமான மொசூலில் பணிபுரிந்து வந்த இந்திய தொழிலாளர்கள் கடந்த 2014ஆம் ஆண்டு ஜூனில் ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டனர். ஈராக்கின் பல்வேறு பகுதிகள் ஐஎஸ் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியதைத் தொடர்ந்து, மொசூல் நகரை விட்டு வெளியேற முயன்றபோது இந்தியத் தொழிலாளர்கள் தீவிரவாதிகளால் சிறைப்பிடிக்கப்பட்டு கடத்தப்பட்டனர். பெரும்பாலும் பஞ்சாப்பிலிருந்து சென்ற தொழிலாளர்களே தீவிரவாதிகள் பிடியில் சிக்கிய நிலையில், அதிலிருந்து தப்பிய குருதாஸ்பூரை சேர்ந்த ஹர்ஜித் மஸி என்பவர், மற்றவர்கள் அனைவரையும் தீவிரவாதிகள் கொன்றுவிட்டதாகக் கூறியிருந்தார். ஆனால் அரசு இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக ஏற்கவில்லை.
மேலும் பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், மேற்குவங்கம், பீகார் ஆகிய 4 மாநிலங்களைச் சேர்ந்த 39 தொழிலாளர்கள் ஈராக்கில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. மொசூல் நகரம் ஐஎஸ் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகும், 39 இந்திய தொழிலாளர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதைக் கண்டறிய எடுக்கப்பட்ட பல்வேறு முயற்சிகள் பயனளிக்கவில்லை. அதேசமயம், ஈராக்கின் பதூஷ் பகுதியில் தோண்டியெடுக்கப்பட்ட 39 உடல்கள், பாக்தாத்திற்கு அனுப்பப்பட்டன. அவை கடத்தப்பட்ட இந்தியர்களுடையதா என்பதைக் கண்டறிய, 39 இந்தியர்களின் குடும்பத்தினரிடமிருந்து மரபணு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பாக்தாத்திற்கு அனுப்பப்பட்டன.
இந்நிலையில், ஈராக்கின் மொசூல் நகரில் கடத்தப்பட்ட 39 இந்தியர்களும் கொல்லப்பட்டு விட்டதாக, மாநிலங்களவையில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார். 38 பேரின் டிஎன்ஏ மாதிரிகள் முழுமையாகப் பொருந்திப் போவதாகவும், ஒரு உடலின் டிஎன்ஏ மாதிரி 70 சதவீதம் பொருந்திப்போவதாகவும் அவர் கூறினார். வெளியுறவு இணையமைச்சர் வி.கே.சிங் ஈராக் சென்று, விமானத்தின் மூலம் 39 உடல்களையும் கொண்டுவர உள்ளதாக சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.