கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா முழுவதும் நாடக வடிவில் மேடையேற்றப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்டு இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியைப் பரப்பி வந்த ‘பிரஜாபதி’ ஆன்மீகப் படைப்பு, தற்போது உலகத் தரம் வாய்ந்த திரைப்படமாக உருவெடுக்கிறது. APF Production House தயாரிப்பு நிறுவனம், இம்மாபெரும் படைப்பை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் புதிய பயணத்தை முறைப்படி தொடங்கியுள்ளது.
இயல், இசை, நாடகம் ஆகிய கலை வடிவங்களின் வழியே இயேசுவின் நற்செய்தியை உலகிற்கு அறிவிக்கும் உயர்ந்த அழைப்பைத் தம் வாழ்நாள் பணியாகக் கொண்டு, கால் நூற்றாண்டிற்கு முன்பே ‘பிரஜாபதி’ நாடகத்தை இயற்றி அரங்கேற்றிய முனைவர் பி. ரூபர்ட் ரகுநாதன் இத்திரைப்படத்தை இயக்குகிறார்.
இறைப்பணியும் பிரம்மாண்டக் காட்சி அனுபவமும்
திரைப்படம் குறித்து இயக்குனர் முனைவர் பி. ரூபர்ட் ரகுநாதன் பகிர்ந்ததாவது:
“‘பிரஜாபதி’ என்பது ஒரு வரலாற்றுச் சம்பவத்தை மட்டும் சித்தரிக்கும் திரைப்படமல்ல; மனிதகுலம் முழுவதற்கும் இறைவன் அருளிய அன்பு, கிருபை, இரக்கம் மற்றும் இரட்சிப்பின் மகத்துவத்தை வெளிப்படுத்தும் ஒரு புனிதமான இறைப்பணியாகும்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, நற்செய்தி ஊழியம், நிகழ்த்திய அற்புதங்கள், பாடுகள், சிலுவை மரணம் மற்றும் மகிமையான உயிர்த்தெழுதல் ஆகிய அனைத்து நிகழ்வுகளையும் மாபெரும் திரை அனுபவமாக உயிர்ப்பிக்கும் விவிலியத் திரைப்படமாக இது அமையும். விவிலியத்தின் உண்மையான தரவுகளின் அடிப்படையில், உயர்தரத் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்படும் இத்திரைப்படம், அனைத்து மொழிகள், கலாச்சாரங்கள் மற்றும் தலைமுறைகளையும் சென்றடையும் நோக்கத்தைக் கொண்டது.”
மக்கள் பங்களிப்பில் உருவாகும் வரலாற்றுப் படைப்பு
‘பிரஜாபதி’ திரைப்படம் “இந்தியாவிலிருந்து உலக நாடுகளுக்கு” என்ற உயரிய நோக்கத்தோடு, மக்கள் பங்களிப்பு (Crowdfunding) முறை மூலம் உருவாக்கப்பட்டு வருகிறது.
இத்திரைப்படத்தில் நடித்திருப்பவர்கள் திரையுலகைச் சேர்ந்த தொழில்முறை நடிகர்கள் அல்ல என்பது இதன் மிக முக்கிய சிறப்பம்சமாகும். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பிரஜாபதி நாடகத்தில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டு சேவை செய்து வரும் கலைஞர்களே இதில் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒவ்வொரு நடிகரும் முழுமையான தியாக உணர்வுடனும், ஆழ்ந்த அர்ப்பணிப்புடனும் இதில் பங்கேற்றுள்ள நிலையில், விரைவில் இத்திரைப்படம் திரைக்கு வந்து உலகெங்கும் உள்ள மக்களை சென்றடையும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.