AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

மெல்லிசை மன்னர் கடந்து வந்த பாதை இதுதான்!

By admin | Jul 14, 2015

சென்னை தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த, இசையமைப்பாளர் எம்.எஸ்., விஸ்வநாதன், இன்று அதிகாலை 4.15 மணிக்கு காலமானார். சென்னை சாந்தோமில் உள்ள அவரது இல்லத்தில் உடல் வைக்கப்பட்டுள்ளது. 87 வயதான விஸ்வநாதன், 1200 திரைப்படங்களுக்கு இசை அமைத்து உள்ளார். ராமமூர்த்தி உடன் 700 படங்களுக்கும் தனியாக 500 படங்களுக்கும் இசை அமைத்துள்ளார். .

வாழ்க்கை வரலாறு: எம்.எஸ்.விஸ்வநாதனின் சொந்த ஊர் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள இலப்புள்ளி கிராமம். தந்தை பெயர் சுப்பிரமணியன்; தாயார் நாராயணி.கேரள வழக்கப்படி ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு பரம்பரை பெயர் உண்டு. ‘மனையங்கத் ஹவுஸ்’ என்பது எம்.எஸ்.விஸ்வநாதனின் பரம்பரை பெயர். அதனால்தான் மனையங்கத் சுப்பிரமணியன் விஸ்வநாதன் என சேர்த்து ‘எம்.எஸ்.விஸ்வநாதன்’ ஆனார்.

எம்.எஸ்.விஸ்வநாதன் 1928-ம் ஆண்டு ஜுன் மாதம் 24-ந்தேதி பிறந்தார். அப்போது தந்தை சுப்பிரமணியன் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் பொதுப்பணித்துறையில் வேலை பார்த்து வந்தார். எம்.எஸ்.விஸ்வ நாதன் குழந்தையாக இருந்தபோது, சில பிரச்சினை காரணமாக சுப்பிரமணியன் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டார். அதன் பின்னர் திருச்சியில் ‘ஜெயில் வார்டர்’ வேலை கிடைத்தது. தாய் வழி தாத்தா கிருஷ்ணன் நாயரும் அங்கே ஜெயில் வார்டர் பணியில் இருந்தார்.

திருச்சியில் இருந்தபோது, சுப்பிரமணியன் திடீரென்று நோய்வாய்ப்பட்டு இறந்து போனார். அப்போது எம்.எஸ். விஸ்வநாதனுக்கு 4 வயது. தந்தை இறந்த 15 நாட்களுக்குள் இன்னொரு இழப்பும் ஏற்பட்டது. விஸ்வநாதனின் தங்கை வேசம்மாவும் மரணம் அடைந்தார். இந்த சோகங்களை 4 வயதில் விஸ்வநாதன் தாங்க நேரிட்டது.

எனவே ஊரார் விஸ்வநாதனை ‘அதிர்ஷ்டமில்லாதவன்’ என்று ஏளனமாகப் பேசினார்கள். இதனால் விஸ்வநாதனின் தாயார் நாராயணி, மிகவும் மனதளவில் பாதிக்கப்பட்டார். அதனால் ஒரு விபரீத முடிவு எடுத்தார்.

ஒரு நாள் அதிகாலை 3 மணிக்கு மகன் விஸ்வநாதனை எழுப்பினார், நாராயணி. மகனை தோளில் தூக்கி வைத்துக்கொண்டு, திருச்சியிலிருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் சாலைக்கு சென்றார். ஒரு குளக்கரையில் வந்து நின்றனர்.

மகனை குளத்தில் தள்ளிவிட்டு, தானும் குதித்து தற்கொலை செய்து கொள்ளத் தீர்மானித்தார்.

என்ன நடக்கப்போகிறது என்பதை லேசாகப் புரிந்து கொண்ட விஸ்வநாதன், ‘நீ முதலில் குதிம்மா’ என்றார்.

‘ஏன்டா, அப்படிச் சொல்றே?’ என்றார், தாயார்.

‘என்னை தள்ளிவிட்டு, நீ அப்புறம் குதிக்காமல் தப்பிச்சுப் போயிட்டா என்ன செய்வது?’ என்றார், விஸ்வநாதன்.

இப்படி தாய்க்கும், மகனுக்கும் இடையே உரையாடல் நடந்து கொண்டிருந்தபோது, அங்கே தாத்தா கிருஷ்ணன் நாயர் வந்தார். நடந்ததை தெரிந்து கொண்டார். ‘நாராயணிக்குட்டி! செத்துப்போயிட்டா எல்லாம் சரியா போயிடுமா? இதென்ன பைத்தியக்காரத்தனம்! அந்த புள்ளைய குளத்தில் தள்ள எப்படி உனக்கு மனம் வந்தது? நான் இருக்கும்போது உனக்கென்ன கவலை? உங்களையெல்லாம் நான் காப்பாற்றாமல் போயிடுவேனா? வா, வீட்டுக்கு!’ என்று ஆறுதல் கூறி இருவரையும் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.

தாத்தா கிருஷ்ணன் நாயர் வீட்டில் வளர்ந்த வருக்கு இசை மீது ஆர்வம் இருந்தது. நீலகன்ட பாகவதர் என்பவரிடம் கர்நாடக இசையை கற்றுக்கொண்டு 13 வயதிலேயே மேடை கச்சேரி செய்தார்.பின்னர் இசையமைப்பாளர் சி.ஆர்.சுப்புராமன் இசைக்குழுவில் சேர்ந்து ஆர்மோனியம் வாசித்தார். அப்போது டி.கே.ராமமூர்த்தி அதே குழுவில் வயலின் வாசித்தார். சி.ஆர்.சுப்புராமனுடைய மறைவால் முழுமை பெறாமல் இருந்த தேவதாஸ், சண்டிராணி, மணமகள் ஆகிய படங்களின் இசையமைப்பு பணியை அவரின் உதவியாளர்களாக இருந்த விஸ்வநாதனும், ராமமூர்த்தியும் சேர்ந்து முடித்துக் கொடுத்தார்கள்.

இந்த படங்கள் வெற்றி பெற்றதால், இந்தியில் சங்கர்-ஜெய்கிஷன் என்ற பெயரில் புகழ்பெற்ற இரட்டை இசையமைப்பாளர்கள் இருந்தது போல் தமிழில் விஸ்வநாதன்-ராமமூர்த்தி என்ற இரட்டை இசையமைப்பாளராக உருவாகலாம் என்ற எண்ணத்தை விஸ்வநாதன், ராமமூர்த்தியிடம் தெரிவித்தார். அதை ராமமூர்த்தியும் ஏற்றுக்கொண்டார்.

இருவரும் ‘பணம்’என்ற படத்துக்கு முதலில் இணைந்து இசையமைத்தார்கள். தொடர்ந்து, ‘ஆயிரத்தில் ஒருவன்’படம் வரை 700 படங்களுக்கு இணைந்து இசையமைத்தார்கள். அதன்பிறகு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தார்கள். எம்.எஸ்.விஸ்வநாதன் மட்டும் தனியாக 500 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். இளையராஜாவுடன் சேர்ந்து, மெல்ல திறந்தது கதவு, செந்தமிழ் பாட்டு, செந்தமிழ் செல்வன் ஆகிய 3 படங்களுக்கு இசையமைத்தார்.