AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

100 கோடி வானவில் – விமர்சனம்!

By admin | Nov 08, 2026

அன்பை மையமாகக் கொண்ட ஒரு வழக்கமான கதையை எடுத்துக்கொண்டு, அதைத் திரையில் எவ்வளவு ரசனைமிக்கதாக மாற்ற முடியுமோ அவ்வளவு சுவாரசியமாக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் சசி. எனினும், அடுத்து என்ன நடக்கும், கதை எந்தக் புள்ளியில் சென்று முடியும் என்பதைப் பார்வையாளர்கள் மிக எளிதாக யூகித்துவிடும் வகையில் திரைக்கதை அமைந்திருப்பது சற்றே பலவீனம். அதே சமயம், காதல் என்பது ஏதோ ஒருமுறை மட்டுமே அரும்பும் உணர்வோ அல்லது ஒருவரது மனசுக்குள் ஒருவருக்கு மட்டுமே ஒதுக்கப்படும் தனிப்பட்ட இடமோ அல்ல, அது காலத்திற்கும் மனிதர்களுக்கும் ஏற்ப மாறக்கூடியது என்ற நடைமுறை உண்மையை மிக அழகாக உணர்த்தியிருக்கிறார் இயக்குநர். கதாபாத்திரங்களின் பார்வைகள், மௌனம் மற்றும் காட்சி அமைப்புகள் வழியே இந்த ஆழமான கருத்தைச் சிறப்பான காட்சி மொழியில் கடத்தியிருப்பது படத்திற்குப் பெரு பலம். குறிப்பாக, காதல் என்பது உடலைத் தாண்டியது, அது முழுக்க முழுக்க மனம் சார்ந்தது என்பதை திருநம்பி கதாபாத்திரத்தின் வாயிலாக ஆழமாகத் தொட்டுச் சென்றிருக்கும் விதம் பாராட்டுக்குரியது. படத்தின் மிகப்பெரிய சிறப்பம்சமே அதன் உரையாடல்கள் தான்; ஒவ்வொரு வசனமும் அன்றாட வாழ்க்கையின் அனுபவங்களிலிருந்து நேரடியாகப் பிழிந்தெடுத்தது போல இயல்பாகவும் அர்த்தமுள்ளதாகவும் ஒளி வீசுகின்றன.நடை முறை வாழ்க்கையின் காதலைப் பற்றிப் பேசும் இந்தத் திரைப்படத்தை ஜி5 (ZEE5) ஓடிடி தளத்தில் கண்டு மகிழலாம்.

கதைக் களம்

சுற்றுலாப் பயணிகளின் ஆரவாரத்தால் எப்போதும் உயிர்ப்புடன் இருக்கும் கோவா மண்ணில் தொடங்குகிறது இந்தப் பயணம். அங்குள்ள அழகிய சூழலில், சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டும் பணியைச் செய்து வருகிறார் சித்தி இத்னானி. அவரது தாயாரும் சுற்றுலாத் துறையில்தான் வேலை பார்க்கிறார்; பாட்டியோ அந்தக் காலத்திலேயே கோவாவின் முன்னணி வழிகாட்டியாக வலம் வந்தவர். பரம்பரைத் தொழிலின் நிழலில் வளர்ந்தாலும், சின்னத்திரையில் ஒரு புகழ்பெற்ற தொகுப்பாளராக ஜொலிக்க வேண்டும் என்பதே சித்தியின் மிகப்பெரிய லட்சியம். அதே நேரம், இந்தியாவின் வணிகத் தலைநகரான மும்பையில் தொடர்கிறது கதை. அங்குள்ள முன்னணி தொலைக்காட்சி நிறுவனத்தில் இயக்குநராகப் பணிபுரிகிறார் ஹரிஷ் கல்யாண். தான் ஆசையோடு எதிர்பார்த்த பதவி உயர்வு கைவிட்டுப் போன ஏமாற்றத்தில், கோவாவிலுள்ள நிறுவனத்தின் கிளை அலுவலகத்தை மேம்படுத்தும் பொறுப்பேற்று அங்கே பயணிக்கிறார்.

இங்கு சித்தியின் தனிப்பட்ட வாழ்க்கை பெரும் துயரத்தைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. அவரது காதலர் எம். ரினில் சாலை விபத்து ஒன்றில் சிக்கி நினைவுத் தடம்மாறி கோமா நிலையில் மருத்துவமனையில் போராடிக்கொண்டிருக்கிறார். சித்தி ஊடகத் துறைக்குச் செல்வது ரினிலுக்குச் சுத்தமாகப் பிடிக்காது. காதலனின் மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க வழியின்றித் தவிக்கும் சித்திக்கு, எதிர்பாராத விதமாக ஹரிஷ் கல்யாணின் அலுவலகத்தில் தொலைக்காட்சித் தொகுப்பாளர் வேலை கிடைக்கிறது.ரினிலின் சிகிச்சைக்குத் தேவையான பணம் கைக்கு வருவதால் அந்த வேலையை ஏற்றுக்கொள்கிறார் சித்தி. இதற்கிடையில், சித்தியின் அர்ப்பணிப்பும் இயல்பான அழகும் ஹரிஷ் கல்யாணின் இதயத்தைக் கவர்ந்து காதலாக மாறுகிறது.

கதையின் உச்சகட்டமாக, மரணத்தின் வாசலிலிருந்து மீண்டு வருவது போல ரினில் கண்விழிக்கிறார். ஆனால், தான் எதிர்த்த துறையில் சித்தி வேலை செய்வதைக் கண்டு அவர் கொந்தளிக்கிறார். இது ஹரிஷ் கல்யாணுக்கும் ரினிலுக்கும் இடையே கடும் மோதலை ஏற்படுத்துகிறது. எதிர்பாராத இந்தக் கைகலப்பில் தலையில் அடிபடும் ரினில் மீண்டும் கோமா நிலைக்குச் சென்றுவிடுகிறார். இந்தச் சூழலில், துயரத்தில் தவிக்கும் சித்தியின் மீது ஹரிஷ் கல்யாணின் காதல் மேலும் ஆழமாகிறது. இவர்களின் காதல் கைகாட்டியதா, ரினிலின் நிலை என்னவானது, சித்தியின் கனவு நிறைவேறியதா போன்ற கேள்விகளுக்கான உணர்ச்சிகரமான விடைகளுடன் விரிகிறது படத்தின் மீதிக் கதை.

நடிகர்கள் மற்றும் அவர்களின் பங்களிப்பு

இயக்குநரின் முந்தைய படங்களின் பாணியில் இருந்து விலகி, மனித மனங்களின் சிக்கலான காதலைப் பேசும் இந்தப் படத்தில் நடிகர்களின் பங்களிப்பு கதையைத் தாங்கிப் பிடிக்கிறது.

நாயகன் ஹரிஷ் கல்யாணின் திரைத்தோற்றம் அவரது வயதுக்குண்டான இளமையுடனும் துடிப்புடனும் பொருந்தியுள்ளது. நீள்முடி கோலத்திலான அவரது தோற்றம் படத்திற்குப் புதிய மெருகூட்டுகிறது. சித்தியைக் கண்ட கணமே ஈர்க்கப்படும் அவர், பின்னர் அவளது கடந்த காலப் பின்னணியும் காதலும் தெரிந்து திகைக்கும் தவிப்பை நேர்த்தியாக முகபாவனைகளில் காட்டியுள்ளார். குறிப்பாக, சிக்கலான மனநிலை வெளிப்படும் தருணங்களில் இன்னமும் கொஞ்சம் ஆழமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கலாம்.

வாழ்நாள் லட்சியமாகக் கருதிய தொலைக்காட்சித் தொகுப்பாளர் வாய்ப்பு தேடி வரும்போது, அதை உடனே ஏற்றுக்கொள்ளாமல் நாயகி சித்தி இத்னானி தயக்கம் காட்டுவது பார்வையாளர்களுக்குச் சற்றே நம்பகத்தன்மையைக் குறைக்கிறது. இருப்பினும், திரையில் அவரது தோற்றமும் வசீகரமும் அந்தச் சிறிய குறைகளை மறக்கடித்து விடுகின்றன.

நாயகியின் காதலனாக நடித்துள்ள எம். ரினில் தமிழ் சினிமாவுக்குப் புதிய முகம் என்பதால், ஆரம்பத்தில் அவருடனான ஜோடிப் பொருத்தத்தில் ஒரு தயக்கம் ஏற்படுகிறது. ஆனால், சுயநலம் நிறைந்த அந்தப் பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து மிகவும் யதார்த்தமாக நடித்துக் கவன ஈர்ப்பைப் பெற்றுள்ளார்.

ஹரிஷ் கல்யாணின் கோவா அலுவலகக் குழுவில் இடம்பெற்றுள்ள விஜே பார்வதி, படத்தில் நகைச்சுவைப் பற்றாக்குறையை அழகாக நிவர்த்தி செய்துள்ளார். ஆங்காங்கே அவர் வீசும் கிண்டல் வசனங்கள் ரசிக்கும்படியாக உள்ளன.

அதே சமயம், சில இடங்களில் அந்த நகைச்சுவை வரம்பு மீறுவதைத் தவிர்க்க முடியவில்லை. குறிப்பாக, கோமா நிலையில் இருக்கும் ரினிலை அகற்றினால் தான் நாயகனின் காதல் வெற்றி பெறும் என்பது போன்ற அவரது சில நகைச்சுவைக் குறிப்புகள், சிரிப்பைத் தருவதற்கு மாறாக பார்வையாளர்களுக்குப் பெரும் அதிர்ச்சியையே ஏற்படுத்துகின்றன.

வழக்கமாக அதீத நடிப்பை வெளிப்படுத்தக் கூடிய கோவைக் சரளா மற்றும் தம்பி ராமையா ஆகிய இருவரையுமே, இயக்குனர் அளவோடு பயன்படுத்திச் சிறப்பான நடிப்பı வாங்கியிருப்பது படத்தின் மிகப்பெரிய பலமாகும்.

தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு

கோவா மாநிலத்தின் இயல்பான அழகியலையும் நவீனப் பொலிவையும் ஒருசேரத் திரையில் கொண்டு சேர்த்துள்ளார் ஒளிப்பதிவாளர் பிரசன்னா கே.குமார். காதலின் உன்னதத் தருணங்களையும் கதாபாத்திரங்களின் உணர்வுப் போராட்டங்களையும் தனது கேமரா கோணங்கள் வழியாகத் துல்லியமாகப் பார்வையாளர்களிடம் சேர்க்கியிருக்கிறார்.

படத்தின் மற்றொரு பெரும் பலம் சித்து குமாரின் இசை. பாடல்களின் மெட்டுகளும் வரிகளும் காதலின் ஆழத்தைப் பிரதிபலிப்பதோடு, பின்னணி இசையின் வழியாகக் கதாபாத்திரங்களின் ஏக்கத்தையும் மகிழ்ச்சியையும் நம் மனதுக்கு நெருக்கமாகக் கொண்டு சேர்த்துள்ளார் இசையமைப்பாளர்.

காதல் சிக்கல்களையும் மனித மனங்களின் உளவியல் திருப்பங்களையும் பிரதானமாகக் கொண்ட இந்தக் கதையை, எந்த இடத்திலும் தொய்வு ஏற்படாதவாறு தனது கத்தரிக்கோலால் விறுவிறுப்பாக நகர்த்தியுள்ளார் படத்தொகுப்பாளர் எம். சுபராக்.

இறுதித் திறனாய்வு

சுவாரஸ்யமான காதலும் உணர்ச்சிப்பூர்வமான தருணங்களும் நிறைந்த ஒரு கதையாக இருந்தபோதிலும், அவற்றைத் திரையில் இறுக்கமாகவும் அழுத்தமாகவும் கோர்ப்பதில் இயக்குநர் சசி சற்று தடுமாறியிருக்கிறார் என்றே கூற வேண்டும். வழக்கமான காதல் முக்கோணக் கதைகளிலிருந்து மாறுபட்டு புதிய கோணங்களை வெளிப்படுத்துவதில் திரைக்கதை சற்றே சறுக்கியுள்ளது.

குறிப்பாக, காதலுக்காகத் தனது லட்சியங்களையும் கனவுகளையும் துறந்துவிட்டுத் தவிக்கும் ஒரு பெண்ணின் மனப்போராட்டத்தை இயக்குநர் எழுத்து வழி ஆழமாகப் பதிவு செய்துள்ளார். இருப்பினும், அந்தப் பெண்ணின் மனநிலை சட்டென மாறுவதற்குக் காட்டப்பட்ட காரணங்களும், அவற்றை இயக்குநர் காட்சிப்படுத்திய முறையும் பார்வையாளர்களிடம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறிவிட்டன.

ரேட்டிங் 2.25/5