AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

100 நாள் ஆட்சியும் மாறாத லஞ்சமும்: அலட்சிய அதிகாரிகளால் சிக்கலில் சி.எம். விஜய்!

By admin | Aug 25, 2026

மிழக அரசியலில் ஒரு புதிய அலையாக ஆட்சிப் பொறுப்பேற்ற முதலமைச்சர் விஜய்யின் நிர்வாகம் 100 நாட்களைக் கடந்துள்ள நிலையில், மூத்த அரசியல் விமர்சகர்கள் மற்றும் துறை சார்ந்த வல்லுநர்களின் பார்வையில் பல்வேறு கேள்விகளும் கருத்துக்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. தலைமுறை தலைமுறையாக அரசியலில் ஊறித் திளைத்த தலைவர்கள், எப்போது எந்த அலை வீசும், எப்போது குனிய வேண்டும், எப்போது எகிறித் தாவ வேண்டும் என்பதை நன்கு அறிந்திருந்தனர். ஆனால், தற்போதைய புதிய நிர்வாகத்தில் இருப்பவர்களுக்கு அத்தகைய வரலாற்று அனுபவம் இல்லை என்பதே யதார்த்தம்.

அதிகார வர்க்கமும் அனுபவமற்ற நிர்வாகமும்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு புதிய அரசிற்குச் சட்டப்படியும் மரபுப்படியும் எது சரி, எது தவறு என்று வழிகாட்ட வேண்டிய பொறுப்பு அரசு அதிகாரிகளுக்கு மட்டுமே உண்டு. ஆனால், அந்த அதிகாரிகளைச் சுதந்திரமாகச் செயல்பட விடுகிறார்களா என்பதே பிரதானக் கேள்வி. எதிர்க்கட்சிகள் வழக்கம்போலத் தங்கள் அரசியல் (Survival Politics) உத்திகளைக் கையாளுகின்றன; அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

ஆனால், “யாராவது லஞ்சம் கேட்டால் கொடுக்க மாட்டேன் என்று சொல்லுங்கள், மீறி கேட்டால் என் பெயரைச் சொல்லுங்கள்” என்று முதலமைச்சர் விஜய் மேடைகளில் முழங்கியது ஒரு அரசியல் ஆவேசமாக இருந்ததே தவிர, அது லஞ்ச ஊழல் அதிகாரிகளிடையே எந்தவொரு அச்சத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதுதான் உண்மை.

ஆலமரமாகப் படர்ந்திருக்கும் ஊழல் சங்கிலி

ஊழல் என்பது மேலோட்டமாக நறுக்கப்பட வேண்டிய புல் அல்ல; மாறாக அது ஆழமாகவும் அகலமாகவும் வேர் பரப்பியுள்ள ஒரு ராட்சத ஆலமரம். முதலமைச்சர் எச்சரிக்கை விடுத்து 100 நாட்கள் கடந்த பின்னரும், நெல்லையில் ஒரு சிறை வார்டன் கஞ்சா மூட்டையுடனும் ரூ.10 லட்சம் பணத்துடனும் சிக்கியிருப்பது இதற்குச் சோகமான சான்று.

அரசின் எச்சரிக்கைகள் லஞ்சப் பெருச்சாளிகளைப் பயமுறுத்தவில்லை, மாறாக “பழைய மாதிரி இருக்கக் கூடாது, இன்னும் உஷாராகச் செய்ய வேண்டும்” என்று அவர்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது. ஒரு சிறிய குமாஸ்தா முதல் தலைமைச் செயலகச் செயலாளர் வரை நீளும் இந்த ஊழல் சங்கிலியை, வெறும் இடைநீக்கம் (Suspension) அல்லது இடமாற்றம் (Transfer) போன்ற வழக்கமான நடவடிக்கைகளால் ஒழித்துவிட முடியாது.

அரசியல் வழிகாட்டிகளின் தேவையும் முடிவுகளின் மாற்றமும்

ஜோசியர் நியமன ரத்து முதல், மாற்றுத் திட்டமின்றி பரந்தூர் திட்டத்தைக் கைவிட்டது வரை விஜய் அரசின் பல முடிவுகள் தொடர் மாற்றங்களைச் சந்தித்து வருகின்றன. நேர்மையான, அனுபவமிக்க அரசியல் மற்றும் நிர்வாக ஆசிரியர்கள் அருகில் இல்லாததால், தாமே படித்துத் தேர்வெழுத வேண்டிய கட்டாயத்தில் முதலமைச்சர் இருக்கிறார்.

நமது நாடு ஒரு ஜனநாயக நாடு என்பதால், சீனா போல லஞ்சத்திற்கு மரண தண்டனை விதிப்பது சாத்தியமில்லை. அதேவேளையில், “ஒரு அரசு ஊழியர் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றக் கூடாது என்ற சாதாரண விதியைத் தயவு தாட்சண்யமின்றி அமல்படுத்தினாலே பாதியைச் சரிசெய்யலாம்” என்பது மூத்த அதிகாரிகளின் கருத்தாக உள்ளது. லஞ்ச ஒழிப்பை மட்டுமே தனது முதன்மை இலக்காகக் கொண்டு சிங்கப்பூரின் லீ குவான் யூ போல உறுதியான நடவடிக்கைகளை எடுத்தால், மற்ற பிரச்சனைகள் தானாகவே சரியாகும். லஞ்சம் வாங்குபவரை மட்டுமன்றி, அந்த ஊழல் பணத்தில் சுகபோகம் அனுபவிக்கும் குடும்பத்தினரையும் சட்டத்தின் முன் நிறுத்தும் கடுமையான சட்டங்கள் தேவைப்படுகின்றன.

பின்வாங்கல் பலவீனமல்ல, நேர்மை!

இந்த அரசில் உள்ள ஒரே ஆறுதல் என்னவென்றால், தான் எடுத்த முடிவு தவறு என்று தெரிந்தால், அதனைத் திரும்பப் பெறத் தயங்காத நேர்மை முதலமைச்சரிடம் இருக்கிறது. பிடிவாதமான, அகம்பாவம் பிடித்த வெற்றிப் பயணத்தை விட, தவறை உணர்ந்து செய்யப்படும் நேர்மையான பின்வாங்கல் (Honest Retreat) எப்போதுமே மேலானது. தடையற்ற அரசியல் உறுதியும் (Will power), சரியான வழிகாட்டுதலும் இருந்தால் மட்டுமே விஜய் அரசால் நிர்வாகச் சவால்களை எதிர்கொண்டு சாதனை படைக்க முடியும்.

பிரேம் அப்பா