AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

பத்திரிகையாளர்கள் ஊதியம் இனியாவது உயருமா? By கதிர்

By admin | Feb 09, 2014

மஜிதியா ஊதிய குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துமாறு பத்திரிகைகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
‘செய்தியாளர்கள் மற்றும் செய்தித்துறை சாராத அனைத்து ஊழியர்களுக்கும் இவ்வளவு அதிகமான சம்பளம் வழங்கினால், பெரும் நஷ்டம் ஏற்பட்டு பத்திரிகையை மூடும் நிலைதான் வரும்’ என்று பத்திரிகை அதிபர்கள் தரப்பில் வாதிடப்பட்டதை கோர்ட் ஏற்கவில்லை.

பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிகை ஊழியர்களுக்கு மஜிதியா குழி நிர்ணயம் செய்துள்ள சம்பளம் மற்றும் சலுகைகள், இப்போடு அவர்கள் அனுபவிப்பதைவிட இரண்டு மடங்காக உள்ளது என டைம்ஸ் ஆப் இந்தியா வாதிட்டது. 80 முதல் 100 சதவிகிதம் ஊதிய உயர்வு வழங்க பெரும்பாலான பத்திரிகைகளுக்கு சக்தி இல்லை என அது கூறியது.

மற்ற துறைகளில் ஊழியர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கும் அதிகாரமும் சுதந்திரமும் நிர்வாகத்துக்கு இருக்கும்போது, பத்திரிகைத்துறையில் மட்டும் அரசு தலையிட்டு ஒருதலைப்பட்சமான முடிவை நிர்வாகம் மீது திணிப்பது எந்த வகையில் நியாயம் என்று அதிபர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர்.

இந்த வாதங்களை நிராகரித்த நீதிபதிகள், 2011ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து புதிய சம்பளத்தை கணக்கிட்டு, இன்றுவரை சேர்ந்துள்ள சம்பள பாக்கியை இந்த ஆண்டு முடிவதற்குள் 4 தவணைகளில் ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டும் என ஆணையிட்டனர். ஏப்ரல் முதல் புதிய விகிதப்படி அமலுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்று தெரிவித்தனர்.

இந்த செய்தியை ஒட்டி தனது கருத்தை டைம்ஸ் பிரசுரித்துள்ளது. ‘செய்தியாளர்களை ஸ்பெஷல் ரகம் என்று ஒருவேளை ஒப்புக்கொண்டாலும், மற்றவர்களை எப்படி அவ்வாறு கருத முடியும்?’ என டைம்ஸ் கேட்கிறது.

‘இப்போது மாதம் 36,000 சம்பளம் வாங்கும் டிரைவருக்கு இனிமேல் 62,000 கொடுக்க வேண்டும். 32,000 வாங்கும் கிளார்க்குக்கு 62,000,வழங்க வேண்டும். 33,000 பெறும் பியூனுக்கு 58,000; ஸ்டெனோகிராபருக்கு 40,000 ஆக இருப்பது 71,000; ரோட்டரி மெஷின்மேனுக்கு 40,000க்கு பதில் 76,000 கொடுக்க நேர்கிறது. மற்ற தொழில்களில் ஊழியர்கள் மாதம் இவ்வளவு சம்பளம் பெறுவதில்லை’ என டைம்ஸ் சொல்கிறது. இந்த மதிப்பீட்டின்படி சில ஆண்டுகள் அனுபவம் கொண்ட செய்தியாளர்கள்கூட ஒரு லட்சம் சம்பளம் பெறலாம்.

வழக்கம்போல, டைம்ஸ் மட்டும் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. ஆனால், அது சுட்டிக் காட்டும் சம்பள விகிதம் மற்ற பத்திரிகைகளில் அமலில் இல்லை. வருமானத்தின் அடிப்படையில் ஒவ்வொரு பத்திரிகையும் தன் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளம் இது என்று ஊதிய குழு நிர்ணயம் செய்கிறது. அதன் பரிந்துரைகளை சில திருத்தங்கள், மாற்றங்களுடன் மத்திய அரசு ஏற்றுக்கொண்டு ஆணையாக வெளியிடுகிறது.

அவ்வாறு சட்டப்படியான சம்பளம், சலுகைகள் வழங்கப்படுகிறதா என்பதை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஓரிரு பத்திரிகைகளை தவிர மற்றவை அவ்வாறு சட்டரீதியான சம்பளமோ சலுகைகளோ வழங்குவதில்லை. மாநில அரசு இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதும் இல்லை. இந்த மெத்தனத்துக்கு முடிவுகட்ட பத்திரிகையாளர் அமைப்புகளும், பத்திரிகை ஊழியர் தொழிற்சங்கங்களும் அரசிடம் முறையிட்டுள்ளன. இனி மாற்றம் தெரியும் என அவை எதிர்பார்க்கின்றன.

கதிர்