AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

“நான் ஏன் ஓட்டுப் போட்டேன்?” -தேர்தல் கமிஷன் நடத்திய சர்வே ரிசல்ட்!

By admin | Dec 21, 2013

தமிழகத்தில் ஓட்டளித்தவர்களில் 32 சதவீதம் பேர் வேட்பாளரின் நடத்தை பார்த்தும்; 31 சதவீதம் பேர் வேட்பாளரின் முந்தைய அனுபவத்தை பார்த்தும்.29 சதவீதம் பேர் வேட்பாளரின் வாக்குறுதி அடிப்படையிலும்; 6 சதவீதம் பேர் வேட்பாளரை தனிப்பட்ட முறையில் தெரிந்ததாலும் ஓட்டு போட்டதாக தெரிவித்துள்ளனர். அத்துடன் அதிக ஓட்டுப்பதிவிற்கு பணம் வழங்குவது காரணம் என 25 சதவீதம் பேரும், இலவச பொருட்கள் வழங்குவது காரணம் என 3 சதவீதம் பேரும் தேர்தல் கமிஷன் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவித்துள்ளனர்:அண்மையில் தமிழக பொதுமக்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வு விவரம் தமிழக தேர்தல் கமிஷனின் இணைய தளமான (http://www.elections.tn.gov.in/KABP_2013.pdf)-ல் முழுமையாக பார்த்துக் கொள்ளலாம்.

தேர்தல் கமிஷன் அனுமதியோடு தமிழக மதிப்பீடு மற்றும் செயல்முறை, ஆராய்ச்சித் துறை சார்பில் தமிழக வாக்காளர்களின் விழிப்புணர்வு அணுகு முறை, நடத்தை, நம்பகத்தன்மை மற்றும் செயல்பாடு குறித்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஓர் ஆய்வு நடத்தப் பட்டது.

அவற்றின் மூலம் தெரிய வந்தவை: இந்த ஆய்வின் போது தொகுதிக்கு தலா 125 பேர் வீதம் 39 லோக்சபா தொகுதிகளில், 46 கேள்விகள் கேட்கப்பட்டு பதில் பெறப்பட்டது.இவர்களில் 2,617 பேர் ஆண்கள்; 2,258 பேர் பெண்கள். 70 சதவீதம் பேர் ஊரகப் பகுதியைச் சேர்ந்தவர்கள்; 30 சதவீதம் பேர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள். 26 சதவீதம் பேர் எஸ்.சி., எஸ்.டி., வகுப்பைச் சேர்ந்தவர்கள். படித்தவர்கள் 80 சதவீதம் பேர்; படிக்காதவர்கள் 20 சதவீதம் பேர்.

இந்தக் ஆய்வில் பங்கேற்றவர்களில் 86 சதவீதம் பேருக்கு வாக்காளர் பட்டியல் குறித்த விழிப்புணர்வு உள்ளது. நகர் பகுதியில் 93; ஊரகப் பகுதியில் 83; ஆண்களிடம் 90; பெண்களிடம், 80; படித்தவர்களிடம் 90; படிக்காதவர்களிடம் 67 சதவீதம் பேருக்கு இந்த விஷயத்தில் விழிப்புணர்வு உள்ளது.

இதற்கிடையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்களில் 43 சதவீதம் பேர் “வயது சான்று மற்றும் இருப்பிட சான்றிதழ் இல்லை’ என தெரிவித்துள்ளனர். 29 சதவீதம் பேரிடம் விழிப்புணர்வு இல்லை. ஓட்டு போட்டவர்களில் 49 சதவீதம் பேர் ஓட்டு சிலிப்; 39 சதவீதம் பேர் ரேஷன் கார்டு; 8 சதவீதம் பேர் ஓட்டுனர் உரிமம்; 4 சதவீதம் பேர் வங்கி கணக்கு புத்தகம் பயன்படுத்தி ஓட்டு போட்டுள்ளனர்.

அரசியல் கட்சியில் இருப்பதால் 24 சதவீதம் பேர் குடும்பத் தலைவர் கூறியதால், 20 சதவீதம் பேர் தேர்தல் அமைதியாக நடந்ததால், 12 சதவீதம் பேர் தேர்தல் கமிஷன் விளம்பரம் காரணமாக 11 சதவீதம் பேர்; ஓட்டு போட்டுள்ளனர்.இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் 6 சதவீதம் பேர் முந்தைய தேர்தலில் ஓட்டு போடாதவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.