AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

சர்வதேச சாக்லேட் தினம் & ஹெர்ஷி நிறுவனத்தின் வரலாறு!

By admin | Sep 13, 2026

ன்றைய நவீன உலகில் சாக்லேட் என்பது வெறும் இனிப்புப் பண்டம் மட்டுமல்ல, மனிதர்களின் மன அழுத்தத்தைப் போக்கும் ஒரு மந்திர மருந்தாகவும் மாறிவிட்டது. உலகெங்கிலும் உள்ள சாக்லேட் பிரியர்கள் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் பதின்மூன்றாம் தேதியை மிகச் சிறப்பான முறையில் கொண்டாடி வருகின்றனர். இந்தத் தேதி எப்போதுமே ஒரு சாதாரண நாளாகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை. உலகப் புகழ்பெற்ற சாக்லேட் பிராண்டான ஹெர்ஷி நிறுவனத்தின் நிறுவனரான மில்டன் எஸ். ஹெர்ஷியின் பிறந்தநாளே சர்வதேச சாக்லேட் தினமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

மில்டன் ஹெர்ஷி மற்றும் கோகோ தொழிற்சாலைகளின் தொடக்கம்

சாக்லேட் வரலாற்றில் மில்டன் எஸ். ஹெர்ஷியின் பங்களிப்பு மிக முக்கியமான திருப்புமுனையாகும். பல ஆரம்பகாலத் தோல்விகளுக்குப் பிறகு, கேரமல் தயாரிப்பில் வெற்றி கண்ட அவர், 1893-ஆம் ஆண்டு சிகாகோவில் நடைபெற்ற உலகக் கண்காட்சியில் சாக்லேட் தயாரிக்கும் இயந்திரங்களைக் பார்த்த பிறகு சாக்லேட் மீது ஈர்க்கப்பட்டார். அந்தச் சமயத்தில் ஐரோப்பாவில் மட்டுமே பிரபலமாகவும், பணக்காரர்கள் மட்டுமே வாங்கும் ஒரு ஆடம்பரப் பொருளாகவும் இருந்த மில்க் சாக்லேட்டை, சாதாரண மக்களும் வாங்கும் வகையில் பெருமளவில் உற்பத்தி செய்யத் திட்டமிட்டார். தனது கேரமல் கம்பெனியை விற்று கிடைத்த பணத்தைக் கொண்டு அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பால் பண்ணைகள் நிறைந்த பகுதியில் உலகின் மிகப்பெரிய சாக்லேட் ஆலையை நிறுவினார். தொடக்கத்தில பல சவால்களைச் சமாளித்து, வெளிநாட்டுப் பொடிகளுக்குப் பதிலாகக் கறந்த பசும்பாலைப் பயன்படுத்தி சுவையான மில்க் சாக்லேட்டை உருவாக்கும் ரகசியத்தைக் கண்டுபிடித்தார். இதன் மூலம் 1900-இல் தனது முதல் சாக்லேட் பாரையும், தொடர்ந்து உலகப் புகழ்பெற்ற ஹெர்ஷீஸ் கிஸ்ஸஸ் (Hershey’s Kisses) போன்ற மிட்டாய்களையும் சந்தைக்குக் கொண்டுவந்தார். சாக்லேட் உற்பத்தியோடு நில்லாமல், தனது தொழிலாளர்கள் வாழ்வதற்காகப் பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் பூங்காக்களுடன் கூடிய ஒரு மாதிரியான நகரத்தையே (Hershey, Pennsylvania) உருவாக்கினார். மேலும், ஏழை மற்றும் ஆதரவற்ற குழந்தைகளின் கல்விக்காகத் தனது ஒட்டுமொத்த சொத்தையும் அறக்கட்டளைக்கு எழுதி வைத்து, சாக்லேட் தயாரிப்பை உலகளாவிய பொதுமக்களின் எளிய மிட்டாயாக மாற்றிய பெருமை இவரையே சாரும். ஹெர்ஷி பார்க் மற்றும் ஹெர்ஷி டவுன் என சாக்லேட்டுக்காகவே ஒரு தனி நகரத்தையே உருவாக்கிய பெருமை இவரையே சாரும்.

கோகோ பீன்ஸின் ஆரோக்கிய ரகசியங்கள் மற்றும் மருத்துவப் பயன்கள்

சாக்லேட் குறித்து மக்களிடையே பல தவறான புரிதல்கள் இருந்தாலும், அதிலும் குறிப்பாக டார்க் சாக்லேட்டில் எண்ணற்ற மருத்துவப் பயன்கள் மறைந்துள்ளன. கொக்கோ மரத்தின் விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் டார்க் சாக்லேட்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. இது ரத்த ஓட்டத்தைச் சீராக வைத்திருக்கவும், உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் பெரிதும் உதவுகிறது. மேலும் மூளையின் செயல்திறனை அதிகரித்து, மன உளைச்சலைக் குறைக்கும் எண்டார்பின் என்ற ஹார்மோனைச் சுரப்பதில் சாக்லேட் முக்கியப் பங்கு வகிக்கிறது. மிதமான அளவில் சாக்லேட்டை உட்கொள்வது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று பல அறிவியல் ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

வித்தியாசமான கொண்டாட்டங்களும் உலகளாவிய கலாச்சாரம்

இந்த சாக்லேட் திருவிழாக்கள் மற்றும் கண்காட்சிகளுடன் கொண்டாடப்படுகிறது. பல நாடுகளில் சாக்லேட் தயாரிக்கும் பட்டறைகள், சமையல் போட்டிகள் மற்றும் இலவச சாக்லேட் வழங்கும் நிகழ்வுகள் நடைபெறுகின்றன. பாரம்பரிய சாக்லேட்டுகள் தொடங்கி மிளகாய் கலந்த சாக்லேட், உப்புத் தூவப்பட்ட சாக்லேட் எனப் பல புதிய சுவைகளை மக்கள் பரவலாக ருசித்து மகிழ்கிறார்கள். சாக்லேட் வர்த்தகம் இன்று கோடிக்கணக்கான டாலர்களைத் தாண்டி உலகப் பொருளாதாரத்தின் ஒரு தவிர்க்க முடியாத அங்கமாக வளர்ந்து நிற்குமளவிற்குப் பல பரிமாணங்களை எட்டியுள்ளது.

தனுஜா