AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

சமையல் கியாஸ் விலை 100 ரூபாயும் டீசல் விலையை ரூ.2 -ம அதிகரிக்கிறது!

By admin | Jan 13, 2014

மானிய விலையில் வழங்கப்படும் கியாஸ் சிலிண்டர் 12 ஆக உயர்த்த பட்டால் மத்திய அரசுக்கு நிதி சுமை அதிகரிப்பதுடன், எண்ணை நிறுவனங் களுக்கும் கடும் வருவாய் இழப்பு ஏற்படும். இதனால், கியாஸ் சிலிண்டர் விலையை 75 முதல் 100 ரூபாய் வரை அதிகரிக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.கியாஸ் விலை மட்டுமின்றி டீசல் விலையையும் ஒரே நேரத்தில் அதிகமாக உயர்த்த பரிசீலனை நடந்து வருகிறது.

மத்திய அரசு தன் மானிய சுமையை குறைக்கும் வகையில் கடந்த 2012–ம் ஆண்டு மானிய விலையில் வழங்கப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கு கட்டுப்பாடு கொண்டு வந்தது.அதன்படி ஆண்டு ஒன்றுக்கு ஒரு குடும்பத்துக்கு மானிய விலையில் 6 சமையல் கியாஸ் சிலிண்டர்களே தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் 2013–ம் ஆண்டு அது 9 ஆக உயர்த்தப்பட்டது.

இந்த நிலையில் பாராளுமன்றத்துக்கு வரும் ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளதால் வாக்காளர்களை திருப்திப்படுத்த சமையல் கியாஸ் சிலிண்டர் எண்ணிக்கையை 9–ல் இருந்து 12 ஆக உயர்த்த கோரிக்கை விடப்பட்டது. பிரதமர் மன்மோகன்சிங்கை சமீபத்தில் சந்தித்து பேசிய ராகுல்காந்தியும் இது குறித்து வலியுறுத்தியதாக தகவல் வெளியானது.

ஆனால் மத்திய அரசு இன்னும் இது தொடர்பாக முடிவை வெளியிடவில்லை. மானிய விலை சிலிண்டர்கள் உயர்வால் ஏற்படும் வருவாய் இழப்பை எந்த வகையில் சரி கட்டுவது என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது.தற்போது மானிய விலையில் வழங்கப்படும் சமையல் கியாஸ், விலை சிலிண்டருக்கு ரூ. 410 ஆக உள்ளது. மானியம் இல்லாத விலையில் ரூ. 1300 வரை சமையல் கியாஸ் சிலிண்டர்கள் கொடுக்கப்படுகின்றன.

மானிய விலையில் வழங்கப்படும் கியாஸ் சிலிண்டர் எண்ணிக்கையை 12 ஆக அதிகரித்தால் மத்திய அரசுக்கு நிதி சுமை அதிகரிப்பதுடன், எண்ணை நிறுவனங்களுக்கும் கடும் வருவாய் இழப்பு ஏற்படும். அதாவது ஆண்டுக்கு ரூ.3300 கோடி முதல் ரூ.5800 கோடி வரை இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மானிய விலையில் சிலிண்டரின் எண்ணிக்கையை 12 ஆக உயர்த்தும் போது ஏற்படும் இந்த இழப்பை சந்திக்க மத்திய அரசு தயங்குகிறது. அதுபோல எண்ணை நிறுவனங்களும் எங்களால் இந்த இழப்பை தாங்க இயலாது என்று கூறி விட்டன.இதனால் இந்த நிதிச் சுமையை மக்கள் முதுகில் ஏற்ற வழக்கம் போல் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி சமையல் கியாஸ் விலை சிலிண்டருக்கு ரூ.75 முதல் ரூ. 100 வரை உயர்த்த மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

இந்த தகவலை உறுதி செய்த மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘சமையல் கியாஸ் விலை மட்டுமின்றி டீசல் விலையையும் ஒரே நேரத்தில் அதிகமாக உயர்த்த பரிசீலனை நடந்து வருகிறது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 வரை உயர்த்தப்படலாம் என்றார்.