AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

காமன்வெல்த் விளையாட்டு இன்று தொடங்குகிறது!

By admin | Jul 23, 2014

காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது.இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு வண்ணமயமான தொடக்க விழா நடைபெறுகிறது. இதில் 288 நாட்களில் 1 லட்சத்து 90 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு பயணித்த காமன்வெல்த் ஜோதி (குயின் பேட்டன்) இறுதிகட்ட தொடர் ஓட்டமாக தொடக்க விழா நடைபெறும் செல்டிக் பார்க் மைதானத்திற்குள் கொண்டுவரப்படும். இதன் பின்னர் இங்கிலாந்து ராணி எலிசபெத், வாழ்த்துரை செய்தியை வாசித்து போட்டியை அதிகாரப் பூர்வமாக தொடங்கி வைப்பார். 71 நாடுகளின் அணிவகுப்பும் தொடக்க விழாவில் இடம் பெறும். இதில் இந்திய அணிக்கு லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான துப்பாக்கி சுடுதல் வீரர் விஜய்குமார் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி செல்கிறார். தொடக்க நாள் அன்று போட்டி ஏதும் கிடையாது. நாளை முதல் (24-ந் தேதி) போட்டிகள் தொடர்ந்து நடைபெறும். போட்டியை டென்ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. தூர்தர்சனிலும் காணலாம்.

ஒரு காலத்தில் இங்கிலாந்திடம் அடிமைப்பட்டு கிடந்த தேசங்கள் மற்றும் இங்கிலாந்தின் அதிகாரத்திற்கு கட்டுப்பட்ட நாடுகள் ஒன்றிணைந்து பங்கேற்கும் போட்டித் திருவிழா தான் காமன்வெல்த் விளையாட்டு. நிறைய நாடுகள் களம் இறங்கி உலகின் கவனத்தை ஈர்ப்பதில் ஒலிம்பிக், ஆசிய விளையாட்டுகளுக்கு அடுத்து மிகப்பெரிய விளையாட்டாக இது கருதப்படுகிறது. இதுவும் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் நடத்தப்படுகிறது. 1930-ம் ஆண்டு தொடங்கிய இந்த போட்டி கடைசியாக 2010-ம் ஆண்டு டெல்லியில் அரங்கேறியது.

இந்த நிலையில் 20-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கா நகரில் இன்று(புதன்கிழமை) தொடங்கி ஆகஸ்டு 3-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை உள்பட 71 நாடுகளை சேர்ந்த 4,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். மொத்தம் 17 வகையான விளையாட்டுகளுக்கு 261 தங்கப்பதக்கங்கள் வழங்கப்படுகிறது. இந்திய தரப்பில் 215 பேர் கொண்ட விளையாட்டு குழுவினர் அனுப்பப்பட்டுள்ளனர். இவர்கள் தடகளம், ஆக்கி, நீச்சல், குத்துச்சண்டை, மல்யுத்தம், பேட்மிண்டன்,சைக்கிளிங், ஜிம்னாஸ்டிக்ஸ், ஜூடோ, லான் பவ்ல்ஸ், ஸ்குவாஷ், டேபிள் டென்னிஸ், பளுதூக்குதல், துப்பாக்கி சுடுதல் ஆகிய 14 வகையான விளையாட்டுகளில் கலந்து கொள்கிறார்கள். நெட்பால், ரக்பி செவன்ஸ், டிரையத்லான் ஆகிய பிரிவுகளில் மட்டும் இந்தியா கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..