AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

”அனைவரையும் மீட்ட பிறகுதான் வெளியேறுவோம்! – காஷ்மீரில் ராணுவ அதிகாரி

By admin | Sep 10, 2014

காஷ்மீர் மாநிலத்தில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் 4 லட்சம் பேர் சிக்கித்தவித்து வருகிறார்கள். அவர்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே காஷ்மீரில் மழை, வெள்ளத்திற்கு பலியானவர்கள் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்தது.அங்கு பெய்து வரும் கன மழை காரணமாக காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதிலும் தொலைத் தொடர்பு முற்றிலுமாக நாட்டின் இதர பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டு விட்டது. பெரும்பாலான இடங்களில் சாலைகள், பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டதால் சாலை போக்குவரத்தும் அடியோடு துண்டிக்கப்பட்ட நிலையிலும் ”கடைசி நபர் மீட்கப்படும் வரை அங்கிருந்து ராணுவம் வெளியேறாது என்று அதிகாரி தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு ஓடும் எல்லா ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.குறிப்பாக ஜீலம் நதியின் வெள்ளம் நூற்றுக்கணக்கான கிராமங்களை முற்றிலுமாக விழுங்கிவிட்டது. மேலும், ஸ்ரீநகர் மற்றும் தெற்கு காஷ்மீரின் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.

இந்த கன மழை, வெள்ளத்துக்கு இதுவரை 200 பேர் பலியாகிவிட்டனர். மேலும் 2,500–க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தில் சிக்கித்தவித்து வருகிறார்கள். பல்லாயிரக்கணக்கானோர் தங்களது வீடுகளின் கூரைகளிலும், மேல்மாடிகளிலும் ஏறி நின்று தங்களைக் காப்பாற்றும்படி தொடர்ந்து அபயக்குரல் எழுப்பி வருகிறார்கள்.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கர்னல் எஸ்.டி. கோஸ்வாமி செவ்வாய்க்கிழமை கூறியதாவது: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணியில், இந்திய விமானப் படையைச் சேர்ந்த 61 விமானங்களும், ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ஒரு லட்சம் வீரர்களும் மீட்புப் பணியில் இரவு, பகலாக ஈடுபட்டுள்ளனர். ராணுவத்துக்குச் சொந்தமான 135 படகுகளும், தேசிய பேரிடர் மீட்புப் படைக்குச் சொந்தமான 148 படகுகளும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

குறைந்த அளவு படகுகளே இருப்பதால், மீட்புப் பணிகள் பாதிக்கப்படுவதாகப் புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து, தில்லியில் இருந்து கூடுதலாக படகுகள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.மீட்பு பணியின்போது, ஒவ்வொரு சுற்றிலும் படகுகள் 10 முதல் 15 பேரை ஏற்றி வரவேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருக்கிறது. தினமும் நாங்கள் 50 முதல் 60 சுற்றுகள் சென்று வருகிறோம். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கிய அனைவரையும் மீட்ட பிறகுதான் நாங்கள் அங்கிருந்து வெளியேறுவோம்’’ என்றார் ராணுவ தளபதி தல்பீர் சுகாக்