அன்பை வாரி வாரி அருளிய பிச்சைக்கார மஹான் யோகிராம் சுரத்குமார் ஜெயந்தி நாள்!
ஆன்மீகவாசிகளின் அற்புதமான புண்ணிய பூமி திருவண்ணாமலை. பகவான் ஸ்ரீரமணர், ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள்… என மகான்களின் திருப்பாதம்பட்ட மண். காசியில் இருந்து வந்து திருவண்ணாமலையிலேயே தங்கி, பக்தர்களுக்கு அருளியவர் `விசிறி சாமியார்’ என அழைக்கப்படும் பகவான் ஸ்ரீயோகி ராம்சுரத்குமார். இன்று, டிசம்பர் 1ம் தேதி, அவரின் ஜெயந்தி நன்னாள்.
தலையிலோர் பாகை உளான்
தாடி உளான், கையிலோர்
அலைவுறுமோர் விசிறி உளான்
அங்கையிலோர் ஓடெடுப்பான்
நிலையுள்ள இன்பத்தை
நித்தம் அனுபவிக்கும்
கலையாளன்…’
என்று போற்றுவார் தமிழறிஞர் கி.வா.ஜகந்நாதன். அந்தப் பாட்டுடைத் தலைவன் சாட்சாத் யோகி ராம்சுரத் குமாரேதான்.
பாகை இருக்கும். ஆனால் ‘நானே பகவான்’ என்ற தலைக்கனம் இருக்காது. முகத்தை மறைக்கும் தாடி இருக்கும். ஆனால் முகஸ்துதிக்கு மயங்காத தாடி அது. சதா சர்வகாலமும் கையில் விசிறி இருக்கும். ஆனால், சீடர்கள் என்று கூறி சுற்றித் திரியும் கூட்டத்தைத் துரத்தியடிக்கும் பக்தியைக் கொண்டிருக்கும். இன்னொரு கையில் இருப்பது பிச்சை ஓடுதான். ஆனால் அன்பை அள்ள அள்ளக் குறையாமல் வழங்கிய அட்சயப் பாத்திரம் அது!
ஆம்… இது பிச்சைக்காரனுக்கே உரிய தோற்றம்தான். ஆனால் அது வெளிப்புறத் தோற்றம் மட்டுமே அல்ல. ஆன்மிக ரீதியிலும், தன்னை ஒரு யாசகனாகவே கருதிக் கொண்ட துறவியின் மெய்ஞானமும் அதுவே. ‘ஐ ஆம் எ பெக்கர்..!’ என்று அவர் கூறிக்கொண்டது வெறும் அடையாளம் அல்ல. அன்பின் வழியே இறையைக் கண்டவனின் அலறல்!
அந்தப் பிச்சைக்கார மஹானுக்குத்தான் இன்று பிறந்த நாள்
ஸ்ரீயோகி ராம்சுரத்குமார் சுவாமிகள், வாரணாசிக்கு அருகில் உள்ள நாராதாரா கிராமத்தில் டிசம்பர் 1, 1918-ம் ஆண்டில் ராம்தத் குவார் – குசும்தேவி தம்பதியருக்கு இரண்டாவது மகனாக அவதரித்தார் ராம்சுரத்குமார். இவருக்கு மரைக்கன் குவார் மற்றும் ராம்தகின் குவார் என இரு சகோதரர்கள். குழந்தைப் பருவத்திலேயே யோகிகளையும் துறவிகளையும் சந்திப்பதில் ஆர்வத்துடன் இருந்தார். கங்கை ஆற்றாங்கரையில் உலவுவது, துறவிகளுடன் உறவாடுவது என இருந்தார்.
ஆன்மிகத் தேடலில் ஈடுபட்டிருந்தவருக்கு ஸ்ரீரமண தரிசனம் அற்புதமாக அமைந்தது. `இவரே… இவரே… இவரே என் குரு’ என்றவருக்கு, மிகப் பெரிய கேவல் எழுந்தது. அதே நேரம் ஸ்ரீஅரவிந்தரைப் பற்றி அறிந்து, பாண்டிச்சேரியை நோக்கிப் பயணப்பட்டார். ஆனால் அவரை தரிசிக்க முடியவில்லை. ஆனாலும், சூட்சுமமாக அரவிந்தர் தரிசனம் கிடைத்தது. மறுபடி திருவண்ணாமலை வந்தார். அடுத்த விடுமுறையில் வடக்கே பயணப்பட்டார். இமயமலைச் சரிவுகளில் அலைந்தார். அந்தச் சமயத்தில் திருவண்ணாமலையில் ஸ்ரீரமண மகரிஷி முக்தியடைந்தார்; பாண்டிச்சேரியில் அரவிந்தர் மறைந்தார் என்பது தெரியவர, இடிந்துபோனார்.
.
மங்களூருக்கு அருகில் கஞ்சன்காடு கிராமத்தில் இருந்த பப்பா ராமதாஸை நோக்கி பயணத்தைத் தொடங்கினார் ராம்சுரத். ராமதாஸரின் ஆஸ்ரமத்தில் தங்கினார். பப்பா ராமதாஸ் அவருக்கு ராம நாமத்தை உபதேசித்தார். ”இடையறாது ராம நாமம் சொல்” என்றார். ராம்சுரத்குமார் குருவின் கட்டளையை மீறவில்லை. ராம நாமம் அவருக்குள் மிக விரைவிலேயே மாற்றத்தை ஏற்படுத்தியது. அவரின் உள்ளொளி விகசித்துப் பொங்கியது. உடுப்பதும் உண்பதும்கூட மறந்து, ராம நாமம் சொல்வதே வேலையாக இருந்தது.
உள்ளுக்குள் ராம நாமம் பொங்க, எந்த நியதிக்கும் அவரால் கட்டுப்பட முடியவில்லை; எதுவும் புலப்படவில்லை. அவர் தன்வசம் இழந்தவராக, சின்மயமானவராக எல்லா இடத்திலும் இருப்பவராக உணர்ந்தார். ஆனால், பொது வாழ்க்கையில் இந்த நிலை `பித்து’ என்று வர்ணிக்கப்படும். `பைத்தியக்காரன்’ என்ற பட்டப்பெயர் கிடைக்கும். ராம்சுரத்குமாருக்கும் இப்படி பட்டப்பெயர் கிடைத்தது. அதனால் ராம்சுரத்குமார், ஆஸ்ரமத்தில் இருந்து மென்மையாக வெளியேற்றப்பட்டார்.
உன்மத்த நிலையோடே வீடு வந்தார். வீடு அவரை விநோதமாகப் பார்த்தது. மனைவி கவலையானார். அவரை சரியான நிலைக்குக் கொண்டுவர முயற்சித்தனர். ஆனால் உன்மத்தம் அதிகமானது. கிராமத்தின் மரத்தடிகளில் அமர்ந்து வேலைக்குப் போகாமல் திரும்பத் திரும்ப ராம நாமத்தையே சொல்லிக்கொண்டிருந்தார். தன்னந்தனியே கங்கைக்கரையோரம் திரிந்து கொண்டிருந்தார்.
உணர்தல் என்ற விஷயமே கடவுள் தேடல் தொடர்பான விஷயம்தான். தன்னை உணர முற்படுகிறபோது இது பிரமாண்டமாக விரிவடைகிறது. எல்லா இடங்களிலும் அது நீக்கமற நிறைகிறது. அப்போது அவருக்கு, தான் என்ன செய்கிறோம் என்கிற நினைப்பு இல்லை. இந்த உலகாயதமான மரியாதைகள் அவருக்குத் தெரியவில்லை. அவர் தனக்குள் பேசியபடி தன்னையே பார்த்தபடி இருக்கிறார். தன்னை உற்றுப் பார்ப்பவருடைய அவஸ்தை மற்றவரைப் பார்க்க விடுவதில்லை. தனக்குள் உள்ள அந்த ‘தான்’ என்பதை அனுபவிக்கிறபோது, வேறு எதுவும் மனதுக்குப் புலப்படுவதில்லை. இதுவொரு கலக்கமான நேரம். கலங்கியதுதான் தெளியும். விரைவில் தெளிந்தது. மிகப் பெரிய உண்மை ஒன்று எளிதில் புலப்பட்டது. அவர் குடும்பத்தைவிட்டு மறுபடியும் திருவண்ணாமலை நோக்கிப் பயணப்பட்டார்.
திருவண்ணாமலைக்கு வந்தவர், ஒரு புன்னை மரத்தடியில் அமர்ந்து இடையறாது ராம நாமத்தைச் சொல்லிக்கொண்டே இருந்தார். அதற்குப் பிறகு அவர் குடும்பத்தை நோக்கிப் போகவே இல்லை. கட்டு அறுந்து போயிற்று; கடவுளோடு பிணைப்பு உறுதியாயிற்று.
கங்கை நதி மீது அவருக்கு இருந்த பக்தி, காசியில் தகனம் செய்யப்படும் உடலைப் பார்த்ததும் அவருக்கு ஏற்பட்ட ஞானத்தேடல், புத்தரின் நினைவாக தனது மகளுக்கு `யசோதரா’ என்று பெயர் சூட்டியது, பகவான் ரமணரைச் சந்தித்தது, அரவிந்தரைச் சந்தித்தது… இப்படி யோகி ராம்சுரத்குமாரின் வாழ்க்கையே ஆன்மிகத் தேடலாக இருந்துவிட்டது.
ஸ்ரீஅரவிந்தரிடமிருந்து ஞானத்தையும், ரமண மகரிஷியிடமிருந்து தவத்தையும், சுவாமி ராமதாஸரிடமிருந்து பக்திநெறியையும் கேட்டுத் தெளிந்தார். குரு ராமதாஸரிடமிருந்து, ‘ஓம் ஶ்ரீ ஜெய்ராம் ஜெய் ஜெய்ராம்’ எனும் மந்திர தீட்சை பெற்றார்.
யோகி ராம்சுரத்குமார் இறக்கும் வரை இந்த மந்திரத்தை ஜெபித்துக்கொண்டே இருந்தார். இன்று யோகி ராம்சுரத்குமார் அவதார தினம். அந்த மகானை மனதார போற்றுவோம்!
நிலவளம் ரெங்கராஜன்