‘யோகா பாட்டி’ கோவை நானம்மாள் காலமானார்!

‘யோகா பாட்டி’ கோவை நானம்மாள் காலமானார்!

பத்மஸ்ரீ விருது பெற்ற ‘யோகா பாட்டி’ கோவை நானம்மாள் உடல் நல குறைவால் காலமானார். அவருக்கு வயது 99.

கடந்த 1920ம் ஆண்டு பொள்ளாச்சி அருகே ஜமீன் காளியாபுரத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவர் நானம்மாள். தன் தாத்தா மன்னார்சாமியிடம் யோகாசன பயிற்சியை கற்றுக்கொண்ட நானம்மாள் 99 வயது வரை யோகாசன ஆசிரியராக பணியாற்றி வந்தார். முதுமையான வயதிலும் கடினமன ஆசனங்களை இவர் அசாதாரணமாக செய்வது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இவரிடம் யோகா கற்ற நூற்றுக்கணக்கானோர் இன்று தமிழகம் மட்டுமல்லாமல் சீனா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட பல உலக நாடுகளில் யோகா ஆசிரியர்களாக பணியாற்றுகிறார்கள்.

இதனிடையே மத்திய அரசு கடந்த 2018-ம் ஆண்டில் இவரின் திறமையும் சேவையும் பாராட்டி பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. இது கோவை மக்களிடையே மட்டுமின்றி தமிழக மக்களிடையிலும் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு முன்னதாக கடந்த 2016-ஆம் ஆண்டில் மகளிரின் வலிமை என்னும் பொருள்படும் ‘நாரிசக்தி’ விருது மற்றும் 2017-ஆம் ஆண்டில் ’யோகா ரத்னா’ விருது ஆகியவற்றை பெற்றுள்ள நானம்மாள் பாட்டி ‘யோகா பாட்டி’ என்ற பெயரில் கடந்த ஆண்டு ஊடகங்களில் சிறப்பான இடத்தை பிடித்திருந்தார்.

இந்நிலையில், கடந்த வாரம் கட்டிலில் இருந்து கீழே விழுந்த நானம்மாளுக்கு உடல்நலக்குறைபாடு ஏற்பட்டது. இதையடுத்து இன்று மதியம் நானம்மாள் உயிரிழந்தார். இதுகுறித்து நானம்மாளின் உறவினர்கள், “கடந்த வாரம் வரை நானம்மாள் யோகா பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். ஆனால், கட்டிலில் இருந்து விழுந்தப் பிறகு அவரால் முடியவில்லை. ‘எல்லலோரும் நல்லாருக்கணும்’ என்று சொல்வார். தனது கடைசி நேரத்தில் கூட அதையேத்தான் சொல்லிக் கொண்டிருந்தார்” என்றனர்.

நானம்மாள் பாட்டிக்கு 6 பிள்ளைகள், 12 பேரன்-பேத்திகள், 11 கொள்ளு பேரன்-பேத்திகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!