June 7, 2023

எண்ணித் துணிக – விமர்சனம்!

றிமுகம் ஆன சினிமா தொடங்கி தனிக் கவனம் ஈர்த்து, ‘இவரின் அடுத்தப் படம் என்ன?’ என்ற கேள்வியும் ஆர்வமும் வருவது வெகு சில ஹீரோக்களுக்கு மட்டுமே. அந்த லிஸ்ட்டில் நிச்சயம் ஜெய் இடம் பிடித்து உள்ளார். ஹிட் படம் ஒன்று கொடுப்பார், பிறகு சைலன்ட் மோடுக்கு போய் விடுவார். அடுத்து ஒரு ஹிட், சைலன்ட் மோட் என்பதுதான் ஜெய்யின் கேரியர் கிராஃப். அப்பேர்பட்டவரை வைத்து வசந்த்திடம் அசிஸ்டெண்ட் டைரக்ட்ராக இருந்து 15 வருடங்கள் போராட்டத்துக்கு பிறகு இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் எஸ்.கே. வெற்றிச்செல்வன் ‘எண்ணித்துணிக’ என்ற தனது முதல் படத்தை ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாக்கி வழங்கி பாஸ் மார்க் வாங்கி இருக்கிறார்.

கதை என்னவென்றால் மினிஸ்டர் சுனில் ரெட்டியின் பினாமி நடத்தும் நகைக்கடை ஒன்றில் கொள்ளை முயற்சியில் வம்சி கிருஷ்ணாவும் அவரது ஆட்களும் ஈடுபடுகிறார்கள். அப்போது அங்கு திருமணத்திற்காக நகை வாங்க வரும் அதுல்யா ரவி கொள்ளையர்களால் தாக்கப்பட்டு காலமாகி விடுகிறார். அங்கே காதலியை கொன்ற கொள்ளையர்களை கண்டுபிடித்து பழிவாங்க களத்தில் இறங்கும் ஜெய், இது வெறும் நகைக்காக நடத்தப்பட்ட கொள்ளை சம்பவம் இல்லை என்பதை தெரிந்துக்கொள்கிறார். அதே சமயம் அமைச்சரும் கொள்ளையர்களை கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்ட, இறுதியில் யார் கொள்ளையர்களை கண்டுபிடித்தார்கள், கொள்ளை சம்பவத்தின் பின்னணி என்ன? என்பதே ‘எண்ணித்துணிக’.

ஜெய் வழக்கம் போல் தனது வேலையை முழுமையாக செய்திருப்பதோடு, ஆக்‌ஷன் காட்சிகளிலும் அமர்க்களப்படுத்தியிருக்கிறார். அதுல்யா ரவியை சுற்றி சுற்றி வருபவர், அவருக்காக கொள்ளையர்களை கண்டுபிடிப்பதற்கு செய்யும் சம்பவங்கள் அனைத்தும் துணிச்சலின் உச்சமாக இருக்கிறது. காதல், ஆக்‌ஷன் என இரண்டிலும் ஜெய் ரசிக்க வைக்கிறார். இது நாள் வரை காதல், காமெடி என வலம் வந்த ஜெய் இந்தப் படத்தில் ஆக்ஷன் அவதாரம் எடுத்திருப்பது அவருக்கு பொருந்தியும் போயிருப்பது ப்ளஸ். அதேசமயம் ஆக்ஷன் காட்சிகள் தவிர்த்து பல காட்சிகளில் பழைய ஜெய்யே தெரிகிறார். அதுல்யாவை பொறுத்தவரை தனக்கான கதாபாத்திரத்தை நன்றாக செய்திருக்கிறார். முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் அஞ்சலி நாயர் படம் முழுவதும் வருவதோடு, கதையோடு பயணிக்கும் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். தனது குழந்தையை காப்பாற்றுவதற்காக போராடும் அவரது நடிப்பு சிறப்பு. அமைச்சராக நடித்திருக்கும் சுனில் ரெட்டி, வில்லத்தனத்தை இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். வம்சி கிருஷ்ணா வழக்கம் போல் துடிப்பான இளைஞராக நடித்திருக்கிறார்.

கதை சாதாரண கதைதான் என்றாலும் அதை காப்பாற்றுவது திரைக்கதைதான். ஒவ்வொரு போர்ஷனாக படம் விரிந்தாலும் இயக்குநர் அதை ரசிகர்களுக்கு புரியும்படி சொல்லியிருக்கிறார். ஆனால், ஆக்‌ஷன் காட்சிகள் மனதில் பதியும் அளவு காதல் காட்சிகள் அவ்வளவாக பதியவில்லை. ஜெய், அதுல்யா இருவருக்குமான காதல் போர்ஷனில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்.

ஆனாலும் படத்தின் கதை எழுதியிருப்பதோடு மாஃபியா கும்பலின் தலைவன் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் தயாரிப்பாளர் சுரேஷ் சுப்பிரமணியம் கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமாக தேர்வாக இருப்பதோடு, அளவான நடிப்பு மூலம் கதாப்பாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.

‘அவ இல்லத்தரசி நீ இதயத்தரசி’, ‘இப்டிலாம் பண்ணா பிக்பாஸுக்கு கூப்டுவாங்கனு நினைப்பு’, ‘நகையை பிடிக்க சொன்னா புகையை பிடிச்சிருக்கிங்க இதுதான் புகை போட்டு பிடிக்கிறதா’ போன்ற வசனங்கள் கலகலப்பு ஏற்படுத்துகின்றன. சாதி குறித்த ஒரு கேள்விக்கு ஜெய் அளிக்கும் பதில் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

ஒன்றில் ஆரம்பித்து அடுத்த விஷயத்துக்கு சென்று மீண்டும் மற்றொரு விஷயத்தை தொட்டு அனைத்து விஷயங்களையும் இணைக்கும் திரைக்கதைக்கு எடிட்டிங் சிறப்பாக அமைவது மிக மிக அவசியம். அதை கனகச்சிதமாக செய்திருக்கிறார் எடிட்டர் சாபு ஜோசப். அதேபோல் படத்துக்கு மிகப்பெரிய பலம் சாம் சி.எஸ்ஸின் இசை.

த்ரில்லர் பாணியில் ஆரம்பிக்கும் கதை அதே வேகத்தில் செல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க திடீரென காதல் காட்சிகள் உள்ளே வருவது முதல் பாதியில் கொஞ்சம் சோர்வை ஏற்படுத்துகிறது. அதேசமயம் ரசிகர்களிடம் மிகப்பெரிய கேள்வியை எழுப்பி முதல் பாதியை முடித்தது ரசிகர்களுக்கு ஏற்பட்ட சோர்வை நீக்கி ஆவலை எழுப்புகிறது. இரண்டாம் பாதியில் இருக்கும் திரைக்கதை பல முடிச்சுகளை அவிழ்க்கின்றன. அவிழும் முடிச்சுக்கள் சுவாரசியமாகவும் இருக்கின்றன. ப

மொத்தத்தில், ‘எண்ணித்துணிக’ சினிமா ரசிகர்களுக்குப் பிடிக்கும்.

மார்க் 3/5