எய்தவன் – திரை விமர்சனம்!
நம்மை பெற்றெடுத்து வளர்ந்து ஆளாகியுள்ள இந்த சமுதாயம் எங்ஙனம் உருவாகிறது? ஒரு நாடு என்பது எப்படி உருவாகிறது? ஒரு தேசத்தில் ஜனங்களுடைய மன நிலை எவ்வாறு கட்டமைக்கப்படுகிறது? அதிலும் ஒரு வளரும் நாட்டின் இளைய தலைமுறைகள் எப்படி வளர்கின்றார்கள்? என்பது போன்றவைகளை அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தால் இன்று வளர்ந்த நாடுகள், வளர்கின்ற நாடுகள் என்று நாம் பெருமையாக பேசுகிற நாடுகள் அத்தனையும் கல்வியை முன்ன்னிலைப் படுத்தியதால்தான் வளர்ச்சி அடைந்துள்ளது அல்லது முன்னேறியுள்ளது என்று சொல்வதற்கு எக்கச்சக்கமான அளவில் அறிவோ, திறமையோ தேவையில்லை.

ஆனால் அநத கல்வி என்ற மூன்றெழுத்தைக் காட்டி பணம் என்ற மூன்றெழுத்தை மட்டும் குறிக்கோளாக செயல்பட்டு வரும் நமது நாட்டிலுள்ள கல்வி நிலையங்களின் தாளாளர்கள் பெரும்பாலானோர் கெட்டவர்கள் என்பதும் இவர்களெல்லாம் சமூக குற்றவாளிகள் என்பதும் பலருக்கும் தெரியும். ஆனாலும் இவர்களை நம்பித்தான் இன்று பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை ஒப்படைக்கிறார்கள். கல்வி என்ற பெயரில் வியாபாரம் செய்கிறவர்களிடம் ஒப்படைக்கப்படும் குழந்தைகள் எந்தவிதமாக வளர்வார்கள், எவ்வாறு கல்வியை கற்பார்கள்? என்பதையெல்லாம் கொஞ்சம் யோசிக்க வைக்கும் படம்தான் எய்தவன்.
மிடில் கிளாஸ் பேமிலியைச் சேர்ந்த நாயகன் கலையரசன். டாக்டராகனு என்ற லட்சியம் கொண்ட ஹீரோவின் ஆசைத் தங்கை + 2 வில் நல்ல மார்க் எடுத்தாலும் கவர்மெண்ட் மெடிக்கல் கல்லூரியில் கட்-அப்-ஆல் இடம் கிடைக்காமல் போய் விடுகிறது. ஆனாலும் தங்கச்சியின் ஆசையை நிறைவேற்ற பிரைவேட் மெடிக்கல் காலேஜ் ஒன்றில் பல லட்சம் நன்கொடை கொடுத்து சீட் வாங்குகிறார் கலையரசன். பணத்தைக் கொடுத்த பின்தான் அந்தக் காலேஜூன் அங்கீகாரம் ரத்தான விவரம் அவருக்குத் தெரிய வருகிறது. இதைல் அதிர்ச்சி அடைந்த கலையரசன் இடைத் தரகரிடம் கொடுத்த பல லட்சம பணத்தைப் பெறும் முயற்சியை செய்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக தங்கை விபத்தில் இறக்க, அதற்குக் காரணமானவர்களைப் பழி வாங்கப் புறப்படுகிறார் கலையசரன். அதன் பின் நடப்பது என்ன? என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
மேற்படி சொன்ன பாதி கதை வரை படு பரபரப்பாக – அதாவது இண்டர்வெல் வரை ஷார்ப் டயலாக், ஸ்கிரீன் பிளே எல்லாம் பக்காவாக பிளான் பண்ணி எடுத்தவர் பின்பாதியில் யாரையோ திருப்திப்படுத்த டாஸ்மாக், பாட்டு, வேற ரூட் என்று கொஞ்சம் டைவர்ட் ஆனாலும் படம் முடியும் போது நிறைவாகவே இருப்பதை ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.
நாயகன் கலையரசன் கேரகடருக்கு படு பர்பகெட்டாக பொருந்தி இருக்கிறார். மிகையில்லாத நடிப்பில் கவனம் பெறுகிறார். நாயகி சாட்னா டைட்டஸ் அழகான சப் இன்ஸ்பெக்டராக வருகிறார். ஆனால் அவர் டூட்டியையும், இன்வால்மெண்டையும் இன்னும் இணைத்து கதை பண்ணியிருந்தால் சாட்னா-வை இன்னும் கவனிக்க தோன்றி இருக்கும். பார்த்தீவ் பார்கின் இசையில் பாடல்கள் எடுபடவில்லை என்பதுடன், பின்னணி இசை கொஞ்சம் எல்லை மீறி எரிச்சலை ஏர்படுத்துகிறது.
அறிமுக இயக்குநர் சக்தி ராஜசேகரன், நிஜமாகவே நடந்த சம்பவம் ஒன்றை கருவாக வைத்துக் கொண்டும் பத்திரிகைகளில் வெளியான சில செய்திகளை இணைத்துக் கொண்டு, ‘எய்தவன்’ என்ற சுவாரஸ்யமான திரைக்கதையை அமைத்திருக்கிறார். அடுத்த சினிமா-வுக்கான வாய்ப்பு எப்போ கிடைக்குமோ என்ற பீதியில் கொஞ்சம் அடிசினலான காட்சிகளை வலுவில் எடுத்து திணித்திருந்தாலும் சமூக நடப்பைக் காட்டும் முயற்சியில் தனி முத்திரை பதித்து விட்டான் இந்த எய்தவன் .


