உலகக் கல்லீரல் அழற்சி நாள் – வேர்ல்ட் ஹெப்படைட்டிஸ் டே!

உலகக் கல்லீரல் அழற்சி நாள் – வேர்ல்ட் ஹெப்படைட்டிஸ் டே!

லகக் கல்லீரல் அழற்சி நாள் (World Hepatitis Day), ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 28 ஆம் நாள் அனுசரிக்கப் படுகிறது. ஹெபடைட்டிஸ் பி வைரஸைக் கண்டுபிடித்த பேராசிரியர் புளூம்பெர்க்கின் பிறந்த தினமான இன்று அவரது நினைவாக இத்தினத்தை தேர்ந்தெடுத்தார்கள். கல்லீரல் அழற்சி நோய்களுக்கான அறிகுறிகள், தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகளைப் பற்றிய விழிப்புணர்வை உலக மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கத்தோடு இந்த நாள் உலக சுகாதார அமைப்பால் (WHO) ஏற்படுத்தப்பட்டது.

உலகளவில் நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் கடும் கல்லீரல் அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 1.4 மில்லியன் பேர் இந்நோயின் தாக்கத்தால் மரணமடைகின்றனர்.

உலக சுகாதார அமைப்பால் அறிவிக்கப்பட்ட எட்டு மக்கள் நல்வாழ்வுப் பரப்புரைகளில் உலகக் கல்லீரல் அழற்சி நாளும் ஒன்று. மற்ற ஏழு நாட்கள்: உலக சுகாதார நாள், உலக குருதிக் கொடையாளர் நாள், உலக நோய் எதிர்ப்புத் திறனூட்டல் வாரம், உலக காச நோய் நாள், உலக புகையிலை எதிர்ப்பு நாள், உலக மலேரியா நாள், உலக எயிட்ஸ் நாள்.

நம் இதயம், மூளையைப் போலவே முக்கியமான இன்னொரு உடல் உள் உறுப்பு கல்லீரல். ஆனால் இதயம், மூளை ஆகிய உறுப்புகளுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம், கல்லீரலுக்குக் கொடுக்கப்படுவதில்லை. உடலின் ரத்தம் முழுவதும் கல்லீரல் வழியே தினமும் பல முறை கடந்து செல்கிறது. நூற்றுக்கும் மேற்பட்ட பணிகளைக் கல்லீரல் செய்கிறது. ஆனால், குடிப் பழக்கம், தவறான உணவு பழக்கம், வாழ்க்கை முறை மாற்றம் ஆகியவற்றின் காரணமாகக் கல்லீரலைப் பல வகைகளில் பாதிப்புக்கு உள்ளாக்குகிறோம்.

இன்றைக்கு உலக அளவில் மனிதர்களின் இறப்புக்கு மூன்றாவது முக்கிய காரணமாக இருப்பது கல்லீரல் கோளாறுகள்தான். உலகில் ஒவ்வோர் ஆண்டும் 15 லட்சம் பேர் கல்லீரல் பாதிப்பு காரணமாக உயிரிழப்பதாக, உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரம் கூறுகிறது. சிக்கல் என்னவென்றால் கல்லீரலில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், அது உடனே தெரிய வராது. பிரச்சினை தீவிரமடைந்த பிறகே அறிகுறிகள் தெரியவரும். அதனால் கல்லீரல் நோய்களை லேசாக எடுத்துக்கொண்டால், நமக்குத்தான் ஆபத்து.

ஹெப்படைட்டிஸ் என்றால்

கல்லீரலைப் பாதிக்கும் வைரஸ் கிருமிகளை ஹெப்படைட்டிஸ் என அழைக்கிறார்கள். ஹெப்படைட்டிஸ் கிருமிகளில் ஏ, பி, சி, டி, இ எனப் பல வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு பிரச்சினையை ஏற்படுத்தினாலும், அனைத்துமே கல்லீரலைப் பாதிக்கும் வைரஸ் கிருமிகளே. பொதுவாக வைரஸ் கிருமிகளால் கல்லீரல் பாதிக்கப்பட்டால், கல்லீரல் அழற்சி அல்லது வீக்கம் உண்டாகும். கல்லீரல் செல்கள் அழற்சி அடைவதாலேயே ஹெப்படைட்டிஸ் வைரஸ் கிருமி தொற்றவும் முடிகிறது.

இன்றைக்கு உலகில் ஹெப்படைட்டிஸ் பி, ஹெப்படைட்டிஸ் சி வைரஸ் பாதிப்பால் 50 கோடிப் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஹெப்படைட்டிஸ் பி, சியை கவனிக்காமல் விட்டுவிட்டால் சிரோசிஸ் (கல்லீரல் இழைநார் வளர்ச்சி நோய்), கல்லீரல் புற்றுநோய், கல்லீரல் செயலிழப்பு போன்றவை ஏற்படலாம்.

கல்லீரல் அழற்சி எப்படி ஏற்படுகிறது?

இதற்குப் பல காரணங்கள் உள்ளன. நோய்த் தொற்றுகள், சில மருந்துகள், நச்சுப் பொருட்கள், குறிப்பாக குடிப் பழக்கம், கல்லீரல் புற்றுநோய் காரணமாகக் கல்லீரலில் ஹெப்படைட்டிஸ் வைரஸ் கிருமிகள் தொற்றிவிடுதல் போன்றவை அவற்றில் சில. இவற்றில் ‘சிரோசிஸ்’ எனும் நோய்தான் , கல்லீரல் நோய்களின் கடைசி நிலை. இதற்கு மிகவும் முக்கியக் காரணம் மது அருந்துவது.

தடுப்பு முறைகள்

சீரான உணவு முறை, உடற்பயிற்சி, உரிய ஓய்வு ஆகியவையே கல்லீரலை ஆரோக்கியமாக வைப்பதற்கு மட்டுமல்லாமல், ஆரோக்கிய வாழ்வுக்கும் அடிப்படை. ஹெப்படைட்டிஸ் ஏ, ஹெப்படைட்டிஸ் பி வராமல் தடுக்கத் தடுப்பூசிகள் போட்டுக்கொண்டால் கல்லீரல் பாதிப்புக்கு உள்ளாகாமல் தடுக்கலாம். மது அருந்துவது கல்லீரலைக் கடுமையாகப் பாதிக்கும் என்பதால் குடிப் பழக்கத்தை முற்றிலும் கைவிட வேண்டும். கல்லீரலைப் பாதிக்காத மருந்து, மாத்திரைகளை மட்டுமே பொதுவாக எடுத்துக்கொள்ள வேண்டும். எந்த மருந்தையும் மருத்துவர் அறிவுரையின்றி நீண்ட நாட்களுக்குச் சாப்பிடக் கூடாது. கல்லீரல் பாதிப்பு உள்ளவர்கள் ரத்தம், உறுப்பு, திசுக்கள், விந்து ஆகிய வற்றைத் தானமாக அளிக்கக் கூடாது.

Related Posts

error: Content is protected !!