உலக முதலுதவி தினம்: ஒவ்வொருவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய உயிர் காக்கும் கலை!
ஆண்டுதோறும் செப்டம்பர் 14 அல்லது செப்டம்பர் மாதத்தின் இரண்டாம் சனிக்கிழமை, உலக முதலுதவி நாளாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள், ஒரு விபத்து அல்லது அவசர நிலையில், நாம் அளிக்கும் முதலுதவியின் அவசியத்தை வலியுறுத்துகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்கள் இணைந்து இந்த நாளை உருவாக்கியுள்ளன.

முதலுதவி என்றால் என்ன?
முதலுதவி என்பது ஒரு நோய் அல்லது காயத்தால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு, முறையான மருத்துவ உதவி கிடைக்கும் வரை, நாம் அளிக்கும் முதல் கட்ட கவனிப்பு ஆகும். இதைக் கொடுப்பதற்கு மருத்துவ நிபுணராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. முறையாகப் பயிற்சி பெற்ற ஒரு சாதாரண மனிதனும் முதலுதவி அளிக்க முடியும். சில சமயங்களில், சிறிய காயங்களுக்கு முதலுதவி மட்டுமே போதுமானதாக இருக்கும். குறைந்த உபகரணங்களை வைத்து உயிரைக் காப்பாற்றும் திறன்களைக் கொண்டதுதான் இந்த முதலுதவி.
முதலுதவியின் மூன்று முக்கிய நோக்கங்கள்
முதலுதவி மூன்று முக்கிய நோக்கங்களைக் கொண்டுள்ளது:
- உயிரைப் பாதுகாத்தல்: ஒருவரின் உயிர் ஆபத்தில் இருக்கும்போது, உடனடியாகச் செயல்பட்டு உயிரைக் காப்பாற்றுவது. உதாரணமாக, மூச்சுத் திணறல் ஏற்பட்டால், சி.பி.ஆர். (CPR) செய்வது அல்லது கடுமையான இரத்தப்போக்கை கட்டுப்படுத்துவது.
- நிலைமை மோசமடையாமல் தடுத்தல்: பாதிக்கப்பட்டவரின் நிலைமை மேலும் மோசமடையாமல் பார்த்துக்கொள்வது. உதாரணமாக, விபத்தில் காயமடைந்தவரை சரியாக இடம் மாற்றுவது.
- குணமடைய முன் ஏற்பாடு செய்தல்: பாதிக்கப்பட்டவர் விரைவில் குணமடையத் தேவையான முதல் உதவிகளை அளிப்பது. உதாரணமாக, காயத்தைச் சுத்தம் செய்து கட்டுப்போடுவது.
முதலுதவியின் வரலாறு
முதலுதவி என்ற நடைமுறை 11-ஆம் நூற்றாண்டிலேயே பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அதற்குப் பிறகு இது பெருமளவில் கைவிடப்பட்டது. 1859-இல் நடந்த சல்பிரினோ போருக்குப் பிறகுதான் இதன் முக்கியத்துவம் மீண்டும் உணரப்பட்டது. அந்தப் போரில் காயமடைந்தவர்களுக்கு உதவ, ஜீன் ஹென்ரி டுனன்ட் என்ற மனிதர் கிராம மக்களை ஒன்று திரட்டினார். அந்தப் போராளிகளுக்கு அவர்கள் அளித்த முதலுதவி, பின்னாளில் செஞ்சிலுவை சங்கம் உருவாகக் காரணமாக அமைந்தது.
அதன் பிறகு, 1877-இல் புனித ஜான் அவசர ஊர்தி (St. John Ambulance) என்ற அமைப்பு முதலுதவியைக் கற்றுக்கொடுக்கத் தொடங்கப்பட்டது. 1878-இல், அறுவை சிகிச்சை நிபுணர் பீட்டர் ஷெப்பர்ட் முதன்முதலில் ‘காயப்பட்டோருக்கான முதலுதவி’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். இந்த நிகழ்வுகள், முதலுதவியின் முக்கியத்துவத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தன.
முதலுதவியின் அருமை
முதலுதவி என்பது ஒரு வெறும் சிகிச்சை மட்டுமல்ல. அது ஒரு விலைமதிப்பற்ற உயிரைக் காப்பாற்ற உதவும் ஒரு கருவி. திடீரென ஏற்படும் மாரடைப்பு, மூச்சுத் திணறல், சாலை விபத்துகள் போன்ற அவசர காலங்களில், சில நிமிடங்களில் நாம் செய்யும் முதலுதவி, ஒருவரின் வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றலாம். சரியான நேரத்தில் செய்யப்படும் ஒரு சிறிய உதவி கூட, ஒருவரின் வாழ்க்கையை மீட்டெடுக்க உதவும்.
எனவே, இந்த உலக முதலுதவி நாளில், ஒவ்வொருவரும் முதலுதவி குறித்த அடிப்படைப் பயிற்சிகளைப் பெறுவது அவசியமாகும். நாம் ஒவ்வொருவரும் ஒரு அவசர காலத்தில் ஒரு உயிர் காக்கும் தூதுவர்களாக மாற முடியும். இது ஒரு மருத்துவரின் பணி மட்டுமல்ல, இது ஒரு மனிதனின் கடமை.
நிலவளம் ரெங்கராஜன்



