உலக அலர்ஜி தினம்: ஒவ்வாமை குறித்த விழிப்புணர்வு!
ஆண்டுதோறும் ஜூலை 8 ஆம் தேதி உலக அலர்ஜி (ஒவ்வாமை) தினமாக கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வாமை எனப்படும் அலர்ஜியால் உலக மக்கள் தொகையில் பெரும்பாலானோர் பாதிக்கப்படுகின்றனர். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான அலர்ஜி இருக்கும்; அதை ஏற்படுத்தும் பொருட்களும் ஒருவருக்கொருவர் மாறுபடலாம். அதைச் சாதாரணமாகக் கருதி ஒதுக்கிவிட்டால் உயிருக்கு ஆபத்தாக கூட மாறலாம்.
அலர்ஜி என்பது என்ன?
அலர்ஜி என்பது உடலில் உள்ள நோய் தடுப்பாற்றல் அமைப்பின் அசாதாரண எதிர்செயலாகும். நமது உடல் தற்காப்பு அமைப்பு, பொதுவாக ஆபத்தில்லாத பொருட்களான மகரந்தம், விலங்குகளின் இறகு, செதில்கள், தூசிப் பூச்சிகள், மற்றும் சில உணவு வகைகளால் கூட எதிராகச் செயலாற்றத் தொடங்கும். எந்தப் பொருளும் உடலுக்கு அலர்ஜியை ஏற்படுத்த முடியும்.இது பெரும்பாலும் கண், மூக்கு, தொண்டை, நுரையீரல், தோல் போன்ற இடங்களில் ஏற்படலாம். அலர்ஜி ஏற்படுத்தக்கூடிய பொருள் ஒருவரின் உடலில் படும்போது ‘ஹிஸ்டமின்’ எனும், ஒரு வேதியியல் பொருள் சுரக்கும். இது, ஒரு சில எதிர்வினை மாற்றங்களை ஏற்படுத்தி எரிச்சல், வீக்கம் மாதிரியான தொந்தரவுகளை கொடுக்கும்.

அலர்ஜியினால் எந்த மாதிரியான தொந்தரவுகள் வரலாம்?
கண் எரிச்சல், சிவந்து போகுதல், அதிக கண்ணீர் போன்றவை ஏற்படலாம். தும்மல், மூக்கடைப்பு, சளி, தொண்டை கரகரப்பு போன்றவை ஏற்படலாம். நுரையீரலில் இது இருமல், மூச்சு விட சிரமம், தோலில் அரிப்பு, படை போன்றவை ஏற்படலாம். அதிக அளவில் அலர்ஜி ஏற்படும்போது உடல் வீக்கம், உதடு மற்றும் கண் தடிப்பு, மூச்சு திணறல் ஏற்பட்டு, உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலைமையும் வரலாம்.
அறிகுறிகள் மற்றும் விழிப்புணர்வு:
ஒவ்வாமைக்கான பொதுவான அறிகுறிகள் தும்மல், மூக்கு ஒழுகுதல், கண் அரிப்பு, தோல் தடிப்பு, சுவாசிப்பதில் சிரமம் போன்றவை. இந்த அறிகுறிகள் தென்பட்டால் தாமதப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரைச் சந்தித்து சரியான பரிசோதனை மற்றும் சிகிச்சை பெறுவது அவசியம். அலர்ஜி எதனால் ஏற்படுகிறது என்பதைக் கண்டறிந்து, அதைத் தவிர்ப்பது அல்லது கட்டுப்படுத்துவதன் மூலம் உயிருக்கு ஆபத்தான விளைவுகளைத் தடுக்கலாம். இந்த நாள், ஒவ்வாமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, பாதிக்கப்பட்டவர்கள் சரியான நேரத்தில் மருத்துவ உதவியைப் பெற ஊக்குவிக்கிறது.உதாரணத்திற்கு, சிலருக்கு டிராவல் செய்து கொண்டிருக்கும் போதே கண்ணிலிருந்து நீர் வெளியே வந்த படியே இருக்கலாம் அல்லது சிலருக்கு வீடு சுத்தம் செய்யும் போது தும்மல் வரலாம். இந்த இரண்டு உதாரணங்களுமே செய்து முடித்த ஒரு மணி நேரத்திற்குள் தும்மலோ, கண்ணில் நீர் வருவதோ தொடர்ச்சியாக இருந்தால், அலர்ஜி இருக்கிறது என்பதை நம்மால் கண்டறிய முடியும். இந்த சூழலில் நமக்கு தும்மலும், கண்ணீரும் வருகிறது என்ற புரிதல் இருந்தாலே போதுமானது.
அப்படி தெரிந்த பின்னாடி, டிராவல் செய்யும் போது கண் கண்ணாடி அணிவதும், வீட்டை சுத்தம் செய்யும் போது மாஸ்க் அணிந்து கொண்டு சுத்தம் செய்யும் போது, அலர்ஜி வருவதைத் தடுக்க முடியும். இனி வரும் காலங்களில் அலர்ஜி ஏற்படுகிறது என்றால், அதற்கான சிறந்த சிகிச்சைமுறை எதுவென்றால், அலர்ஜி எதனால் ஏற்படுகிறது என்ற சரியான காரணத்தைக் கண்டறிந்து, அதை தவிர்த்து விட்டோமென்றாலே போதுமானது என்பது தான் சிறந்த விழிப்புணர்வாகும்.
அடிசினல் ரிப்போர்ட்
அந்த காலங்களை ஒப்பிடுவதை விட, இந்த காலத்தில் அலர்ஜி அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அதற்கு ஒரு காரணத்தை மருத்துவத்துறை கூறுகிறது. அதாவது, ஹைஜீன் ஹைப்போதீசிஸ் என்கிறார்கள். தற்போது, அனைவருமே சுத்தம் சுத்தமென்று அதிகமாக பேசுகிறோம் அல்லது அதிக சுத்தமான இடத்தில் மட்டுமே வசிக்க ஆசைப்படுகிறோம்.
ஹைஜீன் ஹைப்போதீசிஸ் என்பது என்னவென்றால், குழந்தைகளாக இருக்கும் போதே, அவர்களின் உடலை Immune System Matured ஆகும் அளவிற்கு அவர்களை பழக்கப்படுத்த வேண்டும். அதாவது, குழந்தைப் பருவத்திலிருந்தே சமூகத்தில் பலருடன் பழகும்போது, யார் நல்லவர், யார் கெட்டவர் என்பதை வளரும் போதே கற்றுக் கொள்வார்கள். இதுவே, குழந்தையை வெளியே விடாமல், யாரிடமும் பழக விடாமல் இருக்கும் போது, எந்தவொரு நபரைப் பார்த்தாலும் பயந்து ஒதுங்கி நிற்கும் அல்லவா.
அது போல் தான், இன்றைக்கு, சில பெற்றோர்கள் சுத்தம் சுத்தம் என்று, குழந்தைகளை தரையில் கூட தவழ விட மாட்டார்கள். மேலும் சிலர் தங்களுடைய குழந்தையை வேறு யாரும் தொட விடாமல் பார்த்துக் கொள்வார்கள். அதனால் அவர்களின் உடலுக்கு நல்ல கிருமி எது, தீங்கு விளைவிக்கும் கிருமி எதுவென்று தெரியாமல் இருக்கும். அதனால் எளிதாக அலர்ஜியால் பாதிக்கப்படுவார்கள். அதனால் தான், குழந்தைப் பருவத்திலிருந்தே அவர்களின் உடலுக்கு நல்ல கிருமி, கெட்ட கிருமி இரண்டையும் ஓரளவு பழக்கப்படுத்தியிருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். என்றைக்குமே சுத்தமாக இருப்பது ஆரோக்கியமானது தான், அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அதீத சுத்தம் மட்டுமே இங்கு கேள்விக்குரியது என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
டாக்டர். செந்தில் வசந்த்


