பெண்கள் தங்களுக்கு வீட்டு வேலைகள் செய்ய விருப்பமில்லை என்றால் திருமணத்துக்கு முன்பே சொல்லிவிட வேண்டும் – மும்பை ஐகோர்ட்!

பெண்கள் தங்களுக்கு வீட்டு வேலைகள் செய்ய விருப்பமில்லை என்றால் திருமணத்துக்கு முன்பே சொல்லிவிட வேண்டும் – மும்பை ஐகோர்ட்!

திருமணமான பெண்ணொருவர் தன் கணவர் மற்றும் கணவரின் குடும்பத்தினர் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் தன்னை மிகமோசமாக துன்புறுத்துவதாக தெரிவித்திருந்திருக்கிறார். இந்த வழக்கு, மும்பை ஐகோர்ட் நீதிபதிகள் விபா கன்கன்வாடி மற்றும் ராஜேஷ் எஸ்.படீல் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, பெண்ணின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தரப்பில், ‘இவருக்கு இது போன்று வழக்கு தொடுப்பது வாடிக்கையான ஒன்று என்றும் தனது முன்னாள் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதுகூட இதேபோல வழக்குகள் கொடுத்திருக்கிறார். அந்த வழக்குகள் எல்லாவற்றிலும் இப்பெண்ணால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டு விட்டனர் அல்லது இவரே வழக்கை திரும்பப் பெற்றுக்கொண்டுவிட்டார். எனவே, இவரது வழக்கை விசாரணைக்கு எடுக்கக்கூடாது என்று வழக்கறிஞர் மூலம் பதில் தரப்பட்டிருக்கிறது.

இது குறித்து கூறிய நீதிபதிகள், ‘ஒருவரின் முந்தைய வழக்குகளை அடிப்படையாக வைத்து, அவருக்கு வழக்கு கொடுக்கும் மனப்போக்கு இருந்திருக்கிறது. அதனால் இந்த வழக்கை ஏற்கக்கூடாது என சொல்வதை ஏற்க இயலாது. அதேநேரம் அப்பெண் தரப்பில் தனக்கு என்ன மாதிரியான உடல் – மன நல சிக்கல்கள் நிலவுகிறது என்பதை குறிப்பிடவில்லை. அப்பெண்ணின் வீட்டில் வீட்டுவேலை செய்வோர் யாரேனும் இருக்கிறார்களா என்பதையும் அப்பெண் குறிப்பிடவில்லை. மேலும் வழக்கு தொடுத்திருப்பவர் சொல்வதுபோல, திருமணமான பெண்ணொருவரை வீட்டுவேலை செய்ய சொல்வதென்பது கொடுமைப்படுத்துவது என்றாகாது. அதேபோல அது வீட்டுவேலை செய்யும் தொழிலாளி என்ற பொருளிலும் வராது.

திருமணம் செய்துக்கொள்ளும் பெண்ணுக்கு, வீட்டு வேலைகளை செய்வதில் விருபமில்லை என்றால், அதை அவர்கள் திருமணத்துக்கு முன்பே மாப்பிள்ளை வீட்டாரிடம் தெரிவித்துவிட வேண்டும். அதன்மூலம், அப்பெண்ணை திருமணம் செய்துகொள்வதா வேண்டாமா என்பது குறித்து அந்த மாப்பிள்ளை மறு ஆய்வு செய்வார். இதன்மூலம் திருமணத்துக்குப்பின் சிக்கல்கள் எழாமல் இருக்கும்’ எனக் கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து நீதிமன்றம் தரப்பில் இப்பெண்ணின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை ரத்து செய்யப்பட்டது. மேலும், உள்ளூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவர்களுக்கு எதிராக நடந்து வரும் குற்றவியல் நடவடிக்கைகளும் ரத்து செய்யப்பட்டது.

Related Posts

error: Content is protected !!