ஆர்.கே.நகரின் புதிய தேர்தல் அதிகாரி பிரவீன் கே.நாயர் யார் தெரியுமோ?

ஆர்.கே.நகரின் புதிய தேர்தல் அதிகாரி பிரவீன் கே.நாயர் யார் தெரியுமோ?

ஜெயலலிதா மரணம் அடைந்ததை தொடர்ந்து காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்த ஏப்ரல் 12ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து கடந்த ஏப்ரல் 10ம் தேதி ஆர்.கே.நகர் தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் திடீரென ரத்து செய்தது. நீண்ட இழுபறிக்கு பிறகு 7 மாதம் கழித்து மீண்டும் வருகிற 21ம் தேதி ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் வாக்கு பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, கடந்த மாதம் 27ம் தேதி முதல் கடந்த 4ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. இதில் திமுக வேட்பாளர் மருதுகணேஷ், அதிமுக வேட்பாளர் மதுசூதனன், சுயேச்சை வேட்பாளர்களாக டி.டி.வி.தினகரன், ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா, நடிகர் விஷால் உள்ளிட்ட 145 பேர்  வேட்புமனு தாக்கல் செய்தனர்.

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை கடந்த 7ம் தேதி நடைபெற்றது. திமுக, அதிமுக, பாஜ வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டது. நடிகர் விஷால், தீபா உள்ளிட்ட 73 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது. இதில் நடிகர் விஷால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதில் உச்சக்கட்ட குழப்பம் நடைபெற்றது. 7ம் தேதி மாலை 3 மணிக்கு விஷால் மனுவை பரிசீலனை செய்த ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி (ஆர்ஓ) வேலுச்சாமி மனு நிராகரிக்கப்பட்டதாக முதலில் அறிவித்தார். பின்னர் விஷால் எடுத்து வைத்த வாதத்துக்கு பிறகு மீண்டும் அவரது மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மீண்டும் நள்ளிரவு விஷால் மனு நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. விஷால் மனுவை முன்மொழிந்த 2 பேரின் கையெழுத்து போலியானதாக கூறி நிராகரிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி வேலுச்சாமியின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆர்.கே.நகரில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக தேர்தல் நடத்தும் அதிகாரி செயல்படுகிறார், விஷால் வேட்புமனு பரிசீலனையின்போது, தேர்தல் அதிகாரி அடிக்கடி அலுவலகத்துக்கு வெளியே சென்று யாரிடமோ பேசி விட்டு மீண்டும் வந்து நிராகரிக்கப்பட்டதாக கூறினார் என்ற கருத்தும் கூறப்பட்டது. இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்எல்ஏக்கள் எ.வ.வேலு, சுதர்சனம் ஆகியோர் நேற்று காலை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்தித்து, ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி வேலுச்சாமி ஒருதலைபட்சமாக செயல்படுகிறார். அவரை நீக்க வேண்டும் என்று புகார் கூறினர். இந்த நிலையில் ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி வேலுச்சாமி நீக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் நேற்று பிற்பகல் ஒரு மணி அளவில் அதிரடியாக அறிவித்தது.

இதுகுறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானிக்கு நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில், 7-12-2017 அன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அனுப்பிய கடிதம் பரிசீலனை செய்யப்பட்டது. அதன்படி, இந்திய தேர்தல் ஆணையம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நடத்தும் அதிகாரியாக (ஆர்ஓ) பிரவீன் கே.நாயரை (ஐஏஎஸ்) நியமனம் செய்கிறோம்” என்று அதில் கூறப்பட்டுள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பிரவீன் கே.நாயர் கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தும் அதிகாரியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக பெண் அதிகாரி பத்மஜாதேவி நியமிக்கப்பட்டு, அவரது செயல்பாடு திருப்தி அளிக்காமல் தேர்தல் ஆணையராக  பிரவீன் கே.நாயரை நியமித்தது. அதன்பிறகுதான் ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது குறித்த தகவல் தேர்தல் ஆணையத்துக்கு ஆதாரப்பூர்வமாக அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்துதான் ஆர்.கே.நகர் தேர்தல் ஏப்ரல் 10ம் தேதி ரத்து செய்யப்பட்டது.

அதேபோன்றுதான் இந்த முறையும் ஆதிதிராவிட நலத்துறை இணை ஆணையராக இருந்த வேலுச்சாமி தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு, அவர் நடவடிக்கையில் திருப்தி இல்லாத தேர்தல் ஆணையம், மீண்டும் பிரவீன் கே.நாயரை நியமித்துள்ளது. தற்போது பிரவீன் கே.நாயர் சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு அலுவலகத்தில் மகளிர் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குனராக உள்ளார். தற்போது பணி நிமித்தமாக தென்கொரியா சென்றுள்ள நாயர் நேற்று நள்ளிரவு சென்னை திரும்பினார். இன்று காலை சென்னை, ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட தண்டையார்பேட்டை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொள்கிறார். கடந்த முறை ஆர்கே நகரில் தேர்தல் அதிகாரி பத்மஜாதேவி நீக்கப்பட்டு,  பிரவீன் கே.நாயர் நியமிக்கப்பட்டார். வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த விவகாரம் வெளியாகி, தேர்தல் ரத்தானது.
இப்போது வேலுச்சாமி நீக்கப்பட்டு  மீண்டும் பிரவீன் கே.நாயர் நியமிக்கபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எக்ஸ்ட்ரா ரிப்போர்ட்

முன்னர் இருந்த தேர்தல் அதிகாரி வேலுச்சாமி, நடிகர் விஷால் மனுவை நிராகரிக்கப்பட்டது என வாய்மொழியாக உத்தரவு பிறப்பித்ததுதான் அவர் செய்த தவறாக தேர்தல் ஆணையம் கருத்தில் கொண்டுள்ளது. விஷால் மனு நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை தேர்தல் விதிப்படி, தேர்தல் நடத்தும் அதிகாரி எழுத்துப்பூர்வமாகவே கடிதம் அளித்திருக்க வேண்டும். ஆனால், அவர் அப்படி செய்யாததாலே தற்போது வேலுச்சாமி நீக்குவதற்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது என்கிறார்கள்

error: Content is protected !!