ரேஷன் அரிசியை நிறுத்திவிடுவது பெரும்பாவம் இல்லையா? By சரவணன் சந்திரன்

அடுத்ததாக ரேஷன் கடைகளுக்கு உலை வைக்கப் போகிறார்கள். ஏற்கனவே எழுதியதுதான். ஆம்.. சத்தமில்லாமல் ஒரு தவறான செயலை ரேஷன் கடைகளில் செய்து கொண்டிருக்கிறார்கள். வெளிநாடுகளில் மனிதர்கள் சாப்பிடத் தகுதியில்லாததாகக் கருதப்படும் கேசரிப் பருப்பு என்கிற வகையை இறக்குமதி செய்யத் திட்டமிருக்கிறார்கள். பருப்பு இறக்குமதியில் மட்டும் கொள்ளைக் காசு. கமிஷன் தராவிட்டால் எதுவும் நடக்காது. அதிலும் உலகில் இருக்கிற தொழில்களிலேயே அதிகபட்ச கமிஷன் கிடைக்கும் தொழில் இது மட்டும்தான். வெள்ளைச் சட்டை மட்டுமே முதலீடு. தமிழ்நாடு முழுக்க ரேஷன் பொருட்கள் சரிவரக் கிடைக்கவில்லை. மக்கள் வரிசையில் பரிதாபமாக நிற்கும் காட்சிகளைப் போகிற இடங்களில் எல்லாம் பார்க்க முடிகிறது. மத்திய அரசு ரேஷன் கடைகளை ஒழித்துக் கட்டுவதையே முதல் வேலையாகக் கருதுகிறதோ என்ற அச்சம் நிலவுகிறது. மாநில அரசும் ரகசியமாக அப்படி ஒரு திட்டம் வைத்திருக்கிறதோ என சந்தேகிக்க வேண்டியிருக்கிறது.
படிப்படியாக ரேஷன் பொருட்களில் இருந்து மக்களை விலக்கும் நடவடிக்கைகளை மறைமுகமாகத் துவக்குகிறதோ என்கிற அச்சமும் இருக்கிறது. ரேஷன் அரிசியெல்லாம் இப்ப யாரு சாப்பிடறா சார் என நடுத்தர வர்க்கத்தினர் கேட்கலாம். நமக்குத் தெரிந்த உலகம் என்பது உள்ளங்கை அளவுதான். இலவச அரிசி போன்ற அறிவிப்புகளைச் சாடும் கொள்கை கொண்ட ஒரு நண்பர் ரேஷன் அரிசி கொடுப்பதை நிறுத்தும் மத்திய அரசின் கொள்கை முடிவையும் ஆதரித்துப் பேசினார். அந்த அரிசியை யாரும் சாப்பிடுவதில்லை என்றும் அது பெரும்பாலும் விற்கப்படுவதாகவும் சொன்னார். இது எந்த அளவுக்கு உண்மை?
உயிர் பறிக்கும் விளையாட்டு?
தாது வருடப் பஞ்சம்போல் இல்லாவிட்டாலும் மிகக் கொடுமையான வறுமை தென் மாவட்டங்களில் நிலவிய நேரம். தீப்பட்டி கம்பெனிகளில் ஒட்டுவதற்காக ஏழு இலைக் கிழங்கு மாவு தருவார்கள். மக்கள் வறுமையின் காரணமாக அந்த மாவை வைத்து ரொட்டி சுட்டுச் சாப்பிட்டுவிடுவார்கள். இல்லாவிட்டால் கஞ்சி காய்ச்சிக் குடித்துவிடுவார்கள். அதைத் தடுப்பதற்காக கம்பெனிக்காரர்கள், துத்தநாகம் என்கிற கடுமையான விஷத்தை பொடியாக்கி, அந்தத் துகள்களை மாவில் கலந்துவிடுவார்கள். வறுமையின் உச்சம் கண்டவர்கள் மாவைத் தரையில் கொட்டிவிட்டு, பொடிப்பொடியாகக் கிடக்கும் துத்தநாகத் துகள்களைப் பொறுக்கிவிட்டு மீண்டும் ரொட்டி சுடுவதும் உண்டு. ரேஷன் அரிசி வெகுவாகப் புழக்கத்திற்கு வந்த பிறகே இப்படியான உயிர் பறிக்கும் விளையாட்டுக்கள் நின்றன.
தமிழகம் முழுக்க ஒருமுறை மழைவெள்ளப் பாதிப்பு ஏற்பட்டபோது, கடலூர் மாவட்டம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. ஆற்றோரமாக இருந்த அலுவலகங்கள் சில, அலுவலகர்களோடு வெள்ளத்தில் மூழ்கின. ஆடு மாடுகளெல்லாம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. அப்போது மூதாட்டியொருவர் இடிந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தன்னுடைய குடிசையின் முன் நின்று கதறிக் கொண்டிருந்தார். “வச்சுருந்த ரேஷன் அர்சியெல்லாம் அட்ச்சிட்டுப் பூய்ட்டுதே” என்கிற அவருடைய கதறல் அங்கிருந்த பிணவாடையைவிட அடர்த்தியாக இருந்தது.
ரேஷன் அரிசி கடத்தல் பரவலாக நடக்கிறதென்றும் அதனால் ரேஷனில் அரிசி போடுவதை நிறுத்திவிடலாம் என்றும் அந்த நண்பர் சொன்னார். ரேஷன் அரிசிக் கடத்தல் நடப்பது தவறுதான். தண்டிக்கப்பட வேண்டிய குற்றம்தான். ஆனால் அப்படிக் கடத்தப்படும் ரேஷன் அரிசி மீண்டும் பாலிஷ் செய்யப்பட்டு தாஜ் ஹோட்டலிலா இட்லியாகிறது? இருபது முப்பது ரூபாய்க்கு சாப்பாடு போடும் தெருவோரக் கடைகளுக்குத்தானே வருகிறது. அந்தத் தெருவோர உணவுக் கடைகளில் யார் வந்து சாப்பிடுகிறார்கள்? அதனால் கடத்தல் இருந்துவிட்டுப் போகலாம் தப்பில்லை என்று ஒரு தியரியும் இருக்கிறதல்லவா? எனவே, ரேஷன் அரிசியை நிறுத்திவிடுவது பெரும்பாவம் இல்லையா என்று பதில் சொன்னேன். இன்னமும் பல கிராமப்புறங்களில் ரேஷன் அரிசியை வடித்துவிட்டு குழம்பிற்காக பக்கத்து வீடுகளில் கையேந்தும் அம்மாக்கள் அதிகம் இருக்கிறார்கள்.
இன்னொரு விஷயம். இப்போதெல்லாம் தீப்பட்டிக் கம்பெனிக்காரர்கள் பசையாகக் கிண்டியே தந்து விடுகிறார்களாம். அப்புறம் துத்தநாக விஷம்? அதுதான் ரேஷன் அரிசியை நிறுத்த வேண்டும் என்று சொல்கிற வார்த்தைகளில் இருக்கிறதே?
சரவணன் சந்திரன்