ஜனநாயக நிஜ நாயகன் எப்போது வருவாரோ?

தேர்தல் ஆணையராக வருவோர், தம்மை நியமனம் செய்தவர்களின் கட்சிக்கு ஆதரவாகத் தேர்தல் காலங்களில் நடப்பதை உச்சநீதிமன்றம் சில பல சூழல்களில் கடும் கண்டனத்துடன் எச்சரிக்கையே செய்துள்ளது., அத்துடன் புதிய ஜனநாயகப் பாதையைச் செப்பனிட்டுக் கொண்டு வரும் ஆணையைப் பிறப்பித்துள்ளது.ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ளாட்சித் தேர்தல்களை நடத்தவென்று தனித்தனியே மாநிலத் தேர்தல் ஆணையர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர். இவர்களை நியமிப்போர் மாநில அளவில் ஆளும் கட்சியினராக இருப்போர் தான். முதல் அமைச்சராகப் பார்த்து யாரை வேண்டுமானாலும் இந்த பதவிக்கு உரியவரை நியமனம் செய்ய முடியும். எதிர்க் கட்சித் தலைவருடன் ஆலோசனை செய்துதான் இந்த நியமனம் செய்யவேண்டும் என விதி உண்டு. அதே சமயம் இந்த விதியை எதிர்க் கட்சித் தலைவர் பயன்படுத்திக்கொண்டு தான் விரும்பும் ஒருவரைத் தேர்வு செய்திட முடியாது. சபாநாயகரின் பலம் முதல்வருக்குச் சாதகமாகத் தானே அமையும். இதைப் பயன்படுத்திக் கொள்ளும் மாநில ஆளும் கட்சிகள் தமது அரசியல் வியூகங்களுக்கு ஏற்ப வளைந்து கொடுக்கக் கூடிய அதிகாரியை நியமனம் செய்து வருகின்றனர்.
எனவே கடந்த பல்லாண்டு காலமாகவே உள்ளாட்சித் தேர்தல்களைப் பொறுத்தவரை ஆளும் கட்சியினர் வகுத்து வழங்கும் பட்டியலில் இருப்போரே அச்சுப் பிசகாமல் வெற்றிபெற்று வருகின்றனர். இது முழுக்க முழுக்க ஜனநாயகப் படுகொலை தான். இதை எல்லா எதிர்க்கட்சிகளும் கண்டித்துக் கொண்டுதான் வருகின்றன. எனினும் சட்டத்தைத் திருத்தி, ஜனநாயகத்தின் மாண்பைக் காப்பாற்ற எவரும் முன்வருவதில்லை. தாங்கள் தோற்கடிக்கப்பட… தாங்களே திருத்தச் சட்டம் கொண்டு வருவார்களா என்ன? இந்த நிலையில்தான் உச்சநீதிமன்றம் இந்த நடைமுறைக்கு நடுங்க வைக்கும் நெற்றியடி ஆணையைப் பிறப்பித்துள்ளது.
கோவா மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடக்க இருந்த நிலையில், அங்கு உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் பொறுப்பாளர் பதவி காலியாக இருந்தது. இந்தப் பதவிக்கு கோவாவின் அரசு யாரை நியமனம் செய்தது தெரியுமா? தம் ஆட்சி நிர்வாகத்தின் கீழ் சட்டத்துறைச் செயலாளராகப் பணியாற்றி வந்தவருக்கு இந்த பொறுப்பைத் தன்னிச்சையாகத் தந்துவிட்டது. சட்டம், நீதி என்ற நிலைப்பாடுகளை நீக்கி வைத்துவிட்டு, தனது ‘எஜமானர்’ சொன்னபடி தேர்தலை நடத்த முனைந்துவிட்டார் அந்த அதிகாரி.
எதிர்க்கட்சிகள் கண்டனக் கூக்குரல் எழுப்புவது, பேரணி நடத்திக் கத்தித் தீர்ப்பது என்றில்லாமல், நீதிமன்றத்தை நாடின. இதன் மூலமாக ஒரு தெளிவான ஆணையே தீர்ப்பாக வெளிவந்துள்ளது. தேர்தல் நடத்தும் ஆணையர் என்பவர் அனைத்துக் கட்சிகளுக்கும் பொதுவானவராக இருக்க வேண்டும். அவரே ஆளும் கட்சியின் அசைவுகளுக்கு ஏற்ப ஆடத் தொடங்குவது ஆபத்தானது. இத்தகு நிலைப்பாட்டை எடுத்த கோவா மாநில அரசின் நடவடிக்கைகள் எரிச்சலை ஏற்படுத்துகின்றன என்று நீதிபதிகள் இடித்துரை விதித்துள்ளனர். இத்தகு ஒருதலைப்பட்சமான நியமனங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் மிகத்தெளிவானத் தீர்ப்பைப் பிரகடனம் செய்துள்ளனர்.
இங்கு இந்நிகழ்வை மேற்கோளாய்ப் பார்ப்பதற்கான ஒரு முக்கியமான நிகழ்வைக் குறிப்பிடல் நலம். கடந்த 2019 மார்ச் 2 அன்று சென்னையில் எம்ஜிஆர் -ஜானகி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் ஒரு கருத்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. “அடுத்த தலைமுறை அரசியல் தலைவர்கள்” என்ற அமைப்பும், அதனுடன் சன்சத் ரத்னா விருது வழங்கும் குழுவும் இவற்றின் தாய் அமைப்பான ‘ப்ரீசென்ஸ்’ எனும் நிறுவனமும் ஒருங்கிணைந்து இந்த கருத்துரையாடல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தன. பிரைம் பாயின்ட் சீனிவாசன் ஏற்பாட்டில் நடந்த விழா இது. இவ்வமைப்பில் அடியேனும் ஒரு பொறுப்பாளர். “16-ம் மக்களவை மீதான ஒரு பார்வை, பொதுத் தேர்தல்களில் மக்கள் சமுதாயத்தின் பங்களிப்பு” ஆகிய தலைப்புகளின்படி இந்த நிகழ்ச்சி நடந்தது.
இந்தியத் தலைமைத் தேர்தல் கமிஷனராக இருந்து ஓய்வு பெற்ற என்.கோபாலசாமியுடன் இந்த தலைப்புகளின்படி நான் உரையாடுவது என்பதுதான் ஏற்பாடு. இந்த நிகழ்ச்சி முழுவதும் இன்றும் யூ டியூப் வழியே காண முடியும். அதில் எங்கள் இருவருக்கு இடையே முழுக்க முழுக்க ஆக்கப்பூர்வமான விவாதங்களே நடந்தன. அரங்கினரின் கேள்விகளுக்கான விளக்கங்களும் கிட்டின.
அப்போது என்.கோபாலசாமியிடம் நான் எழுப்பிய பல ஐயப்பாடுகளில் சிலவற்றினை இங்கே குறிப்பிடல் நலம். இது தீர்ப்பின் சாராம்சத்துடன் இயைந்து வருவதை உணர முடியும். என் கருத்துக்களை இங்கே அடுக்கித் தொடுக்க விரும்புகிறேன்.
“ஒவ்வொரு மாநிலத்திலும் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ. தேர்தல்களை நடத்திட மாநில அளவில் தலைமைத் தேர்தல் அதிகாரி நியமிக்கப்பட்டு வருகிறார். இவரை நியமனம் செய்வது இந்தியத் தேர்தல் ஆணையம் தான். எனினும் மாநில அரசு பரிந்துரை செய்து அனுப்பும் மூன்று பேர் கொண்ட பட்டியலில் இருந்து ஒருவரைத் தான் தேர்தல் ஆணையம் நியமனம் செய்யும். மாநில அரசு விரும்புகின்ற ஒருவரை பட்டியலில் சேர்த்துவிட்டு, நிராகரிக்கக் கூடிய தகுதிகளைக் கொண்ட இருவரையும் சேர்த்து அந்த பட்டியலைத் தான் இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பும். வேறு வழி இன்றி தேர்தல் ஆணையம் அந்தப் பட்டியலில் இருந்து தகுதியான ஒருவரைத் தேர்வு செய்யும். அது மாநில அரசு விரும்பக்கூடிய அதிகாரியாகத் தான் இருப்பார். இப்படிப்பட்ட அதிகாரியின் நேரடி நிர்வாகத்தில் மக்களவை, மாநிலச் சட்டமன்றப் பொதுத் தேர்தல்கள் நடந்தால் எதிர்க்கட்சிகளுக்கு உரிய ஜனநாயக மதிப்பு வழங்கப்படுமா?
நரேஷ் குப்தா போன்ற சில நடுநிலை நாயகர்களும் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரிகளாகக் கிட்டியது ஒரு பெரும்பேறு. தன் மீதான அழுத்தங்களையும் அவற்றை நெஞ்சுரத்துடன் சமாளித்த அவரின் அணுகுமுறையை அந்த நோஞ்சான் உடலர் என்னிடம் உருக்கமாக உரைத்திருக்கிறார்.
“இதேபோன்று ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்தவென்று மாநிலத் தேர்தல் ஆணையங்கள் உள்ளன. இவற்றுக்கு ஆணையராக நியமனம் செய்ய முதல் அமைச்சர் தான் முனைகிறார். இவர் தன் கட்சியின் நலனைப் பேணும் அதிகாரியாகத் தானே நியமிக்கச் செய்வார்? நியமனத்தில் எதிர்க் கட்சித் தலைவரின் பொறுப்பு இருப்பினும் அது ஆளும் கட்சியினரின் சமயோசித சூட்சுமத்திடம் தோற்றுப்போகும்.
இதே நிலைதான் ஒவ்வொரு மாநிலத்திலும் நடந்து வருகிறது. ஆகவே சமீப காலங்களில் மாநில ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் கட்சியின் வேட்பாளர்களே எளிதாக வெற்றிபெற்று விடும் சூழல் நிலவி வருகிறது. இதைத் தடுத்து நிறுத்தி எல்லா கட்சிகளையும் சம கண்ணோட்டத்துடன் பாவிக்கும் நடுநிலை அதிகாரியைத் தான் நியமனம் செய்ய வேண்டும்.
“அதேபோல ஒவ்வொரு மாநிலத்திலும் கூட்டுறவுச் சங்கங்களுக்கான தேர்தல்கள் நடக்கும். இவற்றை நடத்தும் அதிகாரிகள், அந்தந்த மாநில அரசை நடத்தும் ஆளும் கட்சியினரின் நேரடி நியமனத்தின்படி தான் வருகிறார்கள். இவர்கள் எப்படித் தேர்தல்களை நடத்துகிறார்கள் தெரியுமா?
அந்தந்த மாநில ஆளும் கட்சியின் மாவட்டச் செயலாளர் கொடுக்கும் பெயர்களுக்குரியோரே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் சூழல் உள்ளது. ஜனநாயகம் கேலிக்கூத்தாகி வருகின்றது.
பல்லாண்டு காலம் உள்ளட்சித் தேர்தலே நடக்காமல் இருந்த நிலையில், எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த ப.உ.சண்முகம் தான் தேர்தல் நடவடிக்கைகளை முடுக்கி விட்டார். இந்த தேர்தல்களில் அதிமுகவினரை விட திமுகவினர் தான் பெருவாரியான அளவில் வெற்றி பெற்றனர். அத்தகைய நடுநிலையான தேர்தல் நடைமுறை மீண்டும் வராதா? மீண்டு வராதா? இந்த ஏக்கம் தான் இதயத்தில் தேங்கிக் கிடக்கிறது.
ஐ.ஏ.எஸ். மற்றும் அதன் இணை போக்கான சிவில் சர்வீஸ் தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. இவற்றின் மூலம் தான் ஐ.ஏ.எஸ். மட்டுமின்றி ஐ.பி.எஸ், ஐ.எப்.எஸ், ஐ.ஈ.எஸ் என நாட்டை நிர்வகிக்கும் பல்வேறு பணிகளுக்கு அதிலுள்ளவர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். இதே வரிசையில் தேர்தல் அலுவலர்கள் என்ற தகுதிக்கும் தேசிய அளவில் சிவில் சர்வீஸ் அதிகாரிகளைத் தேர்வு செய்ய வேண்டும்.
இந்த பட்டியலில் இருந்து தேர்தல் அலுவலர்களை நியமனம் செய்தால்… இவர்கள் அனைத்து கட்சிகளையும் ஒரே கண்ணோட்டத்துடன் பார்த்துக் கொள்வார்கள் அல்லவா? இப்படித்தான் என் கருத்து வெளியானது.
இதற்குப் பதில் அளித்த என்.கோபால்சாமி, “இவையெல்லாம் கேட்பதற்கு நன்றாகத் தான் இருக்கின்றன. எந்த ஆட்சியாளர்கள் இதை ஏற்று நடைமுறைப்படுத்துவார்கள்? தன் நிலை தாழ்ந்தாலும் பரவாயில்லை, ஜனநாயகம் ஜடமாகிவிடக் கூடாது” என்று நெகிழ்வுடன் குறிப்பிட்டார். இந்த கருத்தை நடைமுறைக்குக் கொண்டு வரக்கூடிய ஜனநாயக நிஜ நாயகன் எப்போது வருவாரோ?
நூருல்லா ஆர்.
ஊடகன் 9655578786